மருத்துவர்கள் எல்லோருமே வணிகர்களா?


Dr Arshath Ahamed-
யிர் காக்கும் மருத்துவம் எப்படி ஒரு சிறந்த சேவையாக, மனித நேயமிக்க தொழிலாக இருக்கிறதோ அது போலவே அது மிகப் பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கிறது. தனியார் வைத்தியசாலைகளின், மருந்து கம்பெனிகளின் காலாண்டு கணக்கறிக்கைகளை பார்க்கின்ற போது அவர்கள் காட்டுகின்றன "ஈட்டும் இலாபத்தின்" அளவே இதை தெளிவாக விளக்கிட போதுமானது. மனித தன்மை இழந்து, விழுமியங்கள் சிதைந்து, மானுட பெறுமானங்கள் எல்லாம் செல்லாக்காசாக ஆகி விட்ட இன்றைய உலகில் எல்லாமே பணம், பணம் புரட்டுவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்பரேட் உலகத்திலே மருத்துவமும் மிகப் பெரும் பணம் கொழிக்கும் வணிகமாக ஆகியிருக்கிறது என்பது ஒன்றும் வியப்பான செய்தி கிடையாது.
தொழில் புரட்சிக்கு முன்னாத உலகமும் பண்டங்கள் மற்றும் சேவைகளை கொண்டதாகவே இருந்தது. ஆனால் அது பொருட்பண்டங்களை பணப் பெறுமானத்தாலும், சேவை வழங்குதலை அளவிட முடியா மனிதப் பெறுமானத்தாலும்(Values) அளவீடு செய்ததாகவே இருந்தது. கல்விக்கு காசு வாங்குவது, மருந்துவத்திற்கு காசு வாங்குவது அங்கே கிடையாது. அவைகளின் பெறுமானம் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருந்தது. சேவைகளுக்கு விலை நிர்ணயிப்பது அகௌரவாமாக பார்க்கப்பட ஒரு சமூக அமைப்பிலே தான் தீட்ச்சணியம்மிக்க குருவுக்கு தட்சணையும், அனுபவமிக்க வைத்தியருக்கு அன்பளிப்பும் வழங்குவது மரபாக இருந்து வந்திருக்கிறது. இந்த வழக்காற்றியலின் வழி வந்தது தான் அரசனால் வழங்கப்படும் நில புலங்களும், செல்வர்களால் வழங்கப்படும் பொன் பொருட்களும், விவசாயிகளினால் வழங்கப்படும் விளைச்சல் அறுவடைகளும், பண்ணையாரால் வழங்கப்படும் மாமிசமும், பாலும், தயிரும். இது கேட்டுப்பெறுவதாகவோ, நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்படுவதாகவோ இருந்ததில்லை.‌ ஒவ்வொருவரின் தரத்துக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றாற் போல மனமுவந்து வழங்கப்படும் அன்பளிப்பாகவே இவைகள் காணப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிட்டன. சேவைகளும் பொருட்களைப் போன்றதொரு வணிகப் பண்டமாக, விலை குறிக்கப்பட்ட வியாபாரமாக மாறிய இன்றைய உலகில் மருத்துவம் மட்டுமின்றி எல்லா அடிப்படை சேவைகளும் விதி விலக்கில்லாமல் இந்த பொருளாதாரப் பிடிக்குள் சங்கமித்து விட்டது என்பது தான் யாரும் மறுக்க முடியாத உண்மை. இது தான் ரியுசன் மாஸ்டரும், கடை முதலாளியும், கம்பனி மனேஜரும், மார்க்கப் புரோகிதரும் என எல்லாத் தரப்பினரும் பேசுகின்ற மருத்துவ மாஃபியாவின் அடிப்படை.
"உங்கட பேபிக்கி கொஞ்சம் சீரியஸான வருத்தம்தான் அட்மிட் பண்ணுங்க ஒரு நாலு நாள் வச்சி இஞ்சக்க்ஷன் போட்டா எல்லாம் சரியாயிடும்"

"நீங்க மண்ட குத்து எங்கிறது செல நேரம் பெரிய பெரச்சனையா ஈக்கும், எதுக்கும் நாம ஒரு MRI ஸ்கேன் எடுத்து பார்ப்பம்"
"இந்தப் லெப் றிப்போட்ஸ் எல்லாம் எடுத்திட்டு இன்னொரு வீக்கால என்ன வந்து மீட் பண்ணுங்க"
"உங்கட பாதர்ர நிலைமை கொஞ்சம் சீரியஸ். ஸோ இப்ப அவர நோர்மல் வாட்ல வச்சி பார்க்க ஏலா…. ம்ம்.. இப்பக்கி ICU ல அட்மிட் பண்ணுவோம்! சரியா?"
இவைகள் வைத்தியர்களுக்கும் நோயாளிகளுக்குமான உரையாடலில் அடிக்கடி வந்து போகின்ற வசனங்கள். இந்த வசனங்கள் பலருக்கு அப்படியே மறு பேச்சின்றி கேட்கவும் பின்பற்றவும்படுகின்றன வேத வாக்காக இருக்கின்றன. ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. இது பல வேளைகளில் மெய்யாகவும், சில வேளைகளில் பச்சைப் பொய்யாகவும் சொல்லப்படுகின்ற வசனங்கள் என்பது தான் இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமாக, அனுபவமாக இருக்கிறது.
வைத்தியர்களால் சொல்லப்படுகின்ற இவ்வாறான கட்டளைகளில் எது உண்மை? எது பொய்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? என்பதை பிரித்தறிவது கொஞ்சம் சிக்கலானது. நல்ல மருத்துவருக்கும் , மருத்துவ மாபியாவிற்குமான வித்தியாசம் தான் மேலே உள்ள உண்மைக்கும் பொய்க்குமான வித்தியாசம். இவைகள் இரண்டையும் பிரிக்கின்ற கோடு மிக மெல்லியது, அதுபோல மிக்க சிக்கலானது.
நோயாளிகளிடமிருந்து, அவர்களது உறவினர்களிடமிருந்தும் காசு பறிப்பதற்காக வேண்டி தனியார் வைத்தியசாலைகளிலும், தனியார் கிளினிக்குகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்படி மற்ற தொழில்களில் பொய் சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்களோ அது போலவே மருத்துவத்திலும் இருக்கிறார்கள். எப்படி நியாயமாகவும், நேர்மையாகவும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தொழில்களைச் செய்பவர்கள் மற்ற தொழில்களில் இருக்கிறார்களோ அது போலவே மருத்துவத்திலும் நிறையவே இருக்கிறார்கள். இதுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய அடிப்படை. இந்த ஒரு அடிப்படையை தெளிவாக விளங்கி கொண்டால் இப்படியான பணம் பறிக்கும் முதலைகளை, மருத்துவ மாபியாவின் அடிமைகளை கண்டுகொள்வது எப்படி என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

நம்மில் பலருக்கு இருக்கின்ற மிகப் பெரும் பிரச்சினை தான் இந்த மருத்துவ மாஃபியாவில் இருந்து தங்களையும் தங்களது உறவினர்களையும் பாதுகாத்துக் கொள்வது. மருத்துவம் மாஃபியாவிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்ற போர்வையிலே இன்றைய நவீன மருத்துவம் பற்றி , வைத்தியர்கள் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவதும் பரப்புவதும் மிகவும் ஆபத்தானது. இது பாமர மனிதர்களுக்கு நவீன மருத்துவம் மீது இருக்கின்ற நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிடுகிறது. கடைசியில் மாற்று மருத்துவம் என்ற பெயரில் உலா வரும் டுபாக்கூர்களிடம் ஏமாறுவதற்கான வழியாகவும் இதுவே அமைந்து விடுகிறது. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது கதையாக "கேன்சர் என்பது ஒரு நோயே கிடையாது", "டயபடிக் நோயை முற்றாக குணப்படுத்துகின்ற எளிய வழி" போன்ற பதிவுகளும் பின்னூட்டங்களும் வாட்ஸ்அப் பேஸ்புக் முழுக்க ரவுண்டு கட்டி அடிப்பதற்கும் 'சயார்கான்'களினால் கொண்டாடப்படுவதற்கும் இந்த மருத்துவ மாஃபியா பற்றிய தவறான புரிதலே காரணமாக அமைந்துவிடுகிறது.
உண்மை வைத்தியர்களையும் போலி வைத்தியர்களையும் இனங் காண்பது போன்றது தான் நல்ல மருத்துவர்களையும் பணத்தாசை பிடித்த மருத்துவர்களையும் பிரித்தறிவது.அது சிலவேளைகளில் மிக கஷ்டமானதும் கூட. எனினும் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் போது இந்த மருத்துவ வியாபாரிகளை அடையாளம் காண்பது இலகுவானதாக ஆகிவிடும்.
முதலாவது இந்த மாஃபியாவில் இருந்து தப்புவதற்கு நாங்கள் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் தான் அந்த வைத்தியரின் குறிக்கோள். நோயாளிக்கும் வைத்தியருக்குமான உறவு மிக கண்ணியமானது. அது நோயைத் தீர்ப்பது அல்லது அதற்கு உரிய வழிவகைகளை கண்டறிவது பற்றியதாகவே இருக்க வேண்டும். நோய் குறித்த அறிவும் அனுபவமும் உள்ள வைத்தியர் தான் வழங்கிய சேவைக்கான கட்டணம் அறவிடுவது என்பதும் இந்த உறவுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. அதையும் மீறி வேறு ஏதாவது தேவைகளுக்காக அந்த நோயாளியிடம் இருந்து பணத்தை பறித்து எடுப்பது என்பது அறம் கிடையாது. அது அநீதியானது. இதை Conflict of Interest என்று மருத்துவத்திலே அழைக்கப்படும். அதாவது அந்த வைத்தியருக்கு நோயாளியிடம் உள்ள நோயை சுகப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இருக்கக்கூடாது. வைத்தியர் சொந்தமாக லேப் ஒன்றை வைத்திருக்கிற போது சொந்தமாக ஃபார்மசி ஒன்றை வைத்திருக்கின்ற போது அல்லது இவைகளிலிருந்து கமிஷன் ஒன்றை பெறுகின்ற போது கொன்பிலிக்ட் ஒப் இன்ட்ரஸ்ட் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. இவைகளை தடுப்பதற்கு வலுவான சட்ட ஏற்பாடுகள் மருத்துவ துறையிலே இருக்கின்றன ஆனால் அவை எவ்வளவு தூரம் இலங்கை போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றன என்பதுதான் கேள்விக்குரியது. இந்த கென்பிலிக்ட் ஒப் இன்ட்ரெஸ்ட் எல்லாம் வர முடியாத ஒரு இடம் தான் அரசாங்க ஆஸ்பத்திரி. அங்கே யாருக்கும் எப்படியும் பணம் பார்க்க வேண்டிய தேவையில்லை. சிடி ஸ்கேன் எடுப்பதால் வைத்தியருக்கு கமிஷனோ, ஆபரேஷன் செய்வதால் மேலதிக சம்பளமோ கிடைப்பது அங்கே இல்லை. அரச வைத்தியசாலையில் பெரும்பாலும் எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே அங்கே யாரும் தேவையில்லாத பரிசோதனைகளையோ, தேவையில்லாத மருந்துகளையோ நோயாளிகளின் தலையில் கட்டிவிட முடியாது. என்னதான் அரச வைத்தியசாலைகளைப் பற்றி பேசினாலும் சில வேளைகளில் தனியார் வைத்தியசாலைக்கும், கிளினிக்குகளுக்கும் போகவேண்டிய தேவை பலருக்கும் இருக்கிறது. இவ்வாறான நிலைமைகளில் ஒரு வைத்தியரிடம் தனியாருக்கு போகின்ற போது அவரைப் பற்றி கொஞ்சம் விசாரித்து கொள்வது நல்லது. அவர் பணத்தின் மீது ஆசை கொண்டவராக அல்லது அவருக்கென்று சொந்தமாக ஏதாவது மருந்து கம்பெனிகள் வைத்திருக்கிறவராக இருக்கின்ற போது அவருடைய conflict of interest பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகிறது. இதற்காக தனியார் கிளினிக்குகள் நடத்துகிற, தனியார் வைத்தியசாலைகள் நடத்துகிற வைத்தியர்கள் எல்லோருமே இப்படித்தான் என்று கருத முடியாது. நீதமாகவும் நியாயமாகவும் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவைகள் இடம் பொருள் காலம் என்பனவற்றைப் பொறுத்து வேறுபடக் கூடியது. ஒவ்வொரு தனிநபர்களாய் அலசி ஆராயப்பட வேண்டியது.

அடுத்த ஒன்றுதான் இந்த செகன்ட் ஒபீனியன். அதாவது உங்களுக்கு பெரிய அளவில் பணச்செலவு மிக்க ஒரு ட்ரீட்மென்ட்டையோ அல்லது இன்வெஸ்டிகேஷனையோ ஒரு வைத்தியர் பரிந்துரைக்கின்ற போது அது குறித்து இன்னும் ஒரு வைத்தியரிடம், அல்லது மிக்க நம்பிக்கையான குடும்ப மருத்துவரிடம் ஒபினியன் ஒன்றை பெற்றுக்கொள்வதுதான் இந்த செகன்ட் ஒபீனியன். இது மிகச் சிறந்தது. அதிலும் அரசாங்க ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்கின்ற அதே துறையைச் சார்ந்த வேறு ஒரு வைத்தியரிடம் போய் ஒபினியன் அல்லது ஆலோசனை பெற்றுக்கொள்வது மிக மிகச் சிறந்தது. இதன் மூலம் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டுப்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.
நோய் நிலைமைகள் பற்றிய அதன் அடிப்படை பற்றிய புரிதல்களை நாம் வளர்த்துக் கொள்வதும் இந்த பண முதலைகளின் பிடியிலிருந்து தப்புவதற்கான வழியாக இருக்கிறது. இதற்காக வேண்டி சாதாரண பொதுமக்கள் வாசித்து விளங்க கூடிய அளவிலே நிறைய தகவல்கள் இண்டர்நெட் முழுக்க விரவி இருக்கின்றன. என்றாலும் இது குறித்து தேவைக்கு அதிகமாக அலட்டிக் கொள்வதும், அதிக பிரசங்கித்தனமான நடந்து கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல கொஞ்சம் பொது அறிவையும் பாவித்து விவரமாக நடந்துகொள்வது இவ்வாறான வைத்தியர்களின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும். உதாரணமாக இந்த ஒப்பரேஷனை உடனடியாக செய்யவேண்டும் பணத்தோடு வாங்க என்று சொல்லுகின்ற போது பேசாமல் போய் அரசாங்க ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட வேண்டியதுதான். அங்கே உடனடியாக செய்யவேண்டியவை என்று சொல்லக்கூடிய ஒப்பரேஷன்களை உடனடியாகவே செய்து விடுவார்கள். அவைகளை பிந்திப்போடுவது கிடையாது. இரவோ பகலோ எமர்ஜென்சி ஆக மருத்துவம் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் அங்கே எமர்ஜென்சிகவே செய்யப்படும். அதுபோல காலம் தாழ்த்தி செய்யப்படவேண்டிய சிகிச்சைகளும் காலம் நேரம் கிடைத்தால் தான் அங்கே செய்யப்படும். உங்களது அவசரம் மருத்துவத்தின் அவசரம் (Medical Emergency) அல்ல என்பதையும் புரிந்து கொண்டால் சரி.

மருத்துவ மாபியா இருக்கிறது என்பதற்காக எல்லா வைத்தியர்களையும் சந்தேகப்படுவது எல்லோரும் பணத்துக்குப் பின்னால் போகிறார்கள் என்று சொல்வதும் மிக்க அநீதியானது. அது நிறைய நல்ல வைத்தியர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த மருத்துவ மாஃபியாவை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்களும் காட்டிக் கொண்டிருப்பவர்களும் வைத்தியர்கள் தான் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -