அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அரசியமைப்பில் 18வது திருத்தம் ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலையப்படுத்திக்கொள்ளும் வகையிலேயே அரசியலமைப்பின் 18வது திருத்தத்தைக் கொண்டு வந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை பொருளாதாரத் திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை தாம் நிலை நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நிதி நிறுவனங்கள் மத்தியில் எமது மஹிந்த சிந்தனைக்கொள்கை பிரபலமடைந்துள்ளன. சில சர்வதேச பல்கலைக்கழகங்களும் அதனை ஆய்வு செய்கின்றன என குறிப்பிடப்பட்ட ஜனாதிபதி நாட்டின் முன்னேற்றத்திற்கு இத்தகைய சிந்தனைகளின் அவசியம் குறித்து சீன உப ஜனாதிபதி வெளியிட்டுள்ள கூற்றையும் வெளியிட்டார்.

கூட்டுறவுக் காப்புறுதிக்கான புதிய கட்டடம் நேற்று கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கூட்டுறவுக் காப்புறுதி நிறுவனம் இன்று முதல் புதிய கட்டடத்தில் இயங்கப்போகின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கூட்டுறவுத்துறை தொடர்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற வகையிலும் வறுமை, இல்லாமையை இல்லாதொழிக்க கூட்டுறவுத்துறை பங்களிப்புச் செய்துள்ளது என்ற வகையிலும் புதிய கட்டடத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பில் பெருமிதமடைகின்றேன்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் மோசமான நிலை நிலவிய காலகட்டத்தில் மக்களுக்கு உணவு விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு கூட்டுறவுச் சங்கங்களையே உபயோகிக்க நேர்ந்தது. இவை இப்போது பலருக்கு மறந்துவிட்டது. அந்த யுகத்தை கடந்தே நாம் வந்துள்ளோம்.

எம்மால் முடியாது என்று ஒன்றுமில்லை. முடியாது என்பதை நாம் நம்பப்போவது மில்லை. குறிப்பாகக் கூட்டுறவுத்துறையை முன்னேற்றும் நடவடிக்கையில் முடியாது என்று சொல்ல முடியாது. கூட்டுறவுத்துறை மீது வைக்கும் நம்பிக்கை மக்கள் மீது வைக்கும் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை மேலும் பலப்படுத்தப்படுவது முக்கியம்.

தற்போது கூட்டுறவுத்துறை முன்னேற்றம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் அடங்கிய ஆலோசனை எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். திறைசேரியுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வொன்றை முன்னெடுத்து அதனை நடைமுறைப்படுத்த நாம் கவனம் செலுத்துவோம்.

நாம் கூட்டுறவுத்துறை தொடர்பில் அதிக சலுகைகள் வழங்கியுள்ளோம். வருமான வரியிலிருந்து விடுவித்துள்ளோம். சாதாரணமாகவே வரிவிலக்கு செய்கின்ற நிறுவனங்கள் உள்ளன. தனியார் அல்லது முதலீட்டுச் சபை நிறுவனங்கள் ஐந்து அல்லது 10 வருடங்கள் நாம் வரிவிலக்கு வழங்குவோம்.

இவ்வாறு ஒரு காலத்தைக் குறிப்பிட்டு இத்தகைய சலுகைகளை வழங்கும் போது அந்த காலம் முடிவடைந்ததும் அதற்கான நடவடிக்கைகளை மீள முறைப்படுத்த வேண்டியது முக்கியம். அரசுக்கு வரி கிட்ட வேண்டும். இல்லாவிட்டால் நட்டத்தையே எதிர் நோக்க நேரும். எனினும் கூட்டுறவுத்துறைக்கு கால அவகாசம் இன்றி முழுமையான வரி விலக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலர் கூட்டுறவுத்துறை மீது நம்பிக்கை வைக்காது அதனை தனியார் மயப்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டனர். நாம் தனியார் துறை மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று குறிப்பிடவில்லை. எனினும் தனியார் துறையுடன் போட்டி போட்டுச் செயற்படக்கூடிய கூட்டுறவுத்துறையை தனியாருக்கு வழங்குவது முறையல்ல.

அரச நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் இயங்க வேண்டும். அதுதான் அவர்களுக்கும் எமக்குமிடையிலான அரசியல் வித்தியாசம். எமது பொருளாதாரம் இப்போது பலமடைந்துள்ளமைக்குக் காரணம் இதுதான்.

நாம் பத்து வருடங்களுக்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துள்ளோம். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அரசியல் ஸ்திரத்தன் மையைக் கட்டியெழுப்பியுள்ளோம்.

இதற்காகவே நாம் அரசியலமை ப்பின் 18வது சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தோம்.

பெரும்பாலான அரசாங்கங்கள் முதல் ஐந்து வருடத்தைக் கடந்து இரண்டாம் தவணை ஐந்து வருடத்தில் மூன்று வருடங்கள் முடியும் போது அங்கு உள்ளக நெருக்கடிகள் எழும். “அவ்வாறானால் நாட்டைக் கட்டியெழுப் புவது கடினம்” மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பவே என்னிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாம் அபிவிருத்தியைத் தொடங்கினோம். இத்தருணத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் அவசியமானது. இதனை அமெரிக்க ‘மெகசின்’ ஒன்று வரவேற்றுள்ளது. எமது அரசியல் ஸ்திரத்தன்மையினால் வர்த்தக முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டுள்ளதுடன் முதலீட்டுக்கான சிறந்த நாடு இலங்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு நாட்டிலும் அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது. அதனை நாம் ஏற்படுத்தினோம் அதன் மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் போது முன்னோக்கிய எமது பயணம் பலமடையும் என்பது எமது நம்பிக்கை.

அன்றைய காலகட்டம் போலன்றி இப்போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது எமது வெளிநாட்டுக் கையிருப்பு - 10 மில்லியன் அமெரிக்கன் டொலராகவுள்ளது. நாம் பதவியேற்ற போது இது 2 மில்லியன் டொலராகவே இருந்தது. இந்த நிலமைகளை உணர்ந்துகொள்ள வேண்டும். எம்மால் இந்த நிலையை உருவாக்க முடிந்துள்ளது.

நாம் முன்னோக்கிப் பயணிக்கின்றோம். இப்பயணத்தின் பத்தாண்டுகளுக்குப் பிறகு 10வது வரவு செலவுத்திட்டத்தில் நாம் இலாபங்களைப் பகிர்ந்தளித்துள்ளோம். நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் அது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம், எரிபொருள் விலை, எரிவாயுவின் விலை போன்றவற்றைக் குறைந்துள்ளதன் மூலம் இதன் பிரதிபலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது.

இதனைச் செய்ய முடியாது என்றவர்களுக்கு இது ‘மெஜிக்’ ஆகவே தெரியும். எனினும் எமக்கு அது மெஜிக் இல்லை. எம்மால் முடியும் என்ற நம்பிக்கை எம்மிடமுள்ளது. அதனை நாம் செய்து காட்டியுள்ளோம்.

இந்த வேலைத்திட்டங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்வது அவசியமாகிறது.

நான் இம்முறை வரவு செலவுத்திட்ட உரையில் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளது போல் அறிவு, திறமை மிக்க அறிவின் கேந்திரமாக நாட்டையும் நபர்களையும் மாற்றுவதே எமது நோக்கம். எதிர்கால சந்ததியினரைக் கவனத்தில் கொண்டே எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

நாட்டில் அனைவருக்கும் இப்போது மின்சாரம் உள்ளது. காபட் வீதி கிடையாது கிராமங்களே இல்லை. நாட்டின் சனத்தொகையை விட தொலைபேசிகள் அதிகமாக உள்ளன. தொலைபேசிகளை பெற்றுக்கொள்ள ‘கியூ’ வரிசையில் நின்ற காலம் இருந்தது. இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடும் உலகமும் முன்னேற்றமடையும் போது நாமும் முன்னேற வேண்டியது அவசியம். எனினும் நாம் தமதான தேசிய பொருளாதாரத்தையே முன்னேற்ற வேண்டுமேன தவிர வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யும் பொருளாதாரத் தையல்ல.

இதனை சிந்தனையில் கொண்டு எமக்கான தேசிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கிக்கொண்டு முன் செல்ல வேண்டும். அதையே நாம் செய்துள்ளோம். சிலரால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.

இப்போது பெருமளவு சர்வதேச நிறுவனங்கள் மஹிந்த சிந்தனை பற்றி பேசுகின்றன. சில தேசிய, சர்வதேச பல்கலைக்கழகங்கள் மஹிந்த சிந்தனை பற்றி ஆராய்கின்றன. சீன உப ஜனாதிபதி இது பற்றிக் குறிப்பிடுகையில், “நாட்டுக்கு சிந்தனையொன்று இருக்குமானால் அந்த நாடு முன்னேற்றமடைவது உறுதி” என்று கூறியுள்ளார்.

அத்தகையதொரு தரிசனத்துடனேயே நாம் பயணிக்கின்றோம். இதனால்தான் எமக்கு இத்தகைய முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளது. என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இறுதியில் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கு ஜனாதிபதி வழங்கிய ஒத்துழைப்பினை கெளரவித்து அவருக்கு நினைவுச் சின்னமொன்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வினால் வழங்கப்பட்டது. 
(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :