கலைமகள் ஹிதாயாரிஸ்வியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்தஅனுதாபம்



பிரபல கவிஞரும் எழுத்தாளருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் திடீர் மரணம் இலக்கியவாதிகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிஞராக, எழுத்தாளராக, சமூகப் பணியாளராக பல்வேறு தளங்களில் பணியாற்றிய ஒருவராவார். இலக்கியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஏராளமாக ஆக்கங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக அவர் முகநூல் மூலமாக இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வந்ததுடன் கடல் கடந்து வாழும் இலக்கியவாதிகளுடனும் சிறந்ததொரு உறவைப் பேணி வந்தார்.

தடாகம் கலை இலக்கிய வட்டம் எனும் அமைப்பை நிறுவி அதன் ஊடாக ஏராளமான கலை இலக்கிய நிகழ்வுகளை நடாத்தியுள்ளதுடன் தடாகம் எனும் இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளில் இவர் பங்கேற்றுள்ளதுடன், பல இலக்கிய மாநாடுகளுக்கு உள்நாட்டு இலக்கியவாதிகளையும் அழைத்துச் சென்றுள்ளார். பல இளம் இலக்கியவாதிகளை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவரைச் சாரும். குறிப்பாக முஸ்லிம் பெண் இலக்கியவாதிகள் மத்தியில் மிகுந்த பிரபல்யம் பெற்றிருந்த அவர், தொடர்ச்சியாக இலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவராவார்.
ஊடகத்துறையிலும் ஈடுபாடுகாட்டிய அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவருமாவார்.
அந்த வகையில் அன்னாரின் திடீர் இழப்பு கலைத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை அருள்வானாக..

என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
25.11.2020

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :