ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 3வது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்- கெஹெலிய

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். இது தொடர்பில் யாருக்கும் எதனையும் கூறும் ஜனநாயக உரிமை உள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிடம் இலங்கையில் உள்ளவர்கள் வழங்கவுள்ள சாட்சியங்களைக்கொண்டே அவை நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளதா? இல்லை என்று தீர்மானிக்க முடியும். எனவே அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கேள்வி. ஐ.தே. க. வின் மங்கள சமரவீர எம்.பி. ஐ.நா. விசாரணை குழுவிடம் சாட்சியமளிக்கப்போவதாக தெரிவித்துள்ளாரே? 

பதில் அவர் என்ன கூறப்போகின்றார் என்று பார்ப்போம். ஆனால் அவர் சர்வதேச நிபுணர் குழுவை விமர்சித்திருந்ததை நான் அவதானித்தேன். அதாவது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை பாதுகாக்கும் வகையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியாயின் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தண்டனை கிடைக்கும் வகையிலான நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும் என்று அவர் கூறுகின்றாரா? என்று கேட்கின்றோம். எம்மை பாதுகாக்கும் வகையில் ஆலோசனை குழுவை நியமிப்பது இயல்பானதாகும். 

கேள்வி ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கலாம் என்றும் சாட்சியமளிக்க விரும்புகின்றவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறும் கூட்டமைப்பு கூறியுள்ளதே? இதன் சட்டத்தன்மைகள் எவ்வாறு அமைந்துள்ளன? 

பதில் அவர்கள் சாட்சியமளித்த பின்னர் என்ன விடயங்களை சாட்சியத்தில் முன்வைக்கின்றனர் என்பதனை பொறுத்தே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதா? இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும். எனவே சாட்சியமளிக்கும்போது என்ன கூறுகின்றனர் என்று பார்ப்போம். 

இலங்கையானது உலகில் மிகவும் மிலேச்சத்தனமான அமைப்பையே யுத்தத்தில் தோற்கடித்தது. இது யுத்தம். எனவே யுத்தத்தின்போது 100 வீதம் அனைத்தும் பரிசுத்தமாக இருக்கும் என்று கருத முடியாது. இவ்வாறான நிலை உலகில் எங்கும் இருக்க முடியாது. அந்த வகையில் பார்க்கும்போது நாங்கள் சிறந்த இடத்தில் இருக்கின்றோம். 

கேள்வி பாகிஸ்தானிலிருந்து வந்த அகதி அந்தஸ்து கோருகின்றவர்களை திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் விமர்சித்துள்ளதே? இது ஐ.நா. விதிமுறையை மீறும் செயல் என்று கூறியுள்ளதே? 

பதில் அகதிகளுக்கான ஐ.நா. உ யர்ஸ்தானிகராலயத்தின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றோம். காரணம் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகதிகள் தொடர்பான சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனவே அதில் நாங்கள் உறுப்பினர் இல்லை. அந்தவகையில் இந்த விடயத்தில் நாங்கள் எதனையும் மீறவில்லை. 

கேள்வி மனிதாபிமான அடிப்படையில் இதனை அணுகலாமே? 
பதில் அவுஸ்திரேலியாவும் இதனைதானே செய்கின்றது? இதனால் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை. இரண்டு நாடுகளும் நட்பு நாடுகள். இது தொடர்பில் பேச்சு நடத்த வெளிவிவகார செயலர் பாகிஸ்தான் சென்றுள்ளார். சுற்றுலா வீசாவில் வந்து அகதி அந்தஸ்து கோர முடியுமா? 

கேள்வி பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக அமைச்சர் சிலர் மகாநாயக்க தேரரிடம் முறையிட்டுள்ளனரே? 
பதில் அது அவர்களின் உரிமை

கேள்வி ஈராக்கில் பிரச்சினை காணப்படுகின்ற இடங்களில் இலங்கையர்கள் சிக்கியுள்ளனரா? 
பதில் பிரச்சினை நிலவுகின்ற பகுதியிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இலங்கையர்கள் 282 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களின் தொழில் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு அதில் 37 பேர் இலங்கைக்கு வருகை தந்துவிட்டனர். ஏனயைவர்கள் அங்குள்ளனர். எனவே பிரச்சினை உள்ள பகுதிகளில் இலங்கையர்கள் யாராவது இருந்தால் நாம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

கேள்வி எபோலா நோய் விவகாரத்தினால் லைபீரியாவில் உள்ள இலங்கையர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் லைபீரியாவில் எந்த இலங்கையரும் இல்லை

கேள்வி அழகுக்கலை நிலைய விவகாரம் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதா? 
பதில் இது தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவிக்கவேண்டும். சில அழகுக்கலை நிலையங்களில் சத்திரசிகிச்சை பிரிவுகளும் உள்ளதாம். எனவே இது தொடர்பில் பரந்துபட்ட ரீதியில் விவாதங்கள் அவசியமாகும். 

கேள்வி ஜனாதிபதி மூன்றாவது தடவை போட்டியிட முடியாது என்றும் அதில் சட்டச் சிக்கல் உள்ளதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே? 
பதில் யாருக்கும் கருத்து வெளியிடம் உரிமை உள்ளது. 

கேள்வி அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 
பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். இதுவே எமது நிலைப்பாடாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :