' நான் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பேசுகின்றேன்' என அறிமுகம் செய்துகொண்டு தொலைபேசியில் மிரிஹான பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிளொன்றினை விடுவிக்க உத்தரவிட்ட நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார். இரு தொலை பேசி இலக்கங்களைப் பயன்படுத்தி இந்த வேலையை சந்தேக நபர் முன்னெடுத்துள்ளதாகவும் அவரை நுகேகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததன் பின்னர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விஷேட போக்கு வரத்து சோதனை நடவடிக்கை ஒன்றினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குடி போதையுடன் வாகனம் செலுத்துவோரை கைது செய்யவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது கடமையிலிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாரின் சமிக்ஞ்சையை பொருட்படுத்தாது அந்த மோட்டார் சைக்கிளானது பயணித்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில் பொலிஸார் விரட்டிச் செல்வதை உணர்ந்து அவ்விருவரும் மோட்டார் சைக்கிளை இடை நடுவிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந் நிலையில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை மிரிஹான பொலிஸார் மீட்டு தடுத்து வைத்துள்ளனர்.
இந் நிலையில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கும் 1.20 மணிக்கும் இடையே மிரிஹான பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு இரு தொலை பேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. அந்த அழைப்பை ஏற்படுத்திய நபர் ' நான் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கதைக்கின்றேன்' என தன்னை அறிமுகம் செய்துகொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறிப்பிட்டு விசாரித்துள்ளார்.அத்துடன் அதனை உடனடியாக விடுவிக்கும் படியும் கட்டளை இட்டுள்ளார்.
குறித்த அழைப்பு தொடர்பில் சந்தேகம் அடைந்துள்ள மிரிஹான பொலிஸார் விசாரணை செய்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை கைது செய்தனர்.தொடர்ந்து தொலைபேசி எண்களை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டவிசாரணைகளை தொடர்ந்து குறித்த நபரே தொலைபேசி ஊடாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண போன்று கதைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்தநபரின் தொலைபேசி இலக்கம் ஆகியனவேபயன்படுத்தப்பட்டுள்ளமையையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

0 comments :
Post a Comment