அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், யாழ்ப்பாண மாவட்ட மத்திய குழு உறுப்பினர் சகோதரர் கலாபூஷணம் மீரா லெப்பை லாபிர் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும், அன்னார் வடபுலத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அதிக கரிசனை காட்டி வந்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சகோதரர் மர்ஹூம் எம்.எல்.லாபிர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து, கேகாலை மாவட்டம், மாவனெல்லை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையிலும், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததோடு, ஊடகத் துறையிலும் உயரிய பங்களிப்புக்களைச் செய்து வந்திருக்கின்றார்.
நிலைமை ஓரளவு சீரான பின்னர், மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி தனது பணியைத் தொடர்ந்தார். இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுவதில் அவர் நெடுகிலும் அக்கறை கொண்டிருந்தார்.சகோதரர் லாபிர் எப்பொழுதுமே ஆழ்ந்த சன்மார்க்கப் பற்றுடையவராகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் விளங்கினார்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில், "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்ற முக்கியமான பல கூட்டங்களில் இயன்றவரை கலந்துகொண்டிருக்கின்றார்.
கண்டி, பொல்கொல்லையில் இறுதியாக நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அவர் வருகை தந்து முழு நாள் நிகழ்வுகளிலும்,மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸூல் அஃலா என்ற சுவன வாழ்வை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு , அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும்,உறவினர்களுக்கும் கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 comments :
Post a Comment