சாய்ந்தமருது பிரதேச செயலக மக்கள் நடமாடும் சேவையின் போது தாக்குதலுக்குள்ளான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் தாக்கியவர் இன்று சாய்ந்தமருது பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் மத்தியில் வைத்து சம்பவம் தொடர்பாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதன் மூலம் இத்தாக்குதல் சம்பவம் காரியாலய மட்டத்தில் சமரசத்திற்கு வந்துள்ளது.
இப்பகிரங்க மன்னிப்புக் கோரும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இச்சம்பவமானது, கடந்த 06.04.2014ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலத்தினால் றியாழுல் வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது, சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சாய்ந்தமருது – 08 கிராம சேவகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட திரிய பியச வீடு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் நடமாடும் சேவையின் கடமைக்கு வந்து கொண்டிருந்த சாய்ந்தமருது – 08 கிராம சேவகப் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான உத்தியோகத்தர் சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கல்முனை பொலிஸில் சம்பவம் தொடர்பாக பிரதேச செயலகத்தினால் முறைபாடும் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கல்முனை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து தாக்கியவர் தலைமறை வாகியிருந்தார். இதனால் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்; நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைவரின் உறவினர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், தாக்குதலுக்குள்ளான உத்தியோகத்தர், அவரின் உறவினர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டு, சம்பவம் தொடர்பாக இருசாராரும் சமரசத்திற்கு வந்ததையிட்டே இன்று இப்பகிரங்க மன்னிப்புக் கோரும் நிகழ்வு இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட மன உளச்சல், மருத்துவச் செலவு மற்றும் ஏனைய பாதிப்புக்களுக்கு ஒரு நிவாரணத் தொகையும் தாக்கியவரால் வழங்கப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment