த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் 55 பேர் இன்று வெள்ளிக்கிழமை சாட்சியமளித்தனர்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சியப் பதிவுகள் இரண்டாவது நாளாகவும் இன்று கிரான் பிரதேசத்திலுள்ள ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திற்கென நடைபெறும் விசாரணைகளின் கோறளைப்பற்று தெற்கு கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 280 முறைப்பாடுகளில் 55 பேரின் முறைப்பாடுகள் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த அமர்வில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம,ஆணையாளர்களான மனோ ராமநாதன், சுரஞ்சனா வித்தியாரத்ன ஆகியோர் விசாரணைகள் மேற்கொண்டதோடு சட்ட அதிகாரிகளான சமிந்த அத்துகொரள,துசித் முதலிகே ஆகியோர்முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.அத்தோடு ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியோர்களுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று வடக்கு, பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல் போன கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்டோரது குடும்ப அங்கத்தினர் சுமார் 351 பேர் தங்களுடைய மனுக்களை கையளித்தனர்.
ஆணைக்குழுவின் விசாரணைகள் 22 ஆம் திகதி சனிக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதுவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கானஇறுதி அமர்வாகும்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment