புதிய அமைச்சரவை பட்டியல் நாளை?ஆர்.சனத்-
புதிய அமைச்சரவை பட்டியல் நாளை இறுதிப்படுத்தப்படும்
ரணிலுக்கு நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார் நிலையில்
'ராஜபக்சக்களின்'காவலன் என ஜே.வி.பி. சீற்றம்
பிரதமர் விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம்
17 இல் ஜனாதிபதிக்கு பலப்பரீட்சை
கோ ஹோம் ரணில் கோஷமும் ஆரம்பம்

பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.
அமைச்சுகளுக்கான விடயதானங்கள், அமைச்சுகளின்கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் குறித்த ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்று (12) நியமிக்கப்பட்டுள்ளார்.
 
புதிய அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறக்கூடும். நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகள் அலி சப்ரியிடமே கையளிக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு முடிவடைந்த பின்னர், நிதி அமைச்சு பதவியில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், வன்முறைகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச துறந்தார்.
இதனையடுத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்படும் என சஜித் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ என்பதில் தேசிய மக்கள் சக்தியும் உறுதியாக நின்றது.
இதனையடுத்தே பிரதமர் பதவிக்கு, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். இந்நிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதிக்கு அறிவித்தார். எனினும், அந்த கோரிக்கை ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அந்தவகையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை, ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமரின் இந்த நியமனத்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்த்துள்ளது. இது மக்களின் ஆணைக்கு புறம்பான செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. “ ராஜபக்சக்களின் காவலனே ரணில்” என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.
அத்துடன், பிரதமராக ரணிலையும், அவரின் பங்களிப்புடன் அமையும் ஆட்சியையும் ஏற்கவில்லை என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், ஓமல்பே சோபித தேரரும் அறிவித்துள்ளனர். ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்களை, மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டதை எதிர்ப்பவர்கள், கோ ஹோம் ரணில் என கோஷம் எழுப்பவும் ஆரம்பித்துள்ளனர்.
ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என கூறப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதை அவர் இன்று மாலை அறிவித்தார்.
 
அரச பங்காளிக்கட்சிகளாக செயற்படும் இ.தொ.கா., ஈபிடிபி உள்ளிட்ட கட்சிகள் ரணிலுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.
இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா செல்லக்கூடும். பிரதமரை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை இந்திய தூதுவர் விடுப்பார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்றம் 17 ஆம் திகதி கூடுகிறது
அதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அதனை விவாதித்து, வாக்கெடுப்புக்கு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லாமல், ஜனாதிபதியின் நடவடிக்கைமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையாகவே அமையவுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவது குறித்தும் யோசனையொன்று நிறைவேற்றப்பட வேண்டும், அது நிறைவேறினால் மாத்திரமே விவாதம் - வாக்கெடுப்பு இடம்பெறும்.

பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்துள்ளதால், எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதி சபாநாயகர் தேர்வும் இடம்பெறவுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :