மக்களின் பலத்தை அதிகரிப்பதே இனி நாம் செய்ய வேண்டிய பணியாகும்-JVP

நாட்டில் ஆட்சி மாற்றத்தினை தீர்மானிக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. ஊவாவில் நல்லதொரு சமிக்ஞையினை மக்கள் எமக்கு கொடுத்துள்ளனர். மக்களின் பலத்தை அதிகரிப்பதே இனி நாம் செய்ய வேண்டிய பணியாகும் என்று தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக ஊவா மாகாண தேர்தல் தொடர்பில் விமர்சிப்பதை விடவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜே.வி.பி. யின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

ஊவா மாகாண சபைத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளின் பலத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர். அரசாங்கம் தமது வெற்றி உறுதியாகியுள்ளதென்ற மகிழ்ச்சியில் இருந்தாலும் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் மிக மோசமான பெறுபேற்றினையே பெற்றுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடத்திய ஊவா தேர்தலில் அரசாங்கம் பின்னடைவினையே சந்தித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களில் இறுதியானதும் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை பரிசீலனை செய்து பார்க்கும் தேர்தலாகவும் நடத்தப்பட்ட ஊவா தேர்தலில் அரசாங்கத்தை விடவும் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளது.

மக்கள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, மக்களை முழுமையாக எம் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் குரல் கொடுக்கும் கட்சி. இப்போது நாட்டினையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. எனவே அதற்காகவும் இந்த இராணுவ ஆட்சியினை மாற்றியமைப்பதற்காகவும் நாம் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் நல்ல சமிக்ஞையினை மக்கள் எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும். ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விமர்சிப்பதை விடவும் அடுத்த கட்ட ஆட்சி மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். எனவே வெகு விரைவில் ஜே.வி.பி. தனது திட்டங்களை வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :