சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “லஞ்சீட்” (பிளாஸ்டிக் லென்ஷீட்) பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டுமென ஆசியாவின் இளம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர் மற்றும் சர்வதேச விருதாளர் செல்வி மின்மினி மின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் தவிசாளர் வெள்ளையன் வினோகான் அவர்களிடம் எழுத்து மூலமாகக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அக்கடிதத்தில், சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குள் இயங்கும் அனைத்து உணவகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் “லஞ்சீட்” பாவனையை முழுமையாகத் தடை செய்ய விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதனை மீறும் நபர்கள் மீது தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “லஞ்சீட்” பாவனை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனைத் தடுக்குவது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமுல்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு மாத அவகாசம் வழங்கி பின்னர் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உணவகங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் “லஞ்சீட்” பயன்பாட்டிற்கு மாற்றாக வாழையிலை, தேக்கிலை, கார்ட்போர்டு பெட்டிகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை பயன்படுத்த முடியும் என்றும், உணவுப் பாத்திரங்களை உரிய வெப்பநிலையில் சுத்தம் செய்து பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்தையும் பேண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையில் விசேட விழிப்புணர்வு உரை நிகழ்த்த அனுமதி வழங்குமாறும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை முன்னெடுத்து நோய்களிலிருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மின்மினி மின்ஹா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :
Post a Comment