தமிழினம் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது -பொன்.செல்வராசா MP



த.நவோஜ்-

லங்கையிலே தமிழினம் மண்ணை காப்பாற்றுவதற்காக இலட்சக்கணக்கான உயிர்களை தியாகம் செய்த போதிலும் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

எமது பிரதேசங்களில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை மூலம் வெளியேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என்றும் அவர் கூறினார்

சட்டவிரோத காணியில் அபகரிப்பை தடுப்பது தொடர்பாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐயங்கேணியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐயங்கேணி மற்றும் விபுலானந்தபுர கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெடனம் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்

'வடக்கு கிழக்கிலே தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கை தொடரந்தவண்ணமேயுள்ளது. குறிப்பாக வடக்கிலே தமிழர்களின் சொந்த காணிகளையே அபகரிக்குமளவிற்கு அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுமார் ஆறு ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளை தம்வசம் எடுப்பதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்கெதிராக மக்கள் நீதிமன்றிலே வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த நிலையில் அங்கிருந்த பாடசாலைகள் கட்டடங்கள் வீடுகள், ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்தளவிற்று வடக்கிலே அராஜகம் நடைபெறுகிறது.

கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே எல்லை கிராமங்களில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் அரசாங்க காணி என்ற போர்வையில் அத்துமீறி குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். இதுசம்மந்தமாக நாங்கள் சட்ட நடவடிக்கையெடுக்க முற்பட்டபோது போது சில காணி அதிகாரிகள் சட்ட நடவடிக்கையெடுக்க முடியாது என்று கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

இவர்களின் கட்டளை செல்லுபடியற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வழக்குத் தாக்கல் செய்தது. அந்த வழக்கின் தீர்ப்பு வெளிவருவதற்கிடையில் சட்ட நடவடிக்கையெடுக்கலாம் என அதே அதிகாரிகளினால் கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கெவிலியாமடு, புணானை பகுதிகளிலே இவ்வாறான அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. புணாணையிலே பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த 39 குடும்பங்கள் இராணுவத்தினாலும் பௌத்த பிக்குவினாலும் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டார்கள். அந்த காணி அரச காணி என கூறப்பட்டது அந்த காணி வன இலாகாவிற்குச் சொந்தாமான காணி என நீதிமன்றத்திற்குச் சென்று அவர்களை வெளியேற்றப்பட்டனர்.

எமது காணிகள் பறிபோகின்றன எமது மாவட்டத்திற்குச் சொந்தமான அரச காணிகள் பறிபோகின்றன எமது மக்கள் காலகாலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் காணிகள் எல்லைப் பிரதேசங்களிலே பறிபோகின்றன. காத்தான்குடிக்கும் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது அதை மாவட்ட அரசாங்க அதிபருடன் நாங்கள் சென்று பார்வையிட்டோம்.

ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பகுதிகளிலே இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெறுகின்றன. எந்த இனத்தவராக இருந்தாலும் அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேற முடியாது. அவ்வாறு குடியேறியிருந்தால் அவர்களை வெளியேற்றுவதற்கு சட்டநடவடிக்கையெடுப்போம்.

எமது மண்ணைப் பாதுகாப்பதற்காக எமது சகோதரங்கள் இலட்சக்கணக்கில் மரணத்தைத் தழுவினார்கள். மண்ணை மீட்டெடுப்பதற்காகத்தன் எமது தமிழினம் இலட்சக்கணக்கான உயிர்களைக் கொடுத்தது. இவ்வாறான தியாகங்கள் செய்து; எமது மண்ணை பறிகொடுக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மண்ணை காப்பாற்றுவதற்காக நடவடிகையெடுத்துக் கொண்டிருகிறது' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :