நூலறிமுகம்
நூல் : நீலவேணி
நூலாசிரியர் : மட்டக்களப்பு நவம்
வெளியீடு : மித்ர ஆர்ட்ஸ் ரூ கிரியேனஷன்ஸ், தமிழ்நாடு.
நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்
மட்டக்களப்பு ஆரயம்பதி தந்த நவம் அவர்கள் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்ற பிரபலமான ஒரு இலக்கியவாதியாவார். சில காலங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரபல்யமான ஒரு எழுத்தாளராகவும், சிறந்த கதையாசிரியராகவும் இருந்து பல நூல்களை வெளியிட்டிருந்தார். அந்தவகையில் நீலவேணி எனும் எனும் நாவல் காணப்படுகின்றது. இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நாவல், அண்மையில் திருவாளர் நவம் அவர்களது புதல்வியை சந்தித்தபோது இப்புத்தகம் என் கைக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அவர் பற்றிய பல்வேறு தகவல்களையும் அறிந்து கொண்டேன்.
இவரை இலக்கிய உலகுக்கு தனது கையைப் பிடித்து அழைத்துச் சென்ற தன் குருநாதர் அமரர் திரு. எஸ்.டி. சிவநாயகம் அவர்களுக்கு சமர்ப்பிக்கும் இந்நூலின் முன்னீடு எனும் தலைப்பில் பிரபல எழுத்தாளரான எஸ்.பொ. அவர்கள் வழங்கியுள்ளார். விபுலாநந்தர் தமிழ் விளைந்த மண்ணின் மூத்த எழுத்தாளர் நவம் என்கிறார். நவம் தனது முன்னுரையில் தான் மலையகத்தில் ஆசிரியராக உலாவந்த காலத்தில் இந்த நீலவேணி உருவானாதாகவும், இதன் வித்து வீரகேசரி நாளிதழில் வெளிவந்த செய்தியே காரணமாக அமைந்ததாகவும் முன்னுரையில் விரிவாக எழுதுகின்றார்.
மேலும், தன்னுடைய முன்னுரையின் முத்தாப்புக்கு இவ்வாறான விபரங்களையும் தருகின்றார் திரு.நவம். “என் இலக்கிய வாழ்வில் என்னோடு உலாவந்தவர்கள் பலர். அவர்களில் மறக்க முடியாதவர்களில் மட்டக்களப்பின் பிரபல எழுத்தாளர் திரு. அன்புமணி யை மற்றும் பலரையும் நினைவுகூறுகின்றார்.
நீலவேணி கதையானது உண்மைச் சம்பவம் ஒன்றை பின்னணியாகக் கொண்டு வாழ்வியலின் சாயலில் உலாவரும் பல்வேறு சம்பவங்களை திடுக்கிடும்படியாக அமைவது பாராட்டுக்குரியது. 37 சிறுதலைப்புக்களில் நீலவேணியின் கதையோட்டம் செல்கிறது. நிழல் மனிதன் எனும் முதலாம் தலைப்புக்குள் கொலைகளமிக்க மர்மம் நிறைந்த பகுதிக்குள் செல்வதுபோலவே கதையம்சம் காணப்படுகின்றது.
பாரிஸ் நகரத்துத்து தேவதையாக வருகின்ற நாயகி, அவளோடு உறவாடத் துடிக்கும் தணிக்காசலம் அவரது மணைவியின் கொலை மர்மம், தொடரும் நிழல் மனிதன். இவர்களுக்கு மத்தியில் சுற்றிச் சுழலும் நீலவேணி எனும் அழகியின் பரிபாசங்கள், வரிக்குவரி விறுப்பான கதையோட்டம், அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வில் என்ன நடக்குமோ என்கிற எதிர்;பார்ப்புக்கள், கவர்ச்சியும், காமும் நிறைந்த வர்ணனைமிக்கதான வரிகள் இலங்கை மற்றும் பாரிஸ் நகரங்களின் மேம்படுத்தப்பட்ட தளங்கள் அனைத்துமே நீலவேணிக்கு உயிர் ஊட்டுகின்றது.
நவத்தின் சிறந்த கதையோட்டமிக்க நீலவேணி எனும் நாவலுக்கு பாலுமகேந்திரா, கவிஞர் காசி ஆனந்தன், கல்கி ராஜேந்திரன், அன்புமனி போன்றோர் நாவலின் பின்னட்டையில் அணிசேர்த்துள்ளமை இக்கதையின் சிறப்புக்கு ஒரு முத்தாப்பாய் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மர்மங்கள் நிறைந்த திகிலூட்டும் நீலவேணி நாவல், நவத்தின் எழுத்துக்கு ஆணிவேராக அமைந்துள்ளதுடன், இன்று ஆயிரம் விழுதுள்ள ஆலமரமாக, தான் வெளிநாட்டில் வாழ்ந்திருந்தாலும், தான் பிறந்து, வளர்ந்த பிரதேசத்தின் பண்பாடுகளை முழுமையாக மதித்தொழுகும் நவம் தள்ளாடும் வயதிலும் இன்றும் இலக்கியத்தின் காவலனாய் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்
.jpg)
0 comments :
Post a Comment