ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முடிவுக்கு வரும்போதே பௌத்த சாசனம் பாதுகாக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் தேசிய புத்திஜீவிகள் குழுவினருடனான சந்திப்பினை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று புதன்கிழமை முற்பகல் நடத்தியிருந்தார். தேரவாத பௌத்த சாசனம் தொடர்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
மேலும் தெரிவிக்கையில்;
பௌத்த சாசனம் குறித்த உத்தியோகபூர்வ ஆலோசனைகள் மகாநாயக்கர்கள் மற்றும் செயற்குழுவினரால் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் சாசனத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தேவையானவற்றைச் செய்கின்றனர்.
இதற்கு மதவாத சக்திகளை உருவாக்குகின்றனர். இதனால் சர்வதேச ரீதியில் பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முடிவுக்குவரும் நாளிலேயே புத்தசாசனம் பாதுகாக்கப்படும். போதைப்பொருள் விற்பனை, ஊழல்களை மேற்கொண்டு அரசாங்கத்தை நீண்டகாலத்துக்கு கொண்டு செல்லமுடியாது. பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், சாசனத்தை தமக்கு அடிபணிந்ததாக மாற்ற முயற்சிக்கின்றது. இதற்கு கண்டியில் அண்மையில் இரவு நேர கார் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டமையை உதாரணமாகக் கொள்ள முடியும். மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் பந்தயம் நடத்தப்பட்டது என்றார்.
0 comments :
Post a Comment