அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் பலம் எந்த சக்திகளுக்குமில்லை - அமைச்சர் நிமல் சிறிபால சில்வா



சிரியா, மற்றும் எகிப்து போன்றதொரு நிலையை உருவாக்க சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் ஒன்றிணைந்து பதில் கொடுக்கும் தருணம் இதுவென பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று மாத்தறையில் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அமைச்சர் உள்நாட்டில் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் பலம் எந்த சக்திகளுக்குமில்லை எனவும் அதனால்தான் வெளிநாடுகளின் பலத்தோடு காலைவாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டதுடன் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மாத்தறை அக்குரஸ்ஸ நகரில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: -

ஜெனீவாவில் நாட்டை நேகிக்கும் 5000 இலங்கையர் இலங்கை மீது கைவைக்கக் கூடாது என்று நேற்றைய தினம் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். இது எமக்குப் பெரும் சக்தியாக அமைந்தது. இது மாகாண சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் தேர்தல் மட்டுமல்ல.நாட்டையும், அரசாங்கத்தையும், கட்சியையும் பாதுகாக்கின்ற அதற்குப் பதில் கொடுக்கின்ற தேர்தல் இது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு எதிர்கால சந்ததிக்கு அமைதியான நாட்டைப் பெற்றுக்கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இதற்காக சர்வதேசம் அவரைப் பாராட்டி 'நோபல்' பரிசு வழங்க வேண்டும். எனினும் அரசாங்கத்தைப் பலவீனமாக்கி காலை வாரி விடும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

சிரியா, எகிப்து போன்ற நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளின் கோட்டையாக்கப் பட்டுள்ளன. எகிப்தில் நேற்று 512 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் 'வளைகுடா வசந்தத்தின்' பிரதிபலன். இலங்கையிலும் நாட்டை சீர்குலைக்கவும் எம்மைக் காலைவாரி விடவும் முயற்சிகள் நடக்கின்றன.

உள்நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட எவருக்கும் பலம் கிடையாது அதனால் சில சக்திகள் வெளிநாடுகளின் உறுதுணையுடன் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றன.

இன்னொரு சிரியாவாக எகிப்தாக இலங்கையை இட்டுச் செல்ல இடமளிக்க முடியாது.இத்தகைய சர்வதேச சூழ்ச்சிகளை எமது மக்கள் உணர்ந்துகொண்டு அரசாங்கத்தை மேலும் பலப்படுத்தவும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். இந்த தேர்தலில் அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :