தெளஹீத் ஜமாத் SLTJ, ITJ மோதல்! பொல்லைக் கொடுத்து அனைவரையும் அடிவாங்கச் செய்யாதீர்கள்



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

சாய்ந்தமருதில் இரு முஸ்லிம் குழுக்களிடையே அண்மையில் இடம்பெற்ற மோதல் இன்று தென்னிலங்கையில் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சிங்கள இனவாத கடுங்கோட்பாளர்களுக்கு இந்த விடயம் வாய்க்கு கிடைத்த தீனியாக மெல்லப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் ஏன் கிழக்கு மாகாணத்தின் சுறு சுறுப்பான அந்த அழகான சாய்ந்தமருது இன்று இவ்வாறானவர்களின் கழுகுக் கண்களின் எரி தணலாகவே போய்விட்டது. 

அனைத்துத் துறையிலும் முன்னேறிய இந்தப் பிரதேசம் அம்பாறை மாவட்டத்தின் முக வெற்றியாலையாக திகழ்ந்து கொண்டிருப்பதால் அதற்கு கண் திருஷ்டி பட்டு விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இரு குழுக்களிடையிலான மோதல்கள் என்பது இன்று பொல்லைக் கொடுத்து நாம் அடிவாங்கிய கதையாகப் போய் விட்டது வேதனையானதொரு விடயம்.

 கொழும்பில் நேற்று (04) ஹெல பொது சவிய என்ற பல சிங்கள அமைப்புகள் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் சாய்ந்தமருது என்ற சொல் உச்சரிக்கப்பட்டது. சந்தோஷமான உச்சரிப்பல்ல.. அது ஒரு வழியில் எச்சரிப்பது போன்றே இருந்தது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இங்கு உரையாற்றிய பௌத்த தேரர் ஒருவர், இலங்கையில் புத்தளம், காத்தான்குடி, கல்முனை போன்ற பல்வேறு நகரங்களில் அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருவதாகவும் மாலைதீவு உட்பட பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தோர் உல்லாசப் பிரயாணிகள் விசாவில் இங்கு குடும்பங்களாக வந்து இரகசியமாக புத்தளம், சாய்ந்தமருது மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

அவரால் கூறப்பட்ட பல விடயங்கள் இட்டுக் கட்டப்பட்டவைகளாக காணப்பட்டன. மேலும் பொதுபல சேனா மீது இன்று எழுந்துள்ள விமர்சனங்கள், அதிருப்திகளை மறைப்பதற்காக விடயங்களை வேறு திசைக்கு மாற்றவும் முஸ்லிம்கள் பக்கமே தவறுகள் உள்ளன என்பதனை வலிந்து காட்டவும் அந்தக் கூட்டத்தில் முயற்சிக்கப்பட்டதனை நான் அறிவேன். இந்த நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழக் கூடிய இடங்கள், அதிக பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், வர்த்தக நிலையங்கள், செல்வந்தர்களைக் கொண்ட பிரதேசங்களைக் குறிவைத்தே குறித்த தேரர் இவ்வாறு தெரிவித்திருந்தார். முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையில் இவரது பேச்சு சற்று ஜாக்கிரதையை ஏற்படுத்தவே செய்கிறது. 

கடந்த காலங்களிலும் சில முஸ்லிம் பிரதேசங்கள் தொடர்பில் விமர்சிக்கப்பட்ட பின்னரே பல விடயங்கள் நடந்தேறின. ஆனால், இந்த விடயத்தில் எம்மவர்கள் சுத்தமானவர்கள் என்று நான் சொல்ல வரவும் இல்லை. இன்றைய சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாத வறட்டுவாதம் கொண்ட எம்வர் சிலரால் தான் நாமும் இலகுவில் அடையாளப்படுத்தப்பட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறோம். இவ்வாறானவர்களின் தீர்க்கமற்ற போக்குகளால் முழு முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான சிங்களவர்களுக்கும் தேவையான விடயம். 

எம்வர் சிலரின் நடவடிக்கைகள் விளக்கை பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வழியைக் காட்டுவது போன்றே உள்ளது. சாய்ந்தமருதில் இரு முஸ்லிம் குழுக்களிடையே அண்மையில் நடந்த சம்பவமும் இதற்கு ஓர் உதாரணம். நாட்டின் நிலைமைகளை நன்குணர்ந்து இந்தப் பிரச்சினையை இரு தரப்பாரும் மூடிய கதவுக்குள் பேசி தீர்வு கண்டிருக்க முடியும். இதனை விடுத்து கல்லெறி, பொல்லடியில் இது முடிந்ததால் இன்று இந்த விடயம் பேயாக உருவெடுத்துள்ளது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் பௌத்த பிக்குகளால் சாய்ந்தமருது என்ற பெயர் உச்சரிக்கப்படுவதற்கும் இவர்களின் பொறுப்பற்ற செய்கையே காரணமாகி விட்டது மிக வேதனைக்குரியது. 

எம்மை நாமே எதிரிகளிடம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சாய்ந்தருதுவில் மட்டுமல்ல... பல இடங்களிலும் நம்மவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று எமது சமூகத்துக்கே எச்சரிக்கையாகி போயுள்ளது என்பதனை நினைக்கும் போது மனம் கனதியடைகிறது. முன்னர் வாகனங்களில் பயணிக்கும் போது அதனை நிறுத்தி, நீ தமிழனா, யாழ்ப்பாணத்தவனா, கிளிநொச்சிக்காரனா, முல்லைத்தீவானா என்று கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 ஆனால், நாளை நாம் வாகனத்தில் பயணிக்கும் போது அதனை நிறுத்தி நீ முஸ்லிமா? சாய்ந்தமருதானா, காத்தான்குடிகாரனா? உனது ஊர் புத்தளமா என்றெல்லாம் கேட்கக் கூடியதான ஒரு நிலைமையை எம்மவர் ஏற்படுத்தி வருவது வேதனையானது. இதற்கான பொறுப்பையும் இவ்வறானவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

தனிப்பட்ட அல்லது சில குழுக்களின் செயற்பாடுகள் முழு முஸ்லிம் சமூகத்தையும் நாசமாக்கி இருக்கும் சிறிய இருப்பையும் இல்லாமல் செய்யக் கூடாது. எல்லாம் நடந்த பின்னர் குரல் கொடுப்பதும் கோஷ்டியாக இணைந்து ஹர்த்தால் நடத்துவதிலும் வேலை இல்லை. வரும் முன் காக்க வேண்டிய தேவையே எமக்கு இன்றுள்ளது. பிரச்சினைகள் எழும் போது அல்லது திட்டங்களை வகுக்கும் போது எமக்குள் கலந்துரையாடி முடிவுகளை எட்டுவதே சிறந்தது. 

இதனை விடுத்து பொல்லுடன் சென்று தாக்குதல் நடத்தி பிரசாரப்படுத்துவதானது தாங்களே தங்களது பொல்லால் தங்களை அடித்துக் கொள்வது மட்டுமல்ல.. மற்றவர்களிடமும் எமது பொல்லை நாமே கொடுத்து மொத்தமாக அடியுங்கள் என்ற நிலைமையை உருவாக்குவதற்கு ஒப்பாகும். கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் அவர்கள் தனது முகநூலில் வெளியிட்டிருந்த இந்தச் சம்பவம் தொடர்பிலான அவரது கருத்தினையும். 

அற்கான தனது கருத்தாக டாக்டர் நாகூர் ஆரிப் அவர்கள் செய்திருந்த பதிவினையும் அவற்றின் அவசியத்தை உணர்ந்தவன் என்ற வகையில் கீழே பதிவிடுகிறேன். கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ்--- --------------------------------------------------------------------------------------- “இறைநம்பிக்கையெல்லாம் வெறும்பேச்சாக மாறிக் கொண்டு வருகின்றது. எமக்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவுகளை கோடுகளாகக் கீறிக்கொண்டு கோடு தாண்டி விளையாடுகிறார்கள் பள்ளிகளில் தராவிஹ் தொழுகைக்கு இரண்டு சப்கள் கூட நிரம்பாமல் காணப்படுகின்றது. ஆகக்கூடிய தொகையாக ஐம்பது இருக்கும் அதுக்குள்ளும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இபாதத் செய்கின்றார்கள். இது ஒரளவுக்குப் பரவாயில்லை. சண்டைகள் இல்லாமல் இபாதத் செய்கிறார்கள். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு முன்மாதிரியாக இருந்தது முஸ்லிம்களே. 

முஸ்லிம்களுக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நடுவில் நாட்டாமை செய்தது இந்நாட்டு இராணுவத்தினரும் பொலிசாரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 

இது இன்று இரவு சாய்ந்தமருதிலும் இடம்பெற்றுவிட்டது. டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களின் கருத்து - ----------------------------------------------------------------- இன்னும் சில நாட்களில் சாய்ந்தமருது தௌஹீத் என்றும் ஒரு பிரிவு வரும். என்னங்கடா இது? ஒரே அல்லாஹ் என்கிறோம். ஒரு குர்ஆன் என்கிறோம். இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்கிறோம். ஒரே கிப்லா என்கிறோம். பின்ன என்ன இது ஆளாளுக்கு ஒரு பிரிவு. 

இதில நான் எந்தப் பிரிவு என்று யோசித்தால் தலை வெடித்து விடும் போலிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் மக்கள் நாடுவது சொகுசான வாழ்க்கையை. யார் சொகுசான வழிமுறையை சொல்கிறார்களோ அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :