பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தியதன் மூலம் இலங்கை சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து 88 பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிலையத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
புகலிடம் கோரி வருவோரை பலவந்தமாக திருப்பி அனுப்புவதில்லை என்ற கொள்கையுடன் அனைத்து நாடுகளும் இணங்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை இலங்கை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 84 பாகிஸ்தான் பிரஜைகளும், 71 ஆப்கானிஸ்தான் பிரஜைகளும், இரண்டு ஈரான் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இலங்கை மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை மாத்திரம் 308 புகலிடக் கோரிக்கையாளர்களும், 1,560 அகதி அந்தஸ்த்து கோருவோரும் இலங்கைக்கு வந்திருந்ததாக அமைச்சின் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.n1st

0 comments :
Post a Comment