சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரைப் பிரதேசத்திற்கு திடீர் விஜயம்





நவோஜ்-

வாகரை பிரதேசத்தில் கடந்த சில காலமாக நடாத்த திட்டமிட்டு வரும்
பொதுமக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தியை பாதிக்கும் விடயம் சார்பாக ஆராயும்
முகமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரைப் பிரதேசத்திற்கு திடீர் விஜயத்தை
மேற்கொண்டார்.

இதில் வாகரை பிரதேசத்தில் காயான்கேணி பகுதியில் சட்டவிரோதமாக அரச
காணியில் அமைக்கப்படும் ஹோட்டல், சட்டவிரோதமாக ஏற்படுத்தப்படும் வீதித்
தடை போன்றவைகள் பற்றியும், இவ்வேளை வாகரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக
வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்ட மீனவர்கள் கடல் அட்டை,
சங்கு, பெரிய படகு மீன்பிடி செயற்பாடுகள் சார்பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை
எடுப்பதற்கும், காணிச் சட்டங்களுக்கு அமையாது அரச காணிகளை அரசாங்க
அரசியல்வாதிகளின் சிபார்சில் இறால் வளர்ப்பு என்ற வகையில் தனியார்
கம்பனிகளுக்கு அரச உயர் அதிகாரிகள் வழங்குவதை தடுக்கும் முகமாகவும், இதனால்
வாகரைப் பிரதேசத்தின் குறிப்பாக தட்டுமுனை, ஊரியன்கட்டு உட்பட்ட நன்னீர்
மீன்பிடியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பற்றி
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும், அரசாங்க அரசியல் வாதிகள்
திட்டமிட்ட வகையில் வாகரைப் பிரதேசத்தில் காணிகளை கொள்வனவு செய்து
அபிவிருத்தி திட்டங்களை தங்களது நலன்கருதி மேற்கொள்ள முனையும் நடவடிக்கை
சார்பாகவும் ஆராயும் முகமாகவே இவரது விஜயம் இடம்பெற்றது.


இவ்வேளை இவர் பனிச்சங்கேணி பாலர் பாடசாலைக்கு சென்று அவர்களது தேவைகளை
அறிந்ததுதுடன், வாகரை தட்டுமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்று லங்காஸ்ரீ
இணையம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை இம்மாணவர்களுக்கு வழங்கி
வைத்தார்.

பின்னர் தட்டுமுனை, ஊரியன்கட்டு, வாகரை, அம்பந்தனாவெளி, புச்சாக்கேணி,
கதிரவெளி ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்கள் எதிர்நோக்கியுள்ள அபாயநிலை
குறித்து விழிப்பூட்டினார்.

இவ்வேளை அரச காணிகளை அரசாங்க அரசியல் வாதிகளின் சிபார்சில் ஆயிரக்
கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் முதலீட்டு கம்பனிகளுக்கு வழங்கும் செயற்பாடு
காரணமாக வாகரை தம்பிரான்வெளியில் 400 ஹெக்டேயரும், காயான்கேணியில் 350
ஹெக்டேயரும், குருவிக்கல் மலை 1ல் 780 ஹெக்டேயரும், குருவிக்கல் மலை 2ல் 670
ஹெக்டேயரும் அரச உயர் அதிகாரிகளால் வழங்கப்படுவதால் இப்பகுதி மக்கள்
வாழ்வாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட உள்ள நிலை குறித்து தெளிவாக
மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளக்கினார்.

அதுமட்டுமின்றி இதனால் நன்னீர் மீன் உயிரினங்கள் எதிர்கொள்ளும் அபாயம்
குறித்தும் சுட்டிக்காட்டியதாக அறிய முடிந்தது. மேலும் வாகரை பிரதேசத்தில்
பாராளுமன்ற உறுப்பினரால் வெளிமாவட்ட மீனவர்கள் இப்பகுதியில் வருகை தந்து பாரிய
படகுகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் மற்றும் கடல் அட்டை பிடித்தல், சங்கு
எடுத்தல் உட்பட்ட செயற்பாடுகளை தடை செய்யுமாறு கடல் தொழில் நீரியல் வளத்துறை
மாவட்ட திணைக்களம், கடல் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு மடல் அனுப்பப்பட்டும்
நேரடியாக எடுத்துக் கூறியும் இதுவரை தடை செய்யப்படாமையால் 800க்கு மேற்பட்ட வெளி
மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி, கடல் அட்டை பிடித்தல், சங்கு
எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதையும் ஆராய்ந்து பெற்றுக் கொண்டதுடன், இதை
தடுக்குமாறு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்துக்கு மீண்டும்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இக்கடல் தொழில் சார்பாக மீன்படி, சங்கு எடுத்தல், கடல் அட்டை பிடித்தல்
என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்வதற்கு 1996ம் ஆண்டின் 2ம் இலக்க
கடற்றொழில், நீரியல் வளங்கள் சட்டத்தின் 32வது பிரிவின் 3வது உப பிரிவின்
கடல்தொழில் நீரியல் வளங்கள் பணிப்பாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட
கட்டளை 1801ஃ29ம் இலக்க 2013.03.14ம் திகதிய அதிவிஷேட வர்த்தமானியில்
வெளியிடப்பட்ட கிழக்கு கரையோர மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் முகாமைத்துவ
பிரதேசத்தில் பாசிக்குடா கல்குடா கடல்தொழில் முகாமைத்துவ குழு, காத்தான்குடி
கடல்தொழில் முகாமைத்துவ குழு, சுவிஸ்கிராமம், நாவலடி, சீலாமுனை கடல்தொழில்
முகாமைத்துவ குழு, காயான்கேணி கடல்தொழில் முகாமைத்துவ குழு, ஓட்டமாவடி,
வாழைச்சேனை கடல்தொழில் முகாமைத்துவ குழுவுக்கே அதிகாரம் உண்டு.

ஆனாலும் இதனை மீறியதாக கடல்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின்
அங்கீகாரத்துடன் கடல்தொழில் நீரியல் வளங்கள் பணிப்பாளர் நாயகத்தின்
அனுமதியுடன் வாகரை மாங்கேணி பிரதேசத்தில் 13 படகுகளுக்கு சங்கு, கடல் அட்டை,
மீன் பிடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் தற்போது கதிரவெளி, புச்சாக்கேணி, பால்சேனை ஆகிய பகுதிகளில் 800க்கு
மேற்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தோர் கடல் அட்டை, மீன்பிடி, சங்கு எடுத்தல்
தொழில்களில் ஈடுபடுகின்றனர். இது எமது உள்ளுர் மீன் பிடி தொழிலாளர்களின்
தொழிலை பெரிதும் பாதிக்கின்றது என்ற விடயங்களை பாரளுமன்ற உறுப்பினர்
கடற்தொழில் சார்ந்த மக்களுக்கு விஜயத்தின் போது தெளிவுபடுத்தினார்.

இவ்வேளை பெரும்பாலான தொழிலாளர்கள் இவ்வாறு சட்ட விரோதமாக இங்கு வந்து
மீன்பிடி தொழில், கடல் அட்டை பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு
உறுதுணையாக இராணுவ புலனாய்வு பிரிவினரும், ஏனைய அரச புலனாய்வு பிரிவினரும்
உள்ளதால் தாங்கள் இவ்விடயமாக கவனத்தில் எடுத்தால் தங்களுக்கு இவர்களால்
அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாகவும், அத்தோடு தற்போது வாகரை பொலிஸ் பகுதியும்
இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதும் மிகக் குறைவாக உள்ளதாகவும் பாராளுமன்ற
உறுப்பினரிடம் மக்கள் கவலை வெளியிட்டனர்.


இதன்போது சட்டவிரோதமாக மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும்
பாதிக்கும் வகையில் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்படுதல்,
சட்டவிரோதமாக வெளி மாவட்ட மீனவர்கள் இங்கு வருகை தந்து மீன் பிடித்தல்
சார்பாகவும், அரச காணிகளில் அரசாங்க அரசியல் வாதிகளினதும், அரச உயர்
அதிகாரிகளினதும் ஆதரவில் ஹோட்டல் அமைத்தல், வீதித் தடை மற்றும் சுயநலனுக்கு
அபிவிருத்தி வேலையை பயன்படுத்தல் சார்பாக தான் பல தகவல்களை ஆதார பூர்வமாக
பெற்றுள்ளதால் இவ்விடயமாக துரிதமான நடவடிக்கை எடுப்பதாகவும், இராணுவ புலனாய்வு
பிரிவு, ஏனைய புலனாய்வு பிரிவு பொது மக்களின் தொழில் விடயங்களை பாதிக்கும்
விடயம் சார்பாக பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை
எடுப்பதாகவும் மக்களுக்கும், மக்கள் அமைப்புகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்
சீ.யோகேஸ்வரன் உறுதி அளித்துள்ளார்.

இவ்வேளை இப்பகுதியில் நிலவும் தற்கொலைகள், கலாசார சீர்கேடுகள் சார்பாக
மக்களிடம் கேட்டறிந்துள்ளார். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி
யெழுப்புதல் சார்பாகவும் கலந்துரையாடினார்.


மேலும் அரசாங்க உயர் அதிகாரிகள் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளும் மிக
முக்கியமான சில செயற்பாடுகள் பொதுவாக அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரிந்ததாகவும்,
அப்பகுதி மக்களின் வாழ்வில் அச்செயற்பாடு ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை
அம்மக்கள் உணர்ந்த வகையிலும், அப்பகுதி மக்களினதும், மக்கள் அமைப்புகள்,
பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் துறைசார் அமைப்புகளின் சிபார்சுடன் வாகரை
பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின் மாவட்ட இணைப்பு குழு
கூட்டத்தில் ஆராயப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரச உயர்
அதிகாரிகளின் கவனத்துக் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.


அத்தோடு ஒரு வருடத்தில் பிரதேச அபிவிருத்திச் குழு கூட்டம் குறைந்தது ஆறு நடைபெற
வேண்டும். மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் குறைந்தது நான்கு நடைபெற
வேண்டும். ஆனால் இவைகள் ஒழுங்காக நடாத்தப்படாமையும், இவ்வாறான செயற்பாடுகள்
அதிகரித்துச் செல்வதற்கு உறுதுணையாக உள்ளதையும் சுட்டிக்காட்டியதுடன்,
இவ்வருடத்திற்கான பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டமோ, மாவட்ட
அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டமோ இதுவரை நடாத்தப்பட்டவில்லை என கவலை
தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :