ஆயிரம் ஜோன்ஸ்டன்கள் வந்தாலும் பொய் உண்மையாகாது. கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ருவர் மீது வீணாக சுமத்தப்படுகின்ற பொய்க் குற்றச்சாட்டுகளை ஆயிரம் ஜோன்ஸ்டன் களாலோ, ஆர்ப்பாட்டங்களாலோ, ஊடக அறிக்கைகளாலோ நீதியின் முன் உண்மையாக்க முடியாது என கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று (19) வியாழக் கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

நேற்று முன்தகனம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள், நடைபெற்ற விசாரணைகள், ஏற்படுத்தப்பட்ட துன்பங்கள், 116 நாட்களாக அநியாய சிறைவாசம் போன்ற அநீதிகளை இந் நாட்டின் சட்டத்தை இயற்றுகின்ற உயரிய சபையிலே முன்வைத்தார்.

அந்த வேளையில் அவரைப் பேச விடாது தடுத்து, குதர்க்கம் புரிந்து அவருடைய நேரத்தையும் வீணாக்குவதற்காகவே சிலரது மேலாண்மை ஆதிக்கம் பயன்படுத்தப் பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய அந்த உயரிய சபையிலே நாடாளுமன்ற உறுப்பினரால், அல்லது கட்சியின் தலைவர் ஒருவரால் தனக்கு ஏற்படுத்தப்படுகின்ற அநீதிகள், சிறப்புரிமை மீறல்கள் பற்றி எடுத்து இயம்புவதற்கான சந்தர்ப்பங்களை திட்டமிட்டு இல்லாமல் செய்கின்ற அசாதாரண நிலைமையை இந்நாட்டு மக்களும் எதிர்கால அரசியல் தலைவர்களாக வரக்கூடிய இளம் சமூகமும் பார்த்து வேதனை படுகின்றன.

பாராளுமன்ற சிறப்புரிமை உள்ள ஒருவருக்கே இவ்வாறு நடக்கின்ற போது சாதாரண ஒரு பொது மகனுக்கு எப்படி தன்னுடைய உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற சந்தேகங்களையும் கேள்விககளையும் நேற்றைய சம்பவங்கள் எழுப்புகின்றன.

இதே போன்றே அம்பாறை கொத்து ரொட்டி பிரச்சினை. கண்டி- திகன பிரச்சினை, உதிர்த்த ஞாயிறு தாக்குதல், பள்ளிகள், கடைகள் மீதான தாக்குதல்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு அநியாயமாகவே தாக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தற்போது நிஜமாகின்றது.

நாட்டின் இறைமையை நிரூபிக்கும் அளவுகோல்களான ஜனநாயகம், சட்டவாட்சி, நீதித் துறையின் சுயாதீனம் என்பவை சவால்களுக்கு உள்ளாக்கப் படுகின்ற எந்தவொரு நாட்டிலும் அபிவிருத்தியையோ, சிறந்த நிர்வாகத்தையோ எதிர்பார்க்க முடியாது.

அநீதியும், அநியாயங்களும், அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்ற போது பேரழிவுகளும், தொற்றுநோய்களும், பசி,பட்டினி, பஞ்சம் போன்ற அனர்தங்களும் ஏற்படும் என்ற உண்மையை இறை நம்பிக்கை கொண்ட எவராலும் மறுக்க முடியாது.

அவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் தான் எமது நாடும் மக்களும் அகப்பட்டுக் கொண்டார்களோ! என்று அச்சமடைய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

எத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும், கூச்சலிட்டாலும், ஊடகங்களில் பேசினாலும் நீதியின் முன் உண்மை ஒன்றே ஜெயிக்கும். தாமதமானாலும் நீதி கிடைக்கும். என நம்புகிறோம்.

எனவே பழிவாங்கும் குரோத அரசியலை கைவிட்டு சட்டம், நீதி, ஒழுங்கு ஜனநாயகம் என்பவற்றை நிலைநாட்டுவதோடு எம் நாட்டை குரோனா அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்து அபிவிருத்தியால் முன்னேற்றுவதற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :