உண்மைக்குப் புறம்பான முறைப்பாட்டை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைதான வட்டரக்க விஜித தேரரை ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தேரர் இன்று ஆஜர்செய்யப்பட்டபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட்டரக்க தேரர் தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு இதன்போது தேரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து தேரருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.
இதேவேளை, வட்டரக்க விஜித தேரர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண கருத்து தெரிவித்தார்.
கடந்த 19 ஆம் திகதி காலை பண்டாரகம – ஹிரன பகுதியில் வட்டரக்க விஜித தேரர் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் கடத்தப்பட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தேரர் பொலிஸாருக்கு முறைபாடு செய்ததாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதன் பின்னர் அவரை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறினார்.
பின்னர் தேரர் உண்மைக்குப் புறம்பான முறைபாட்டை செய்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, போலியான முறைப்பாட்டை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதும் அவரைக் கைது செய்ய நேரிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.n1st

0 comments :
Post a Comment