பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையினால் பெரும் சர்ச்சை
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை அவதூறுக்கு உட்படுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த கட்டுரையை வெளியிட்டமைக்காக இலங்கை அரசாங்கம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டுமென இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறுக்கு உட்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிர்ஒலித்துள்ளது. இதனையடுத்து இலங்கை அரசாங்கம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நேற்று வெளியான கட்டுரையில்,
"சர்வதேச எல்லையை கடந்து வந்து இலங்கை எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட படகுகள் மற்றும் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததால் தமிழக கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லை தாண்டி வந்து அடுத்த நாட்டின் மீன்களை கொள்ளையடித்துச் செல்வது எந்த வகையில் நியாயமானதாகும்.
தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள் வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நலனை மட்டுமே கருதும் தமிழக மீனவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் நலனை நினைத்து பார்ப்பதில்லை.
இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
ஒருவேளை அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ? 1876ம் ஆண்டிலிருந்தே கச்சதீவு இலங்கைக்கு தான் சொந்தம். இதை ஆங்கிலேய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
இருப்பினும், 1924ம் ஆண்டு முதல் கச்சதீவு தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி தமிழக அரசு அதனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார்.
ஆனால் ஜெயலலிதாவின் தாளங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே தமது அரசு விரும்புவதாக மோடி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடிதம்
இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிட்டதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டுமென்று இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவதூறான கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை இழிவுபடுத்தும் வகையில் அக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் அதிருப்தியை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
மன்னிப்பு கோரியது இலங்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில்,
“சர்ச்சைக்குரிய கட்டுரை மற்றும் படம் உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரை இலங்கை அரசு அல்லது பாதுகாப்புத்துறையின் நிலையை பிரதிபலிக்கவில்லை. அந்த கட்டுரை இப்போது நீக்கப்பட்டுவிட்டது. இந்த கட்டுரை வெளியானதற்காக இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் வினவியபோது
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து வெ ளியான கட்டுரை தொடர்பில் நாம் மன்னிப்புக் கோரியுள்ளோம்.
எமது பக்கத்தில் தவறு நடந்துள்ளது. இந்தக் கட்டுரையையும் நீக்கிவிட்டோம். நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


0 comments :
Post a Comment