தனிமைப்படுத்தப்பட்டார் ரவூப் ஹக்கீம்!J.f.காமிலா பேகம்-
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அரசியல் பூகம்பம் ஏற்பட்டிருப்பதாக தாருஸ்ஸலாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தவ்பிக் ஆகிய 04 உறுப்பினர்கள் 20 ஆவது திருத்த யோசனைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள்.

இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத கட்டத்திற்கு காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரியவருகின்றது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக பொறுப்புக்களும் அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டுள்ளன.

இவர்தவிர, முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகவும் தெரிவாகிய வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழ் பிரதிநிதிகளின் கைகள் ஓங்கியெழுகின்ற நிலையில், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த குறித்த 4 முஸ்லிம் உறுப்பினர்களின் தீர்மானத்தினால் கிழக்கு மாகாணத்தில் காங்கிரஸின் அத்திவாரம் அசையத் தொடங்கியிருப்பதை ரவூப் ஹக்கீமுக்கு பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்கு எதிராக அக்கட்சி ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளது.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்துகொண்டு கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஐ ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஹக்கீமுக்கு கோடிட்டுக்காட்டியுள்ள தாருஸ்ஸலாம் பிரதிநிதிகள், எடுத்தவுடனே ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது உறுப்புரிமை நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றும் ஆலோசனை கூறியிருப்பதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலையில் குழப்பகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது முன்னாள் அமைச்சர் ஹக்கீம் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார் என்று கூறினால் தவறில்லை என்று தாருஸ்ஸலாம் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :