கிழக்கின் இளம் அரசியல் விடிவெள்ளி மர்ஹூம் ரிஸ்வி சின்னலெவ்வை

எஸ்.எம்.அறூஸ்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஹமட் ரிஸ்வி சின்னலெவ்வை அவர்கள் மறைந்த 13வது நினைவு தினம் (2014.10.02) இன்றாகும்.

மிக இளம் வயதிலேயே முஸ்லிம் மக்களின் எதிர்கால நலன்மீது அதிக அக்கரை கொண்டிருந்த ரிஸ்வி சின்னலெவ்வையின்; இழப்பு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அரசியல் குடும்பமொன்றி;ல் 1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ம் திகதி சாய்ந்தமருதில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையிலும் உயர்கல்வியை குருத்தலாவ சென்.தோமஸ் கல்லூரியிலும் கற்ற பின்னர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கற்று பொறியியலாளரானார்.

ரிஸ்வி அட்டாளைச்சேனையி;ல் பிரபல மிக்க அரசியல் குடும்பமொன்றில் திருமணம் செய்து கொண்டார். முன்னாள் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜலால்தீனின் சகோதரியின் மகளையே திருமணம் செய்தார். அவருக்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உள்ளனர்.

இவரின் கல்வி வாழ்க்கையிலும் அரசியல் சிறப்பம்சம் பெற்று விளங்கியது. இவருக்கு 26 வயதாக இருக்கும் போதுதான் இளம் வயதிலேயே பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புக் கிட்டியது.

1985ம் ஆண்டு மட்டக்களப்பின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான பரீத் மீராலெப்பை காலமானதும் ஐக்கிய தேசியக் கட்சி ரிஸ்வி சின்னலெப்பையை நியமன எம்.பி.யாக நியமித்தது.

சாய்ந்தமருதி;ல் பிறந்து அட்டாளைச்சேனையில் திருமணம் முடித்து மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியம் ரிஸ்விக்குக் கிடைத்தது. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ரிஸ்விக்கு அட்டாளைச்சேனை மக்கள் அமோக வரவேற்பு அளித்ததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.

1989ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் மூன்றாவது தலைமுறை பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும், சாதனையையும் பெற்றார்.இது இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். சின்னலெவ்வை, லத்திப் சின்னலெவ்வை, ரிஸ்வி சின்னலெவ்வை என தடம் பதித்தார்கள்.

ரிஸ்வியின் சாதனையை இன்று மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பமும் பெற்றுள்ளது. டி.ஏ.ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ என மூன்றாவது தலைமுறை பாராளுமன்ற அரசியல் அந்தஸ்துக் கிடைத்துள்ளது.

தன்னுடைய மூன்று வருட பாராளுமன்ற அரசியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் கல்வி,கலாசார,சமூக அபிவிருத்திப் பணிகளில் கூடிய கரிசினை காட்டினார். மட்டக்களப்பில் அதுவரை கிடைக்கப்பெறாத பல பிரதேச சபைகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு, புதிய குடியேற்றக் கிராமங்களையும் உருவாக்கினார்

தன்னுடைய அரசியல் நடவடிக்கைகள் சமூகத்தின் மீதுள்ள அக்கரை, சேவை மனப்பாங்கு இவைகள் தேசிய மட்டத்தில் முன்னடுக்கப்பட வேண்டும் என நினைத்த ரிஸ்வி சின்னலெவ்வை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியோடு இணைந்து செயலாற்றினார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசியத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இவர் தேசிய முஸ்லிம் இயக்கமொன்றில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவரானது இதுதான் முதற்தடவையாகும்.

தனக்குக் கிடைத்த தலைமைப் பதவியின் மூலம் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஊடாக எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்று பல திட்டங்களை ஆரம்பித்து செயற்படுத்தினார். அத்தோடு முஸ்லீம் லீக்கை நாடு பூராகவும் கட்டியெழுப்புவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியி;ன் முதன்மை வேட்பாளராக மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரின் தோல்விக்கு முக்கிய காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரவு மக்கள் மத்தியில் அலைபோல பரவியதாகும்.

இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் வாழைச்சேனை கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ரிஸ்வி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். 1990ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட சந்தர்ப்த்தில் முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அப்துல் மஜீதுடன் இணைந்து அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதில் முன்னின்று செயற்பட்டார்.

தனக்குக் கிடைத்த பதவிகள் மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்,முஸ்லிம்களுக்கு பெரும் சேவையாற்றிய ரிஸ்வி தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும்; புரிந்துணர்வுடனும் வாழ்வதற்கு அரும் பாடுபட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்த போதிலும் அம்பாரை மாவட்டத்திற்கும் தன்னால் இயன்ற பணிகளைச் செய்தார். இதன் காரணமாக அம்பாரை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ரிஸ்வி சின்னலெவ்வை அம்பாரை மாவட்டத்தில் வந்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என அழைத்தனர்.

ஆதரவாளர்களின் அழைப்பினை ஏற்று அம்பாரை மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கையினை ஆரம்பித்தார். இந்த சந்தர்ப்பத்தில் அம்பாரை மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான சிங்களவர்களின் ஆதரவையும் பெற்றார். ரிஸ்வி அம்பாரை மாவட்டத்தில் ஆமோகமாக வென்று வடுவார் எனப்பயந்த சிங்கள அரசியல் வாதிகள் ரிஸ்வியின் வரவை எதிர்த்தனர்.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு போகும் சிங்கள அரசியல் வாதிகள் ரிஸ்வியூடாக முஸ்லிம் ஒருவர் வென்று விடுவார் என இனவாதத்தை விதைக்க ஆரம்பித்தனர்.

இதனை மாற்றியமைக்க வேண்டும் எனக்கருதிய ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தி அம்பாரை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறவேண்டும் எனச்சிந்தித்தார். உடனடியாக மர்ஹூம் அஸ்ரபோடு பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து கொண்டார்.

தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சகிதம் சுமார் 60 வாகனங்களி;ல் கொழும்பு சென்று முஸ்லிம் காங்கிரசோடு ரிஸ்வி இணைந்து கொண்டார். இந்த விடயம் இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ரிஸ்வி தன்னுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.உதுமாலெப்பையையும் தனது தந்தையான லத்திப் சின்னலெப்பையையும் கூடவே அழைத்துச் சென்றிருந்தார்.

கொழும்பு டரான்பரன்ஸி ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் மர்ஹூம் அஸ்ரப் பேசும்போது, இனி எனக்குக் கவலைகள் இல்லை அம்பாரை மாவட்டத்தில் நாம் இழந்து போன மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிச்சயம் பெற்றெடுப்போம். ரிஸ்வியின் வரவு அதனை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

அந்தளவிற்கு ரிஸ்வியின் ஆளுமையில் அஸ்ரபுக்கு நம்பிக்கை இருந்தது. 2000ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியல் வேட்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

அதுமட்டுமல்ல அஸ்ரப் மரணிப்பதற்கு முதல் அம்பாரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரிஸ்வி நிச்சயம் பாராளுமன்றம் செல்வார். அத்தோடு தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கல்முனைத் தொகுதியையும் ரிஸ்வியிடமே ஒப்படைக்கின்றேன் என அஸ்ரப் கூறியதற்கமைய தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ரிஸ்வியை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கினார்.

சாய்ந்தமருதுக்கென தனிப் பிரதேச செயலகத்தை ஆக்குவதில் அஸ்ரபோடு முழு மூச்சாக நின்று செயற்பட்டவர் மர்ஹூம் ரிஸ்வி சின்னலெப்பையாகும். அது மாத்திரமல்ல அஸ்ரபின் கனவான அம்பாரைக் கரையோரக் கச்சேரியைப் பெறுவதற்காக பல முயற்சிகளை ரிஸ்வி மேற்கொண்டிருந்தார். அது வெற்றி பெறப்போகின்ற சந்தர்ப்பத்தில் இனவாதிகளின் கடும்போக்குவாத முட்டுக்கட்டைகளும் அதனை இல்லாமலாக்கியது.

பல்கலைக் கழகங்களில் படித்துவிட்டு தொழில் இல்லாமல் கஸ்டப்பட்ட பலருக்கும் தொழி;ல் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையி;ல் வசந்தத்தை ஏற்படுத்தினார். அட்டாளைச்சேனை பொது நூலகத்தை எவருமே கண்டு கொள்ளாத சந்தர்ப்பத்தில் பல லட்சம் ரூபாய் நிதிகளை ஒதுக்கி மாணவர்களுக்கான புத்தகங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்கின்ற தாராள மனம் படைத்தவர் இவர்.


இவ்வாறு பல்வேறுபட்ட பணிகளை ஆற்றிய ரிஸ்வி சின்னலெவ்வை எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகவியலாளர்களுடன் நட்புடனேயே பழகுவார். ஊடகவியலாளர்களின் பணிகளை மதிக்கின்ற ஒருவராகவும் அவர்களுக்கு உதவி செய்கின்ற ஒருவராகவும் காணப்பட்டார்.

இன்று இருக்கின்ற அரசியல் வாதிகள் தங்களது காரியம் முடியும் மட்டும் ஊடகவியலாளர்களோடு நட்பாக இருந்துவிட்டு அதிகாரம் கிடைத்ததும் அவர்களை மிதித்து விட்டுச் செல்லுகின்றனர். ஊடக வெளிப்படத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

ஆனால் ரிஸ்வி தனக்கு எதிரான கருத்துக்களை ஊடகவியலாளர்கள் எழுதினாலும் அதனை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பார்.அது மட்டுமல்ல சிரேஸ்ட ஊடகவியலாளர்களை கௌரவித்து வாழ்த்த வேண்டும் என்கின்ற விருப்பம் கொண்டவர்;. அதனால்தான் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படும் நிகழ்வுகளிற்கு தவறாமல் சமூகமளிப்பார்.

மர்ஹூம் அஸ்ரபின் மறைவின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதில் பல வழிகளிலும் முன்னின்று செயற்பட்டார். தனது பொரளை வீட்டை கட்சிக் காரியாலயமாக பாவிப்பற்கு தலைவருக்கு அனுமதியளித்தார்.

தான் மரணிக்கும் தருவாயில் வைத்தியசாலையில் வைத்து ஹக்கீமுடன் உரையாடும் போது, முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துங்கள் என்றுதான் கூறியிருக்கின்றார். அந்தளவிற்கு இந்தக்கட்சியின் மீது அதீத பற்று ரிஸ்விக்கு இருந்தது.

சமாதானத்தை எப்போதும் விரும்பிய இவர் வடகிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல முன்னர் இருந்த நிலை தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர்.

ரிஸ்வி இருந்திருந்தால் இன்றைய சமாதான சூழ்நிலையி;;ல் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்த அரசியலுக்கு தனது பங்களிப்பினை பெரிதும் வழங்கியிருப்பார் என்பதி;ல் எவ்வித ஐயமுமி;ல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :