முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்பு விரதம் "இப்தார்" என புனித திருக்குர் ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால் தான் எந்தவொரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த தினத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்டபோது அதுதொடர்பாக கருத்துக்கூறிய அரியம் எம்.பி,
ஒவ்வொரு மதமும் அவர்களின் மத சம்பிரதாயங்களுடனும் பக்தியுடனும் வழிபாட்டுடனும் நோன்பு நோற்று அந்த உன்னத விரதத்தை பூர்த்தி செய்வது, ஒவ்வொரு மதத்திற்கும் உரிய தனித்துவமான பாரம்பரியமான நடைமுறையாகும்.
இந்து மதத்தில் கந்தஷஸ்டி, கௌரி, விநாயகர், சோமவாரம், சிவராத்திரி என பல விரதங்களும், கிறிஸ்தவ மதத்தில் உயிர்த்தெழுந்த ஞாயிறு போன்ற விரதங்களும், பௌத்த மதத்தில் பூரணை தின விரதங்களும், உரிய மாதங்களில் உரிய திதிகளில் அந்தந்த மதங்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவ்வாறு தான் இஸ்லாம் மதமும் நோன்பு விரதத்தை மிகமுக்கிய விரதமாக கடைப்பிடிக்கிறது. ஆனால் அந்தவிரத அனுஷ்டானங்களின் போது பிற மதத்தவர்களை அழைத்து ஒரு களியாட்ட நிகழ்வு போன்று, அல்லது பிறந்தநாள் விழா போன்று உணவு விடுதிகள், அலுவலகங்கள்,கடற்கரைகள், பொதுமண்டபங்கள்,வீதி ஓரங்கள் என்பவற்றில் அழைத்து " இப்தார்" நிகழ்வு நடாத்துவது என்பது சிலவேளை முஸ்லிம் மக்களுக்கு அது சரியாக பட்டாலும் ஒரு உன்னதமான விரதத்தை நான் மதிப்பவன் என்ற வகையில் பகிரங்கப்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து விரதம் அனுஷ்டானம் செய்வதை இஸ்லாம் மதம் சம்மதித்துள்ளதா? என்பது எனக்கு தெரியாது.
ஆனால் வழமையாக முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மார்க்கத் தலைவர்கள், முஸ்லீம் வர்த்தகர்கள், முஸ்லிம் சமூகப் பெரியார்கள் "இப்தார்" நிகழ்வுக்காக அழைப்பு விடுவதைப் போல் இப்போது பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரும் இப்தார் நிகழ்வுக்கு அழைப்பு விட்டதையும் ஊடகங்களில் காண முடிந்தது.
எதிர்காலத்தில் பொதுபலசேனாவும் இவ்வாறு இப்தார் நிகழ்வுக்கு அழைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
விரதம் வேறு, விழாக்கள் வேறு இந்துக்களின் பொங்கல் விழா, சித்திரை புதுவருட விழா, தீபாவளி விழா, கிறிஷ்தவர்களின் நத்தார் விழா, ஆங்கில புதுவருட விழா, பௌத்தர்களின் சிங்கள புதுவருட விழா, நோன்மதிவிழா போன்று இஸ்லாமிய மக்களால் மீலாத்துன் நபி, ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா, என பல விழாக்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாறான விழாக்களில் வேற்று மதத்தினர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டம் நடாத்துவதிலும் புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்துவதிலும் தவறில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.
ஆதியில் இருந்து முன்னோர்களான இஸ்லாம் மக்கள் இவ்வாறு விளம்பரப்படுத்தி மாற்று மதத்தவர்களை பக்கத்தில் அமரவைத்து நோன்பு நோற்று புகைப்படம் எடுக்கவில்லை, அவர்கள் எவருமே விளம்பரம் செய்து இப்தார் அனுஷ்டிக்கவில்லை. ஆனால் இப்தார் விரதம் முடிவுற்றபின் றமழான் தினத்தில் தான் எல்லோருக்குமான விருந்தோம்பல்களை மேற்கொண்டதை காணமுடிந்தது.
தற்போது சிலர் இதை அரசியலாகவும் சிலர் தங்களின் விளம்பரத்திற்காகவும் ஊடகங்களில் படம் வருவதற்காகவும் நடாத்துவது போன்று உள்ளது இதை முஸ்லிம் மார்க்க பெரியார்களும் முஸ்லிம் புத்திஜீவிகளும் எதிர்காலத்தில் கவனத்தில் எடுக்க வேண்டும்.
எனவே புனிதமான இப்தார் விரத நிகழ்வை மதிப்பவன் என்ற காரணத்தினால் தான் நான் இதுவரை எந்த இப்தார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவும் இல்லை இனியும் கலந்து கொள்ளவும் மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
jm
.jpg)
0 comments :
Post a Comment