சிலோன் மீடியா போரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து செய்தி
"ஒரே நாடு" என்ற ரீதியில் மாகாண வேறுபாடுகளின்றி நாட்டை அபிவிருத்தி செய்யவும், ஊழலற்ற ஆட்சியை கொண்டு செல்லவும் நாம் உறுதுணையாக இருப்போம் என குறிப்பிட்டு சிலோன் மீடியா போரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 28வது பிரதமராக நான்காவது தடவையாகவும் பிரதமர் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சிலோன் மீடியா போரம் பெருமையுடன் வாழ்த்துகின்றோம் எனத்தெரிவித்து சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் மற்றும் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித் ஆகியோர் ஒப்பமிட்டு வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்களது ஆட்சிக் காலத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகளை களைந்து நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து இன அரசியல் தலைவர்களையும் மக்களையும் அரவணைத்து செல்லுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாட்டு மக்கள் தங்களது அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர். இதனை வைத்து நாட்டிலுள்ள சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களது உரிமைகளோடு நிம்மதியாக வாழ்வதற்கும் தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்ற தீர்வினையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதோடு நாட்டை தூரநோக்கோடு அபிவிருத்தியின் பால் கொண்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களது 50 வருட அரசியல் வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள். இந்தத் தேர்தலில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் வேட்டாளர் ஒருவர் தனிப்பெரும் விருப்பு வாக்கினை தாங்கள் பெற்று சாதனை படைத்துள்ளதையிட்டும் வாழ்த்துகின்றோம்.
தங்களது ஆட்சிக் காலத்தில் "ஒரே நாடு" என்ற ரீதியில் மாகாண வேறுபாடுகளின்றி நாட்டை அபிவிருத்தி செய்யவும், ஊழலற்ற ஆட்சியை கொண்டு செல்லவும் நாம் என்றும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாட்டிலுள்ள மூவின ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்த விடயங்களிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு தாங்கள் நீண்ட ஆயுளுடனும் தேக சுகத்துடனும் வாழ பிரார்த்திப்பதாகவும் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment