இலங்கையின் அரசியலமைப்பை மீறி தேசத்துரோக செயல்களில் ஈடுபடும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய விடுதலைப்புலிகள் செய்த கொலைகள் தொடர்பான சாட்சியங்களை கூட்டமைப்பினர் முதலில் தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
ஐ.நா. மனித உரிமைஆணைக்குழுவின் சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க விரும்புவோர் தம்மை நாடினால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் சம்பந்தன் எம்.பி. யின் யுத்த கால பாராளுமன்ற உரைகளின் அறிக்கையை தமது பக்க சாட்சியங்களாக விசாரணைக்குழுவுக்கு கையளிக்கவுள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தகவல் தருகையில்;
வெள்ளமுள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு முன்பதாக தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம் யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சாம்தம்பி முத்து உட்பட தமிழ் தலைவர்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்த விடுதலைப்புலிகள் தொடர்பான சாட்சியங்களை தேட வேண்டும்.
எமது இராணுவத்தினர் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதற்கு முன்பதாக புலிகள் செய்த கொலைகளை பட்டியலிடுங்கள். அச் சாட்சியங்களை சர்வதேச விசாரணைக்குழுவிடம் வழங்குங்கள்.
நவிப்பிள்ளை
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பானவர். அண்மையில் புலம்பெயர் தமிழர்களோடு இணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நவிப்பிள்ளைக்கு பொன்னாடை போர்த்தி மாபெரும் பிரியா விடை வைபவத்தை நடத்தினர்.
இதன்போது புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச விசாரணைக்குழுவுக்கு தமது ஆதரவையும் சாட்சியங்களையும் வழங்க வேண்டுமென நவிப்பிள்ளை தெரிவித்தார்.இதன் மூலம் நவிப்பிள்ளை பக்கச்சார்பானவரென்றும் அவர் நியமித்த சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்கு எதிரானதென்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு
எனவே, இவ்வாறான தேசத்துரோகமான சர்வதேச விசாரணை குழுவுக்கு கூட்டமைப்பினர் சாட்சியம் வழங்க முயற்சிப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். எனவே அரசாங்கம் கூட்டமைப்பினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விரிசல்
கூட்டமைப்பினரின் இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் சிங்கள மக்களிடையேயான நல்லுறவுகள் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாது இரு இனங்களிடையேயும் விரிசல் தலைதூக்குவதோடு பழிவாங்கும் மனோபாவங்களும் அதிகரிக்கும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment