நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு பொதுபலசேனாவை ஊக்குவித்து தனது நோக்கத்தை அடைய நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொதுபலசேனா கட்சி மக்களுக்கிடையில் உள்ள இன ஐக்கியத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. தமிழ் மக்களிடம் சிநேகபூர்வமாக உள்ளது.
தற்போது தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். இனப்பிரச்சினையை தீர்க்க ஆதரவு வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம் பாதிக்கப்படுவது தமிழ் கூட்டமைப்பல்ல வட பகுதி தமிழ் மக்களே என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு வாக்கு அதிகரிப்புக்கான காரணம் மக்களின் பொருளாதாரப் பிரச்சினை, ஊழல் மோசடி, வீண்செலவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமை.
ஐ.தே.கட்சி என்னதான் கூறினாலும் அவர்களால் ஒருநாளும் ஆட்சிக்கு வர முடியாது.
அதேநேரம் இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும். என்பதில் லங்கா சமசமாஜ கட்சி உறுதியாக உள்ளது.
இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க மேற்குலக நாடுகள் மறைமுக முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த நாட்டில் ஐ.தே.கட்சியை ஆட்சியில் அமர்த்தி தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
மேற்குலக நாடுகள் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என மேலும் கூறினார்.
.jpg)
0 comments :
Post a Comment