சவூதி அரேபியாவில் 2013 ஆம் ஆண்டு இறந்த கல்முனைப் பிரதேச பெண்ணுக்கான நஷ்ட ஈடு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
பிரஸ்தாப நஷ்ட ஈடு கணவரான காத்தமுத்து வேதானந்தத்திற்கு 2 இலட்சம் ரூபாவும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கணபதிபிள்ளை ரமணி குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்று 2013 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக இறந்து உடல் 10 மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டமை தெரிந்ததே.
காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித் தாபனம் மேற்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக இப்பிரேதம் உரியவர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் இன்று நஷ்ட ஈடும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அவர்களுக்கு தமது மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று குடும்பத்தினர் காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித் தாபன அலுவலகத்திற்கு நேரடியாக வந்து இணைப்பாளர் பி. ஸ்ரீகாந்திற்கும் தொடர்புபட்ட உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுவதாகக் கூறிக் கொண்டு பல தாபனங்கள் இருந்தும் ஆக மனித அபிவிருத்தித் தாபனம் மட்டுமே எமது விடயத்தில் ஆரம்பமிருந்து இறுதி வரை காத்திரமாக உதவி வழங்கியதோடு நஷ்ட ஈட்டையும் பெற்றுத் தந்துள்ளனர் என்று அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment