இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரியவை கொலை செய்யும் நோக்கம் எதுவுமுள்ளதா? என சபையில் நேற்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் வாகனத்தை பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியின் இலக்கங்களின் கூட்டுத் தொகை 13 என்றும் இவ்வாறான கூட்டுத் தொகையுடன் இலக்கங்கள் வழங்கப்படுவதில்லை என்ற பிரதமரின் பதிலை ஏற்றுக் கொள்ளமுடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கை சட்டத் தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய கொழும்பு ஹல்ஸ்ரொப்பில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருக்கையில் முகம் தெரியாத வண்ணம் ஹெல்மட்டினால் முகத்தை முழுமையாக மூடிவந்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இது தொடர்பாக அவர் கறுவாத் தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹல்ஸ்ரொப்பிலிருந்து கலதாரி ஹோட்டல் வரை இந்த மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்துள்ளது.
இப்பிரதேசத்தில் ஜனாதிபதி செயலகம் காணப்படுகிறது. அத்தோடு இப்பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகும். இவ்வாறானதோர் நிலையிலும் உபுல் ஜயசூரிய கலதாரி ஹோட்டலில் 1 1/2 மணித்தியாலங்கள் இருந்து விட்டு வெளியே வந்த பின்னரும் அந்த மோட்டார் சைக்கிள் ஹோட்டலுக்கு வெளியே காணப்பட்டுள்ளது.
பின்னர் உபுல் ஜயசூரிய கொழும்பு 7 இல் உள்ள அர்னஸ்ட் த சில்வா மாவத்தையில் உள்ள காரியாலயத்திற்கு சென்றுள்ளார். அதன் போதும் இந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் அவரை துரத்தி சென்று அப்பிரதேசத்தில் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரையில் நின்றுள்ளனர்.இந்த மோட்டார் சைக்கிளில் இருந்த நபர்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்த சிலரோடு உரையாடிக் கொண்டிருந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் இலக்கம் டபிள்யூ.பி.யூ.பி. 4072ஆகும்.முச்சக்கர வண்டியின் இலக்கம் 207௸ - 5314 ஆகும். அத்தோடு இந்த மோட்டார் சைக்கிள் நபர்கள் கடந்த 15 மற்றும் 17 ஆம் தினங்களிலும் உபுல் ஜயசூரியவின் வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. அவர்களது வாகனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் பொலிஸார் தவறியுள்ளனர்.
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் இந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி தொடர்பில் இலக்கங்களின் தரவுகள் இல்லை. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இந்த வாகனங்களின் இலக்கங்களின் தரவுகள் அங்கு இல்லாதபோதும் அவ்விலக்கங்களுக்கு முன்னரானதும் பின்னரானதுமான இலக்கங்களின் தரவுகள் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் காணப்படுகின்றன.
எனவே, இந்த இலக்கங்களுக்கு இடையேயான இடைவெளி தொடர்பில் எதுவிதமான தெளிவுபடுத்தலும் வழங்கப்படவில்லை.அத்தோடு இவ்விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? வாகன இலக்கங்களிடையே இவ்வாறானதொரு இடைவெளி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அத்தோடு இவ்வாகனங்களின் இலக்கங்கள் தொடர்பான பிரதமர் வழங்கிய பதிலை ஏற்ற முடியாது.
அதாவது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாகனங்களின் இலக்க கூட்டுத் தொகையாக 13 இலக்கம் வரும் வரையிலான இலக்கங்களை வழங்குவதை இரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், மேற்கண்ட வாகனங்களின் இலக்கங்களை கூட்டினால் அது 13 ஆக வரவில்லை. எனவே, இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் வழங்கிய தகவல்களையே பிரதமர் சபையில் வழங்கினார். எனவே, இது தொடர்பில் உண்மைத் தன்மையை மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
0 comments :
Post a Comment