அமைச்சர் ஹக்கீம் நினைப்பது எல்லாம் வெறும் கனவாகத்தான் முடியும் - அஸாத் சாலி


திகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (19.03.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இன்று மிகவும் அர்ப்பணத்துடன் பணியாற்றி வருகின்றார். எப்படியாவது கொழும்பு மாவட்டத்தில் தனது கட்சிக்கு ஒரு ஆசனத்தையாவது வென்றெடுக்க வேண்டும் அல்லது இருக்கின்ற ஒரு ஆசனத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவில் அவர் ஓடித் திரிகின்றார். இதற்காக அவர் மிகவும் புதுமையான விதத்தில் அரசாங்கத்தை சாடித் திரிகின்றார். அவர் தற்போது புதிதாகக் கூறுகின்ற ஒரு விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்றும் காலம் கனிந்து வருகின்றது. கிழக்கில் மாகாண சபை நிர்வாகத்தை கூட்டமைப்போடு பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த வருட ஆகஸ்ட் மாதத்துக்குள் அரசாங்கம் ஏற்கனவே இணங்கியுள்ள படி முதலமைச்சர் பதவியை கிழக்கு மாகாணத்தில் தனது கட்சிக்கு தராவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அங்கு நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்கிறார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கிழக்கு மாகாண தேர்தல் முடிவடைந்த காலம் முதல் நான் இதைத்தான் அடிக்கடி கூறி வருகின்றேன். அவர் அன்று முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாகக் காட்டிக் கொடுத்து தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்து அரசாங்கத்தின் காலடியில் சரணடைந்தார். ஐந்து வருடங்களுக்கு நீங்களே முதலமைச்சராக இருக்கலாம். மாகாண அமைச்சர் பதவியில் இரண்டையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அரசாங்கத்துக்கு ஒரு பாடம் புகட்டும் வகையில் தமிழ் முஸ்லிம் இணைந்த ஆட்சியை கிழக்கில் ஏற்படுத்துவோம் என்று கூட்டமைப்பு தலைவர் ஆனந்த சங்கரி அன்று அழைப்பு விடுத்தார். ஆனால் அது ஹக்கீமின் செவிகளில் ஏறவில்லை. இன்று அவருக்கு காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண ஆசைப்படுகிறார். ஆனால் இன்று கிழக்கு மாகாண சபையின் ஏழு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அரசுக்கும் இடையில் நிலவுகின்ற உறவு கொடுக்கல் வாங்கல் என்பனவற்றை பார்த்தால் ஹக்கீம் நினைப்பது வெறும் கனவாகத் தான் முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என ஹக்கீம் ஒருவேளை நினைத்தாலும் அவரது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு போதும் அதற்கு இணங்க மாட்டார்கள். அந்தளவுக்கு அவர்கள் அரசுடன் இணைந்து சுகங்களை அனுபவித்து வருகின்றனர். நன்றாக கவனித்துப் பாருங்கள் தேர்தல் காலம் வருகின்றபோது தான் ஹக்கீம் தலையில் தொப்பி அணிவார். மற்ற நாற்களில் சமய வழிபாடுகளின் போது கூட அவர் தொப்பி அணிவதில்லை. தேர்தல் காலங்களில் தான் முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்று வீர ஆவேசமாகப் பேசுவார்.இனத்தையே காப்பாற்றும் தலைவராக தம்மை காட்டிக் கொள்வார். அரசுக்கு சவால் விடுப்பார். ஜனாதிபதிக்கு சவால் விடுப்பார். பொது பல சேனாவுக்கு சவால் விடுப்பார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றனவே எனக் கதறுவார். எல்லாம் தேர்தல் காலத்தில் தான். இது தான் அவர் நடத்தும் தேர்தல் நாடகம். இவ்வளவகாலமும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்ற போது அமைச்சரவைக்குள் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.

பொதுபல சேனாவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவோ சமய ரீதியாகவோ ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஜனநாயக நாடொன்றில் இது சகஜம். ஆனால் மதகுருமார் என்ற அந்தஸ்த்தில் இருக்கின்றவர்கள் பேசுகின்ற போது அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளில் மரியாதை இருக்க வேண்டும். நாகரிகமான மொழிகளில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்கள் மதகுருமார் என்ற கோலத்தில் திரிவதற்கு தகுதி உடையவர்கள் அல்ல. 

ஏந்தவொரு மனிதனைக் குறித்தும் அவர்கள் வார்த்தைகளைப் பாவிக்கின்ற போது அதுவும் ஊடகங்கள் முன்னிலையில் பேசுகின்றபோது மிகவும் அவதானமாக வார்த்தைகளைப் பாவிக்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் கேவலமான வார்த்தைகள் மதகுருமாரின் வாய்களில் இருந்து வருகின்றபோது அது அவர்களினதும் அவர்களின் சமயத்தினதும் மரியாதையை ஏனைய மக்கள் மத்தியில் இழக்கச் செய்து விடும். ஹக்கீமுக்கும் எமக்கும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

அது வேறு விடயம். ஆனால் அதற்காக ஒரு நாட்டின் நீதி அமைச்சரை கேவலமான வார்தைகளில் பகிரங்கமாக திட்டுவது அதுவும் ஊடகங்கள் முன்னிலையில் ஒரு மதகுரு அவ்வாறு பேசுவது எந்த வகையிலும் சகிக்க முடியாதது. இந்த நாட்டில் இதுவரை எந்த ஒரு மதத்தையும் சேர்ந்த சமயப் பிரமுகர்களோ அல்லது கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களோ இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைப் பொது இடங்களில் பகிரங்கமாகப் பாவித்ததில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைகளுக்கு முக்கியம் அளித்து அதை அப்படியே ஊடகங்களில் ஒலி ஒளிபரப்புச் செய்வதும் வருந்தத்தக்க விடயமாகும்.

தேர்தல் வன்முறைகள் கட்டு மீறிச் செல்கின்றன. முதலாவது மரணச் சம்பவமும் நேற்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. 62 வயதான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் கோரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அரசாங்கம் எதிர்க்கட்சியை மட்டும் தாக்கவில்லை. தங்களுக்குள்ளும் பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர். இதுவரை 882 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக கண்கானிப்பு பணியில் ஈடபட்டுள்ள கபே நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்கள் யார் உன்று தேடிப்பார்த்தால் அதில் முதலிடத்தில் இருப்பவர் நாட்டின் தலைவர் ஜனாதிபதியாக காணப்படுகின்றார். அவர் தற்போது தமிழகத்தின் காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேஷன் போல் ஆகிவிட்டார். அவர் நடிகர் திலகம் என்ற பட்டம் பெற்றவர்.

அந்தளவுக்கு நடிப்பின் உச்சத்தில் இருந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு அந்த இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று நமது ஜனாதிபதி அந்த குறையை நிவர்த்தி செய்துள்ளார். ஜனாதிபதிக்கு உலக மகா நடிகன் என்ற பட்டம் வழங்கலாம். அந்தளவுக்கு நடிக்கின்றார். பிள்ளைகளைக் கொஞ்சுகின்றார்.வயோதிபர்களை கட்டி அரவணைக்கின்றார். மக்களிடம் குசலம் விசாரிக்கின்றார். எந்த நாளும் திறப்பு விழாக்களில் பங்கேற்கின்றார். ஒரே திட்டத்தை கட்டம் கட்டமாக முடித்து ஒவ்வொரு கட்டத்துக்கும் தனித்தனியாக திறப்பு விழா நடத்துகின்றார். இப்டியே அவரின் நாடகம் நீடிக்கின்றது. 29 ம் திகதி ஜெனீவாவில் என்ன நடக்கும் அதன் பிறகு நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்றெல்லாம் மக்கள் கவலை படத் தொடங்கியுள்ள நிலையில் அவற்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி அவர் தனது திறப்பு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்.


அம்பாந்தோட்டையில் இருந்து ஒரு லொறி கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. ஜெனீவாவில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்களின் கையெழுத்துக்கள் திரட்டப்படுகின்றனவாம். 20 லட்சம் மக்களை கொழும்பில் திரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றார்களாம்.இவற்றை எல்லாம் செய்வதால் ஜெனீவாவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை நிறுத்த முடியமா? முடியும் அதை நிறுத்துவதற்கான சில உத்தேச வழிமுறைகள் பற்றி சில அமைச்சர்கள் தமது யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். 

ஆனால் சாத்தியமான அந்த விடயங்களில் கவனம் செலுத்தாமல் சாத்தியமற்ற போலி நடவடிக்கைகளிலும் மக்களை ஏமாற் றும் கைங்கரியங்களிலும் தான் அரசு ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் போக்கு தான் இன்றைய நிலைக்கு காரணம். சர்வதேச மட்டத்தில் அரசுக்கு இந்த நிலை ஏற்பட காரணமாக இருந்த அமச்சர்கள் இன்று வாய்மூடி மௌனமாகியுள்ளனர். ஜ. எல். பீரிஸ் தனியாக தவித்துக் கொண்டு இருக்கின்றார்.ஜனாதிபதியும் ஐ. நா ல் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் எந்தவொரு காரியமும் இதுவரை நடக்கவில்லை என்று தான் நேற்று வரை சர்வதேச அமைப்பில் இலங்கை பற்றி கூறப்பட்டுள்ளது 2009 செயலாளரும். 

தருஷ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி அதை புறந்தள்ளிவிட்டு அரசு உருவாக்கிய பொறிமுறை தான் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு. அந்த குழுவின் பரிந்துரைகளை அமுல் செய்யுமாறுதான் அரசை சர்வதேச சமூகம் கேட்கின்றது. அதுபற்றி கூட இன்னும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதை அமுல் செய்தால் அநேக பிரச்சினைகளுக்கு தானாகவே தீ H வு கிட்டிவிடும்.


காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் இன்று ஜெனீவாவில் உள்ளார். அவர் அங்கு சென்று நியாயம் கேற்க காரணம் என்ன? அவருடைய கணவர் பிரான்ஸில் இருப்பதாகவும் அவரை தான் கண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரைத்த பொய் தான் பிரகீத்தின் மனைவியை இன்று ஜெனீவாவுக்கு கொண்டு சென்றுள்ளது. பிரகீத்தை ஜெனீவாவில் கண்டது உண்மையெனில் அது பற்றி அங்கு வைத்தே சம்பந்தப்பட்ட தரப்பினர் ஊடாக சரியான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று அவரின் மனைவி அரசுக்கு எதிராக ஜெனீவா சென்று நியாயம் கேற்கத் தேவையில்லை.


இலங்கைக்கு எதிரன தீர்மானம் என்பது அரசாகவே கேட்டுப் பெற்றுக் கொள்ளும் ஒன்று என்றே எண்ணத் தோன்றுகின்றது. அன்றாட நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தான் எண்ணத் தோன்றுகின்றது. 29 ம் திகதி எமக்கு எதிரான தீர்மானம் வரவுள்ளது. ஆனால் நாட்டில் நடப்பதை பாருங்கள் தனியாக வசித்து வந்த தாயும் 13 வது மகளும் எந்த நியாயமும் இன்றி சோடிக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக மனித உரிமை செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடபட்டு வந்தவர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்படுகின்றனர். 

நாடு இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாட்டை மேலும் சிக்லுக்குள்ளாக்கும் நபர்கள் யார்? இவர்களை கைது செய்யும் உத்தரவு எங்கிருந்து பிறப்பிக்கப்படுகின்றது?அரசை சிக்கலுக்குள் தள்ளுபவர்கள் வெளியில் இல்லை. அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நிகழ்வுகள் அரசுக்குள் இருந்து தான் அரங்கேறுகின்றன. அவர்கள் அரசுக்குள்ளே இருந்து கொண்டுதான் செயற்படுகின்றனர்.அவர்கள் யார் என்பதை கண்டு பிடியுங்கள். பொலிஸார் என்ற வார்த்தையை கேட்டாலே மக்கள் இன்று அச்சம் கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. இது ஐ.தே. கவின் சதி இது அவர்கள் சதி இவர்கள் சதி என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கண்டபடி கதை அளக்கின்றார். ஆனால் தமக்கு வேண்டாதவர்களை தமது வலையில் சிக்கவைத்து உள்ளே தள்ளுவதற்கு அவர்கள் தான் உண்மையில் சதி செய்கின்றனர். பொலிஸ் மா அதிபரும் தேர்தல் ஆணையாளரும் இன்று ஒரே நிலையில் தான் உள்ளனர். இருவருக்குமே தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாத நிலை. அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாத அவல நிலையில் தான் இருவரும் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையாளருக்கு இருக்கின்ற அதிகாரங்களில் ஐந்து வீதம் கூட எனக்கு இல்லை என்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதை தடுக்க முடியாத கையாலாகாத நிலையில் நான் இருக்கின்றேன் என்றும் தேர்தல் ஆணையாளர் வெளிப்படையாகவே கூறுகின்றார். தேர்தல் சட்டங்கள் மீறப்படும் நிகழ்வுகள் இன்று செய்திகளாக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

அம்பாந்தோடடையில் அடாவடித்தனம் புரிந்த அரச தரப்பு வேட்பாளர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இவரால் தாக்கப்பட்டவர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தான் இன்றைய நிலை. இப்போது இணையத்தளங்களைக் கண்டு அரசுக்கு அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது.அடுத்தடுத்து இணையத் தளங்கள் தடைசெய்யப்பட்டு வருகின்றன. இணையத் தளங்கள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஒருசில நிமிடங்களில் இலட்சக்கான மக்கள் அரசுகளுக்கு எதிராக வீதிகளில் திரட்டப்பட்ட அண்மைக்கால உலக வரலாற்றை நாம் நினைவூட்ட விரும்புகின்றோம். பேஸ்புக்கை பாவித்துக் கொண்டே அமைச்சர்கள் பலர் அது கூடாது என்றும் கூறிவருகின்றனர். இன்று ஊடகங்கள் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் உள்ள ஊடகங்களில் முக்கால் வாசி தற்போது ஆளும் குடும்பத்துக்கு உரியதாகிவிட்டன. ஒரு சில தான் எஞ்சியுள்ளன. யாரையாவது போட்டு எப்படியாவது ஊடக நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தமதாக்கிக் கொள்கின்றனர். 

இந்தளவு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து தான் வருகின்றதோ கடவுளுக்குதான் வெளிச்சம். உயிர் வாழ முடியாது இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் மக்கள் இன்று தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது. வயதான முதியவர்கள் கூட இன்று இந்த துரதிஷ்டமான முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவற்றை நாம் மக்களுக்கு விளக்குவதற்காகத் தான் தொடர்ச்சியாக ஊடக சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். நாட்டு நிலைமையை மக்களுக்கு உணர்த்த வேண்டிய மகத்தான பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு. எனவே எமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்து மக்கள் விழிப்புணர்வு பெற எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :