பேருவளையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் மூலம் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாக்க முயற்சித்த அரசின் பங்காளிகள் இன்று மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் எனும் தொனிப்பொருளில் அனுஷ்டானங்களை மேற்கொள்வதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை நகர சபை உறுப்பினருமான கலாநிதி கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை மீண்டும் ஒரு இனக்கலவரத்தின் மூலம் கறுப்பு ஜூலையை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்த இவர்கள் நாட்டின் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பது மட்டுமல்லாது சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் பூர்வீக சொத்துக்களையும் கைப்பற்றும் செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள நவசமாஜக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இனப்படுகொலையின் போது பெரும்பான்மை இனவெறியர்களால் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் உடமைகளும் அழிக்கப்பட்டது. அந்த கோரச் சம்பவம் நடந்து சுமார் 31 ஆண்டுகள் ஆகியும் இதற்கிடையே உலகில் எத்தனை மாற்றங்கள் ஆட்சி மாற்றங்கள் நாடுகளில் கொள்கைகளில் மாற்றங்கள் அரசியல் பண்பாட்டில் மாற்றங்கள் இவ்வாறான மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்த போதிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உடமைகளும் குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளும் உடமைகளும் சில பேரினவாத சக்திகளால் பறிக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய ஜனாதிபதி கூட சர்வாதிகார ஆட்சியின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை தம்மிடம் வைத்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த மறுக்கின்றார். ஜனாதிபதியின் செயல்களிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது. நாட்டின் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வாய்ப்பு இல்லை. 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பிலும் ஜனாதிபதி விரும்பவில்லையென தெரிகின்றது.
அமெரிக்காவை பொறுத்த வரை அமெரிக்க அரசுடன் ஒன்றுபட்டு செயற்பட்டால் மனித உரிமை விசாரணைகள் இல்லை. ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் மனித உரிமை விசாரணை வேண்டும் எனும் நிலைப்பாட்டிலேயே அவ் அரசு செயற்படுகின்றது.
ஊவா மாகாண சபை தேர்தல்
ஊவா மாகாண சபை தேர்தலில் சட்டங்களை மீறி அரசானது மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளது. எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அரசானது வாக்கு மோசடிகளை கட்டவிழ்த்து வரும் இம்முறை ஊவா மாகாண தேர்தலுக்கு முன்னரே தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுகின்றது.
ஊவா மாகாண தேர்தல்களில் பதுளை மாவட்டத்தின் பெரும்பான்மை தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். எமது கட்சியின் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாம் கலந்துரையாடி வருகின்றோம் என தெரிவித்தார்.
யாழ்ப்பாண விஜயம்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சி கர முன்னணியின் 34 ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்து கொண்டோம். இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் நாம் நாட்டை பிரிக்க கேட்கவில்லை.
நாட்டின் சிறுபான்மையினர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அதிகார பகிர்வையே கேட்கின்றோம். அதேபோல நாம் சர்வதேச விசாரணையை கேட்கவில்லை. நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான நாட்டுக்குள்ளே சுயாதீன விசாரணையையே கோருகின்றோம் என தெரிவித்தார்.
இதனையே நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் நாட்டில் அனைத்து மக்களும் கோருகின்றார்கள். இதனையே நாமும் அரசிடம் வேண்டுகின்றோம். இதனை அமுல் படுத்துமாயின் எந்த ஒரு நபரும் சரி எந்த ஒரு சர்வதேச நாடும் எமக்கெதிராக சர்வதேச அழுத்தங்களையும் கருத்துக்களையும் பிரயோகிக்க வாய்ப்பு இருக்காது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment