ஆண், பெண் என அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளை உடனே விலைபேசி விற்ற பெற்றோர்கள் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த நாம், குழந்தைகளை மீட்கும் நடவடக்கையில் இறங்கினோம், நமது உதவியுடன் பெண் குழந்தையை மீட்ட போலீசார்,ஆண் குழந்தையை மீட்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த விபரம் வருமாறு: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம்,அம்மம்பாளையம் கிராமம், அம்மன்நகரை சேர்ந்த சுரேஷ் (44) என்பவரின் மனைவி மலர் (36) என்பவருக்கு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 17.9.2013 அன்று, காலை 08.47,மணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு மணி நேர இடைவெளியில், 10.47மணிக்கு, மீண்டும் மலருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள இந்த தம்பதிக்கு இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளுடன் ஆறு குழந்தைகள் இருப்பதால்,இப்போது குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளும்படி மருத்துவர்களும்,செவிலியர்களும் கூறியபோது, கணவன் மனைவி இருவருமே அதற்கு ஒத்துகொள்ள மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில், பிறந்துள்ள இரண்டு குழந்தைகளையும் விற்பனை செய்யும் நோக்கில் சில ஆட்களை கூட்டிகொண்டு வந்து மருத்துவமணையிலேயே விலை பேசியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு பிறகு இரு குழந்தைகளையும் மனைவி மலரையும் வீட்டுக்கு கூடிபோய் விட்டார் சுரேஷ்.
எப்படியும் இந்நேரம் அந்த குழந்தைகளை விலைக்கு விற்றிருப்பார்கள் என்று நம்மிடம் கூறிய மருத்துவமனை ஊழியர்கள், வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அவர்கள் குழந்தையை விற்று விட்டார்களா? அல்லது கொன்று விட்டார்களா? என்பதை போய் பாருங்கள் என்று நம்மிடம் கூறினார்கள்.
ஆத்தூரிலிருந்து தலைவாசல் செல்லும் சாலையில் நான்காவது கிலோ மீட்டரில் இருக்கும் அம்மன் நகர் கிராமத்துக்கு சென்றோம். இரட்டை குழந்தைகளை பெற்றுள்ள சுரேஷ்,மலர் தம்பதிய பற்றி விசாரித்ததும், துணி துவைக்கும் வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆண் குழந்தையை விற்பனை செய்ய விலை பேசி வருகிறார்கள். பெண் குழந்தையை யாருக்கோ கொடுத்துவிட்டதாக சொன்னாங்க..,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்றால் உடனடியாக அம்மன்நகரிலிருந்து சுரைக்காய்புதூர் போகும் பாதையில் போனால், மாரியம்மன் கோயில் இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் கடைசி வீடு, புருசன் பொன்டாட்டி இரண்டுபேருமே வீட்டில் தான் இருக்கிறார்கள் போய் பாருங்கள் என்று சொன்னார்கள்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சில நூறு அடி தூரத்தில்,குடியிருக்கும் சுரேஷ், மலர் தம்பதியை சந்தித்தோம், எங்களுக்கு குழந்தை வேண்டும் என்று கேட்டோம். எங்கிருந்து வருகிறீர்கள். குழந்தை உங்களுக்கா? வேறு யாருக்காவது கொடுக்கவா? ஆண் குழந்தை வேண்டுமா? பெண் குழந்தை வேண்டுமா என்று கேட்ட சுரேஷ் நம்முடைய செல்போன் நம்பரை தன்னுடைய டைரியில் குறித்து கொடுக்கும்படி வாங்கிக்கொண்டார்.
எந்த குழந்தை வேண்டும் என்று கேட்ட அதிர்ச்சியில் இருந்த நமக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. குழந்தை எனக்கு இல்லை என்னுடைய அத்தைக்குத்தான் வேண்டும், நாங்கள் பால் சொசைட்டிக்கு வந்தோம்,அங்கே தகவல் சொன்னார்கள், அதனால் தான் விசாரித்துவிட்டு போகலாம் என்று இங்கே வந்தோம். சாயங்காலம் எங்க அத்தையை கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று சொன்னோம்.
சரி நான் சாயங்காலம் உங்களுக்கு போன் செய்கிறேன், ஆண் வேணுமா பெண் வேணுமா என்று முடிவு செய்து வையுங்கள் விலையை பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நம்மிடம் சொன்னார் சுரேஷ்.
அப்போது, வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த மலர் “வாடி இங்கே” என்று ஒரு பத்து வயதுக்குமேல் இருந்த சிறுமியை பார்த்து மிரட்டினார். மலரின் பேச்சை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த சிறுமி அங்கேயே உட்காந்திருந்தாள். இது யாரும்மா என்று கேட்டோம், இதுதான் எம்பட மொத புள்ளை என்றார் சுரேஷ். அப்போது, சுரேஷின் காலை கட்டிக்கொண்டு நின்ற ஒரு பையனை யார் என்று கேட்டோம். இவன் நாலாவது பையன் என்றார். இன்னும் இரண்டு பேர் எங்கே என்று கேட்டோம். அதுக “ஸ்கூலுக்கு” போயிருக்கு என்று சொன்னார்.
ஏம்மா நீ படிக்க போகலையா..? என்று அந்த சிறுமியிடம் கேட்டோம், “தோ நிக்குது பாருங்க அதுகளை கேளுங்க” என்று தன்னுடைய அப்பா அம்மாவை பார்த்து கைகாட்டினார். இல்லைங்க... இது சும்மா சொல்லுது, அந்த புள்ளைக்கு படிப்பு சரியா வரலை அதனால நிப்பாட்டிடோம் என்று சொன்னார் சுரேஷ்.
“இல்லைங்க அண்ணா நான் நல்லாத்தான் படிச்சேன்”, அம்மம்பாளையத்துலே எட்டாவது முடுச்சிடேன், ஒன்பதாம் வகுப்புக்கு காட்டுகோட்டை போக என்னை விடமாட்டீங்குறாங்க... என்று பரிதாபமாக சொன்னாள் அந்த சிறுமி.
நானும், வீட்டுக்காரரும் தினமும் கூலி வேலைக்கு போய்விடுவோம், சின்ன பிள்ளைங்களை பாத்துக்க ஆள் இல்லை அதுனாலேதான் பள்ளிகூடத்துக்கு அனுப்பமுடியலை என்று சொன்னார் மலர்.
சரி இப்போ பிறந்த குழந்தைகள் எங்கே,நாங்க பாக்கலாமா? என்று கேட்டோம். இங்க வச்சு பராமரிக்க இடவசதியும் இல்லை, ஆள் வசதியில்லை. அதனாலே எங்க அப்பா வீட்டுலே கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டோம் என்றார் சுரேஷ்.
தாய் ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கமா? குழந்தைகள் பாலுக்கு என்ன செய்யும் என்று கேட்டோம், பொறந்தப்பவே பவுடர் பால் தான் குடுத்தோம், அதெல்லாம், குடிச்சிட்டு நல்லா தூங்கிகிட்டு இருக்குது என்றார்.
இதற்கிடையில், பக்கத்துவீட்டு பெருசு ஓன்று வந்து யாருப்பா அது என்று நம்மை பார்த்து கேட்டதும், பெரிய புள்ளையை பள்ளிகூடத்துக்கு அனுப்பச்சொல்லி வாத்தியாருங்க வந்து கூப்படறாங்க அப்பா என்ற அவருக்கு “அல்வா” கொடுத்தார் சுரேஷ். இதுகிராமம் அப்படி இப்பிடி பேசுவாங்க. நான் உங்களுக்கு சாயங்காலம் போன் செய்கிறேன் சார் என்று நம்மை அனுப்பிவைத்தார் சுரேஷ்.
நாம் போன் வரும் என்று காத்திருந்தோம், இரண்டு நாட்கள் போன் வரவில்லை. பிறகு என்ன நடந்தது என்று விசாரித்ததில், ஆண் குழந்தையை மதுரையை சேர்ந்த ஒருவருக்கு ரூபாய் 75 ஆயிரத்துக்கும், பெண் குழந்தையை காந்திபுரம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் 21-ம் நம்பர் வீட்டில் குடியிருக்கும், கலைச்செல்வி (46)என்ற பெண்ணுக்கு ரூபாய்25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்ய விலை பேசியுள்ளார்கள். முன் வைப்புத்தொகையாக கலைச்செல்வி 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இன்னும் குழந்தையை வாங்கிகொண்டு போகவில்லை என்று சொன்னார்கள்.
பெண்குழந்தை வாங்கிகொண்டு போனதாக சொல்லப்படும், சமத்துவபுரம் கலைச்செல்வி வீட்டுக்கு போனோம், கலைச்செல்வியும், அவரது அம்மா பச்சா என்பவரும் இரண்டு நாட்களாக வெளியூர் சென்றதாக சொன்னார்கள். கணவரை இழந்த இந்த செல்விக்கு22வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பக்கத்து வீட்டில் இருக்கும் ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட காதலில் இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதில், செல்வியின் மகன் மட்டுமே இறந்து விட்டதாக சொன்னார்கள். அக்கம் பக்கத்தில் யாருக்கும் பெண் குழந்தையை கலைச்செல்வி வாங்கிக்கொண்டு வந்தது பற்றிய விபரம் தெரியவில்லை.
இந்த சம்பவங்களை விசாரணை மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட நாம், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவகி அவர்களிடம், சுரேஷ் மலர் தம்பதிகள் குழந்தைகளை விற்பனை செய்தது குறித்தும், கலைச்செல்வி என்பவர் முறையாக குழந்தைகயை தத்து எடுக்காதது குறித்தும் புகார் தெரிவித்தோம்.
குழந்தை விற்கப்பட்டது சட்டத்திற்கு முரணானது என்று கூறிய தேவகி அவர்கள்,உடனடியாக குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்தார். செவ்வாய்க்கிழமை மாலை 4மணிக்கு சேலம் ஆள்கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ. ஜெயராணியுடன் கிளம்பி ஆத்தூர் வந்தார்.
ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் உதவியோடு,குழந்தையை விற்ற சுரேஷ் மலர் குடியிருக்கும் அம்மம்பாளையத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தியதில்,தங்களால் குழந்தையை பராமரிக்க முடியாது என்பதால் ஆண் குழந்தையை எங்களுக்கு தெரிந்த கிருஷ்ணவேணி என்பவருக்கு தத்து கொடுத்துவிட்டோம் என்றும், பெண் குழந்தையை வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்துவிட்டது என்றும் சொன்னார்.
ஆண் குழந்தை எங்கே உள்ளது என்று கேட்டபோது, முத-ல் தகவல் சொல்ல மறுத்தார் மலர். அதன்பிறகு இறந்ததாக சொல்லப்பட்ட குழந்தை நமக்கு தெரியும் என்பதால், அந்த இடத்திற்கு நாம் காவல்துறை அதிகாரிகளையும், தேவகி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றோம்.
அப்போது இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தையை வைத்திருந்த கலைச்செல்வியிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்ட தேவகி அவர்கள், தன்னுடன் வந்திருந்த பணியாளர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
பிறகு போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்த பிறகு, ஆண் குழந்தை கெங்கவல்- தாலுக்கா24 கிருஷ்ணாபுரம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் இடத்தில் இருக்கும் போர்வெல் லாரி ஓட்டுநரான பெரியசாமி என்பவரின் மனைவி கிருஷ்ணவேணியிடம் கொடுத்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து போலீசார், கிருஷ்ணாபுரம் சென்று குழந்தையை வாங்கிய தம்பதிகளிடம் விசாரணை நடத்தினர். ஆத்தூர் மருத்துவமனையில் பணியாற்றும் துப்புறவு பணியாளர் மகாலட்சுமி என்பவர் மூலம் குழந்தையை வாங்கியதாக தெரிவித்தனர். ஆனால் குழந்தை எங்கே உள்ளது என்பது குறித்து சொல்ல மறுக்கின்றனர். பெரியசாமிக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் இருக்கும்போது, தற்போது குழந்தையை வாங்கியுள்ளது எதற்கு என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment