சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு உடனடியாக எட்டாயிரம் அமெரிக்க டொலர்களை (ஏறத்தாழ பத்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) வழங்கியுள்ளதாக அந்நாட்டின் செல்வந்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்காகத் தான் மேலும் உதவவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த எட்டாயிரம் டொலர்களையும் தம்மைச் சந்தித்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் தாம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எஹியா பின் அஸீஸ் அல் ரஷீத் என்ற சுவூதி அரேபிய தனவந்தரும், முக்கிய பிரமுகரும் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை வெள்ளிக்கிழமை(11) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு ஆலோசகர் அப்துல் காதர் மஷூர் மௌலானா ஆகியோரும் பங்குபற்றினார்.
எஹியா பின் அஸீஸ் அல் ரஷீத், சவூத் அவர்களின் சகோதரி இளவரசி அய்லாவின் ஆலோசகரும் ஆவார்.
அவர், ரிசானாவின் விஷயத்தில் தமது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, அவரது வறுமை நிலையையிட்டுத் தாம் வருந்துவதாகவும் அதனைக் கருத்தில் கொண்டே அக் குடும்பத்திற்கான வீடொன்றை நிர்மானிக்க உதவுவதற்குத் தாம் தீர்மானித்ததாகவும் கூறினார்.
இலங்கை அரசாங்கத்திற்கும், இதர சமூகங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைப் பேணுவதற்கும், சவூதி அரேபியாவினுடனான நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும் உதவக் கூடியவராக அமைச்சர் ஹக்கிமை தான் கருதுவதாக அவர் சொன்னார்.
இலங்கையின் வர்த்தக, அபிவிருத்தி முயற்சிகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு சவூதி அரேபிய முதலீட்டாளர்களைத் தாம் ஊக்குவிக்கவிருப்பதாகவும், தாமும் அவ்வாறான பயனுள்ள முதலீடுகளைச் செய்வதற்கு உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத், அவர் வகித்து வரும். முக்கிய அமைச்சுப் பதவிகளினுடாக வளங்கள் நிறைந்து காணப்படும் கிழக்கு மாகாணத்தை நன்கு அபிவிருத்தி செய்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு பெரிதும் உதவமுடியும் என்றும் சவூதி அரேபிய பிரமுகர் நம்பிக்கை வெளியிட்டார்.
தம்மை நேரில் வந்து சந்தித்து முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடியதற்கு அமைச்சர் ஹக்கீம், அரேபிய பிரமுகர் ஏஹியா பின் அஸீஸ் அல் ரஷீத்திற்கு நன்றி தெரிவித்தார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடக ஆலோசகர்
0 comments :
Post a Comment