நடந்தவைகளை நடக்கவில்லை என்று கூறும் சிங்கள ஊடகங்கள் - முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் ஹக்கீம் தலைமையில் கட்சியின் உயர்மட்டத் தூதுக்குழு  சென்ற வாரம் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரின் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் இயாத் மதனி மற்றும் அவ்வமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச்  செயலாளர், கலாசார விவகாரங்களுக்கான பணிப்பாளர், சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தொடர்பான  விடயங்களைக் கையாளும் உயர் அதிகாரி ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து அங்கு இரண்டு  நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக் கால சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடிய விவகாரம் குறித்து  பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் சிங்கள ஊடகங்கள் செய்திகளை 
வெளியிட்டுள்ளன. 

இந்தப் பின்னணியில், மு.கா தலைவர், நீதியமைச்சர் ஹக்கீம் தமது உம்றா கடமையை நிறைவேற்றிய பின்னர்  பிரஸ்தாப அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து தெரிவித்தவையாவன,  அறுபத்தாறு இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர்  நாயகம் இயாத் மதனி அவர்களை முன்னர் அவர் சவூதி அரேபியாவின் ஹஜ், வக்பு விவகாரங்களுக்கு பொறுப்பான  அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நன்கு தெரியும். அப்பொழுது நான் இலங்கையை இஸ்லாமிய விவகார  அமைச்சராக இருந்த பொழுது அவரை சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். மலேசியாவில் இஸ்லாமிய நாடுகளின்  ஒத்துழைப்பு அமைப்பின் செயலமர்வின் போதும் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். 

அவருடனும், அவ் அமைப்பின் முக்கியஸ்தருடனும் நாம் நடத்திய கலந்துரையாடல்களில் ஒழிவு மறைவு எவையுமில்லை.  அண்மைக்கால சம்பவங்களின் களநிலவரங்களின் யதார்த்தத்தை விளக்கியதன் காரணமாக இங்கு வாழும் முஸ்லிம்களின்  பாதுகாப்பு, இருப்பு, எதிர்காலம் என்பன பற்றிய இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தை பெறுவதற்காக அவ்வமைப்பு ராஜதந்திர ரீதியான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு எமது சந்திப்பு உதவியிருக்கிறது. 

அவ்வமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவை பேணி வருகிறது.  இதனை அவ்வமைப்பானது இந்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடும் விடயமாகப் பார்க்க கூடாது. உலக ஒழுங்கில் மனித உரிமை பற்றிய விவகாரங்களை ஒவ்வொரு நாடும் உள்விவகாரமாக மட்டும் கையாள முடியாது. 

பேருவளை, அளுத்கமை சம்பவங்கள் நடந்த அதேவேளையில் பிரஸ்தாப அமைப்பின் கூட்டம் ஜோர்தானில்  நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கிருந்து உடனடியாக இந்த விடயமாக அவ்வமைப்பு ஓர் அறிக்கையை 
வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்  செயல்பாடுகள் குறித்து அவ்வமைப்பின் கவனம் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது.  மியன்மாரில் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களை கண்காணிப்பதற்கு இவ்வமைப்பு விசேட தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது. முன்னாள் மலேசிய ராஜதந்திரி ஒருவர் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். 

 இலங்கைக்கும் அவ்வாறான விசேட தூதுவர் ஒருவரை நியமிக்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதன்  செயலாளர் நாயகம் இயாத் மதனி இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ளவும் எண்ணியுள்ளதாக  எங்களிடம் கூறினார்.  இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மை (ஐளடயஅphழடியை) காரணமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள  அநியாயங்களுக்கு முடிவு காண்பதிலும், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்லிணக்கத்துடன் பேசி வெளிவேறு சமயங்களை பின்பற்றுவோருக்கு இடையில் புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இவ்வமைப்பு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் அரசாங்கங்களுடனும் இராஜதந்திர ரீதியாக இவ்வமைப்பு தனது அழுத்தத்தை உரிய முறையில் பிரயோகித்து வருகிறது.  ஐ.நா மனித உரிமை சாசனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள் அந்த சாசனத்திற்கு மாற்றமாக செயல்பட முடியாது. 

உதாரணத்திற்கு, காஸாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்துள்ள ஈவிரக்கமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை இன்னும் தொடர விட்டால், நாட்டையும், மக்களையும் முற்றாக அழித்தொழித்து 
நாசமாக்கிவிடுவார்கள். 

இவ்வாறிருக்க, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் அங்கு நடைபெறவுள்ள சமய நல்லிணக்க  மாநாட்டிற்கு இலங்கையிலிருந்தும் சகல சமயங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை அழைப்பதற்கும் இஸ்லாமிய  நாடுகளில் ஒத்துழைப்பு அமைப்பு உத்தேசித்துள்ளது.  இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 

மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழுவில் கல்முனை மாநகர மேயரும், கட்சியின் பிரதிச் செயலாளருமான நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஏ.எம். பாயிஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர் கலீல் மௌலவி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். 

அப்துல் ஹபீஸ்
ஸ்ரீ. லு. மு. கா. தலைவர் அமைச்சர் ஹக்கீமின் 
ஊடக ஆலோசகர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :