வடமாகாண சபைக்குத் தேர்தலொன்றை நடத்த முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 13வது திருத்தச்சட்டமூலத்தில்உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்த சரத்துக்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும். உரிய மாற்றங்களைச் செய்யாமல் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதானது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பாக அமையும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்
13வது திருத்தச்சட்டமூலத்தின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதாயின் முதலமைச்சரே நியமிக்க வேண்டும் அல்லது பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் அந்த நியமனம் இடம்பெற வேண்டும். அதேபோல காணி விடயமொன்றில் நடவடிக்கை எடுப்பதாயின் ஜனாதிபதி கூட முதலமைச்சரின் ஆலோசனையுடனேயே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலமானது திருத்தியமைக்கப்பட வேண்டும்.
ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் வடமாகாணசபைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்குப் பாதிப்பு இல்லை. எனினும், அங்கு தேர்தல் நடத்தப்பட முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது.
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் குறித்துக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்துக் குரல் கொடுப்பதில்லை. இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதில் அக்கறையுடைய கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்து பேச்சு நடத்தித் தீர்வொன்றைகாண முடியும். இதனையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்தி வருகின்றார் என்றும் கூறியுள்ளார் .
மாகாணசபை முறையே தேவையில்லை என்பதே எனது கருத்து:ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அருண் தம்பிமுத்து
13 வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக மாகாணசபையின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அருண் தம்பிமுத்து, மாகாணசபை முறையே தேவையில்லை என்பதே எனது கருத்து. மாகாணசபை முறையின் மூலம் வீண் செலவுகளே ஏற்படுகின்றன. இந்த நிலையில் வடமாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட முன்னர் 13வது திருத்தச்சட்டமூலம் திருப்தியமைக்கப்பட வேண்டும்.
1988, 89ஆம் ஆண்டுகளில் வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதும் அங்கு தமிழ்த் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பிரிவினைவாதக் கொள்கையிலேயே உள்ளனர்.
இந்த நிலையில் வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட முன்னர் 13வது திருத்தச்சட்டம் திருத்தப்பட வேண்டும். முன்னர் தமிழ்த் தேசிய இராணுவத்தில் அங்கம் வகித்தவர்கள் தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ளனர். இவ்வாறு இருந்த ஒருவரே தற்பொழுது வடமாகாணசபையின் முதலமைச்சராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் அவர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளவில்லை. எனவும் தெரிவித்துள்ளார்
கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தொகுதியில் உள்ள அமைச்சில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு இருவரும் கூறியுள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பு : இரா. சம்பந்தன்
தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் கோரிக்கைகளுக்கு இணங்கி 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தினை ஒழிப்பதற்கு அல்லது அர்த்தமில்லாத பெறுமதியற்ற பிரயோசனமில்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய ஆகிய கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சிகளும் கோரிக்கை விடுக்கவில்லை. இந்தக் கட்சியினருக்கு உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கையான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாக நான் கருதவில்லை. அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் கருத்தாக நான் கருதவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கருத்தாகவும் நான் கருதவில்லை. இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்தாகவும் நான் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து இதுவென்றும் நாம் கருதவில்லை.
இந்த நடவடிக்கையினை ஒரு போதும் ஏற்க முடியாது. இந்த முயற்சியினை கைவிடுவது நாட்டுக்கும் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நன்மையான முடிவாக அமையும் .பல இன, மத, கலாசார மக்கள் வாழ்கின்ற நாட்டில் அனைவருக்கும் தனித்துவம் உண்டு. இந்த தனித்துவம் பேணப்பட்டால் நாட்டில் ஒருமித்து ஒற்றுமையாக ஒரு தேசிய இனமாக அனைவரும் வாழலாம். ஆனால் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
நாட்டில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்தாலும் ஒரு இனம் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு நியாயமான அரசியல் ஆட்சி தேவையாகும். அதிகாரப் பகிர்வுடனான அரசியல் சமூக பொருளாதார, கலாசார அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்தப் பகுதியில் ஆட்சிமுறை அமைய வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறுபட்ட இன மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறான ஆட்சி முறை நிலவி வருகின்றது. நாகரீகமான முறையில் இத்தகைய ஆட்சி முறை அமுல்படுத்தப்படுகின்றது. இனங்களிடையே அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் அரசியல் சாசனமும் அமைந்திருக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்
ச 2006ம் ஆண்டு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினை நியமித்தார். அதற்கு உதவுவதற்காக இனங்களை சார்ந்த நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார்.
இந்த நிபுணர் குழுவை நியமித்த ஜனாதிபதி பண்டாரநாயக்கா, செல்வநாயகம் ஒப்பந்தம் முதல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை ஆராய்ந்து பார்க்கும் படியும், பல்வேறு நாடுகளில் எந்தவிதமான அரசியல் தீர்வுகள் காணப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயுமாறும் இந்தியாவின் தீர்வு முறையையும் ஆராய்ந்து அதன் பின் உரிய சிபார்சினை செய்யுமாறும் அந்தக் குழுவிடம் கோரியிருந்தார்.
இந்த நிபுணர் குழுவானது பல இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனம் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக தெளிவான அறிக்கையினை வெளியிட்டிருந்தது.அத்துடன் அந்த அறிக்கையில் பல்வேறு இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கான அடிப்படையான பல விடயங்கள் தொடர்பிலும், சிபார்சுகள் செய்திருந்தது.
இந்த நோக்கத்தில்தான் 13 வது அரசியல் அமைப்பு சாசனமும் உருவாக்கப்பட்டது. அரசியல் தீர்வுக்கு இது ஒரு ஆரம்ப முயற்சியாகவே அமைந்தது. அதற்குப் பின்னர் 13 வது அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி அமைத்து அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் மங்கள முனசிங்க, தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையும் தற்போது உள்ளது.
இதேபோல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 1995 , 1997 ,2000 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அவரால் இந்த விடயம் தொடர்டில் பல்வேறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இவ்விதம் நடைபெற்றிருந்தது. இதனை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். 13 ஆவது அரசியல் அமைப்பு சாசனம் உருவாக்கப்பட்ட பிறகு பதவி வகித்த ஒவ்வொரு ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்திலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்தி அமைத்து அதிகாரத்தை கூட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபகாலத்தில் விசேடமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவேன் என்றும் அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வை கட்டியெழுப்புவேன் என்றும் பகிரங்கமாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதி இந்தியாவிற்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் ஐ.நா.விற்கும் அளித்திந்தார்.
இந்த வாக்குறுதிகளை எல்லாம் மீறி ஜாதிக ஹெலஉறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் கருத்துக்களின் நிமித்தம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு அல்லது பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சி எடுப்பது மிகவும் ஆச்சரியமளிக்கும் நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாக நான் கருதவில்லை. அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் கருத்தாக நான் கருதவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கருத்தாகவும் நான் கருதவில்லை. இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்தாகவும் நான் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து இதுவென்றும் நாம் கருதவில்லை.
எனவே இந்த விடயம் தொடர்பில் தங்கது பங்காளிக் கட்சிகளிகளுக்குள் அலசிப் பார்த்திருந்தால் இத்தகைய நிலைப்பாடு ஏற்பட்டிருக்கமாட்டாது.வெறுமனே ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் கருத்தாகவே 13வது திருத்தச் சட்ட ஒழிப்பு அமைய முடியும். இவர்களுக்கு உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கையான விடயமாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே 13வது திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் முயற்சியினை ஜனாதிபதி கைவிடவே்ண்டும். இந்த முயற்சியினை டைகவிடுவது நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் சிறந்த முடிவாக அமையும்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய சகல மக்களும் ஏற்கும் வகையில் அரசியல் தீர்வொன்றினை காண்பதற்கு நேர்மையாகவும், விசுவாசமாகவும் செயற்படவேண்டும்.
அத்தகைய முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்பதை பகிரங்கமாக இந்த வேளையில் கூறிவைக்க நாம் விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளா.LM
0 comments :
Post a Comment