முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்காக தீவிரவாத கும்பல்கள் இனவாத நடவடிக்கையில் ஈடுபாடு - ஹக்கீம்



பௌ
த்த விஹாரையில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால், முஸ்லிம்கள் அங்கு சென்று வாக்களிக்க கூடாதென நான் கூறியதாக பஞ்சாயுத அமைச்சர் விமல் வீரவங்ச கூறியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அபாண்டம். நான் அவ்வாறு எங்குமே கதைக்கவில்லை.நாட்டின் பெரும்பான்மை மக்கள் என் மீது வெறுப்படைய வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு பொய் சொல்கிறார்.

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மேல் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மாதம்பிட்டி, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் திங்கள் கிழமை (24) இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்று பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

இந்தத் தேர்தல் காலம் விசித்திரமானதாக மாறியிருக்கிறது. யாராலும் அசைக்க முடியாது என்று நினைக்கின்ற அரசாங்கம், அபிவிருத்திகளை அள்ளிக்கொட்டுகின்ற அரசாங்கம் ஜெனீவாவில் கண்டனப் பிரேரணை வரப்போகின்றது. அதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கின்ற நிலைமைக்கு வந்திருக்கின்றது. ஜெனீவா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் நாளுக்கு மறுநாள் தான் தேர்தலும் நடக்கிறது.

என்னுடைய பார்வையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி அதன் தலைமைத்துவத்தைப் பற்றியும் எதிர்க்கட்சியினர் விமர்சனங்கள் செய்வதைப் பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதன் மூலம் தான் அவர்கள் தங்களது அரசியலை நிமிர்த்திக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். சமூகத்தின் மீதுள்ள எங்களது கடமையை மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் செய்து வரும் நிலையில், தற்பொழுது தலைதூக்கியுள்ள தீவிரவாத சக்திகளோடு முட்டி மோதிக்கொள்ளும் நிலையில், அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டே நாம் நிறைய போரடி இருக்கிறோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பேச்சுகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் அடிக்கடி ஊடக மாநாடுகளை நடத்தி வருகின்றனர். அத்துடன் என்னைக் காரணமாக வைத்து சிங்களப் பெரும்பான்மை மக்களை தூண்டிவிட்டு, அதில் குளிர் காய்ந்து, வாக்குகளை சூறையாடும் கீழ்தரமான செயலில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். பலமான நிலையில் இந்த அரசாங்கம் இருக்கிறதென்ற பார்வையின் காரணமாக பஞ்சாயுத (திரிசூல) அமைச்சர் விமல் வீரவங்ச நான் கூறாதவற்றை கூறியதாகச் சொல்லி வீணான புரளியை கிளப்புகிறார்.

பௌதத விஹாரைகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டால், முஸ்லிம்கள் அங்கு சென்று வாக்களிக்க கூடாதென நான் கூறியதாக பஞ்சாயுத அமைச்சர் வீரவங்ச கூறியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அபாண்டம். நான் அவ்வாறு எங்குமே கதைக்கவில்லை. நான் பக்குவமில்லாமல் பேசுவதாக - சந்தர்ப்பவாதத்துக்காக இனவாதத்தை தூண்டுவதாகக் கூறி, நாட்டின் பெரும்பான்மை மக்கள் என் மீது வெறுப்படைய வேண்டும் என்பதற்காக அவர் பொய் சொல்கிறார்.

இதனூடாக இந்த நாட்டின் இன ஒற்றுமைக்கு நான்தான் குந்தகமாக இருக்கிறேன் என்று எடுத்துக்காட்டுவதே அவரது நோக்கமாகும். இதனால் அவர்களது வாக்கு வங்கியை கூட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார். பஞ்சாயுத அமைச்சரைப் பற்றி நான் அதிகமாக பேச வேண்டிய அவசியமில்லை. வேறு எவருக்கும் இல்லாத தேசப்பற்று அவருக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். அத்துடன் மற்றவர்களுக்கு தேசப்பற்று என்பது இல்லை என்றும் அவர் நினைக்கிறார்.

அந்த அமைச்சர் உண்ணாவிரதம் இருந்து பழக்கப்பட்டவர். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன் போய் சாகும் வரை உண்ணாவிரதம் எனக் கூறி, போர்த்திக்கொண்டு உறங்கினால் அடுத்த நாளே பாங் கீ மூன் வீட்டுக்கு போய் விடுவார் என்றும் அவர் நினைத்தார்.ஆனால், அவர் எதிர்பார்த்தது போல எதுவுமே நடக்கவில்லை. 

நாட்டுத் தலைவர் வந்து பால் பருக்கியதன் பின்னர் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு, எழுந்து சென்றது எல்லோருக்கும் தெரியும். வீதியில் இறங்கி கூச்சலிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, சாகும் உண்ணாவிரதம் இருந்து சர்வதேசத்தின் கண்டன தீர்மானமொன்றை மாற்றிவிடலாம் என்பது வெறும் அபத்தமாகும்.இராஜதந்திர ரீதியாக அணுகுவதை விடுத்து இவ்வாறான கண்மூடித்தனமான செயல்களில் ஈடுபட்டதால் தான் நாடு இன்று சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

இதை அரசாங்கத்தின் நன்மைக்காகவே நாம் கூறுகிறோம். இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை கைவிட்டு, வேறு வழிவகைகளைக் கையாள்வது ஒருபோதும் பயனளிக்காது. இந்த நாட்டில் வாழும் சகல மதங்களையும் மதிக்கின்ற, நல்லுறவைப் பேணும் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தடையாக இனவாத சக்திகள் இருக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளரான ஜாதிக ஹெல உருமய வைச் சேர்ந்த உதய கம்மன்பில எழுதியிருந்த ஒரு கட்டுரையில், 1915 ஆம் ஆண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தைப் போன்று இன்னொரு கலவரம் வெடிப்பதற்கான ஆயத்தம், கட்டாயம் ஏற்படப்போகிறது என்று அபாய அறிவிப்பு செய்துள்ளார். அந்த நோக்கத்துடன்தான் தீவிரவாத கும்பல்கள் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் நான் இந்த நாட்டில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என நினைக்கும் மனப்போக்கு மாற வேண்டும் என்று கூறி வருகிறேன். முஸ்லிம்கள் எந்தவிதமான தீவிரவாதத்திலும் இங்கு ஈடுபடவில்லை.ஆனால், தீவிரவாதிகளாக காட்டப்படுகிறார்கள் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :