நாட்டுக்கு பொது வேட்பாளர் தேவையில்லை. தேசியத் தலைமைத்துவமே தேவை. அத்தலைவர் எவ்வாறான குணாதிசயங்களுடன் இருக்க வேண்டுமென்பதை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3000 பிக்குமார்களுக்கு மத்தியில் பகிரங்கமாக அறிவிப்போம் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இலங்கையை கட்டியெழுப்பியவர்கள் இந்நாட்டு சொந்தக்காரர்களான சிங்களவர்கள். இது தெரியாதவர்கள் பொது வேட்பாளர்களாக முடியாது என்றும் தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாட்டில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் இன்று ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான விவாதம் தலைதூக்கியுள்ளது. இத்தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. பொது வேட்பாளருக்கு வலை வீசுகின்றனர். நாடு இன்று பயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்நாட்டை கட்டியெழுப்பியவர்கள் இந்நாட்டு சொந்தக்காரர்களான சிங்கள பெளத்தர்கள். இந்த வரலாற்று உண்மை தெரியாதவர்கள் பொது வேட்பாளராக வர முடியாது. சிங்கள பெளத்தர்களுக்கு எதிரான சக்திகள் நாட்டுக்குள் தலைதூக்கியுள்ளன.
இச்சக்திகளை ஒழித்துக்கட்டி நாட்டையும் சிங்கள பெளத்தர்களையும் பாதுகாக்கக்கூடிய தேசிய தலைமைத்துவமே இன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றது. அவ்வாறான ஒரு தலைமைத்துவத்துக்கே இந்நாடு கையளிக்கப்பட வேண்டும். தேசியத் தலைமைத்துவம் எவ்வாறு இருக்க வேண்டும். என்னென்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும் என்ற விபரங்கள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருவதோடு திட்டங்களை தயாரித்து வருகின்றோம்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் கொழும்பில் 3000 பெளத்த குருமார் கலந்து கொள்ளும் எமது அமைப்பின் மாபெரும் மாநாடு நடத்தப் படவுள்ளது. இதன்போது தேசியத்தலைமைத்துவம் தொடர்பில் எமது தீர்மானத்தை பகிரங்கமாக அறிவிப்போம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment