ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சீராஸ் மொஹமட், நேற்றைய தினம் (30) அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்ட, ஓகொடபொல கிராமங்களில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை வேட்பாளர் அல்ஹாஜ் முஸ்தாக் மதனியின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட பிரதேசத்தில் ஜனாஸா நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே பல்வேறு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஓகொடபொல பிரதேசத்தில் உள்ள "அமானா - மகளிர் ஜனாஸா நலன்புரிச் சங்கம்" இன் அங்கத்தவர்கள், மற்றும் பிராந்தியத்திலுள்ள முக்கியஸ்தர்களுடன் பல்வேறு சந்திப்புக்கள் நடாத்தப்பட்டன.
தொடர்ந்தும் கஹட்டோவிட்ட பிரதேசத்தின் நீண்ட கால சுதந்திர கட்சி முக்கியஸ்தர் வஸீர் அவர்களது இல்லத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேசத்திலுள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களான பலநூறு அங்கத்தவர்களைக் கொண்ட Kahatowita Football Club (KFC), Kahatowita JF விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடன் இரு வேறு சந்திப்புக்கள் இடம்பெற்றன.
வேட்பாளர் சீராஸ் மொஹமட் அவர்களுடைய சந்திப்புக்களில் பங்குபற்றிய கட்சி முக்கியஸ்தர்கள், நலன்புரி சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சீராஸ் மொஹமட் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேல்படி சந்திப்புக்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் ஹுசைன் மொஹமட், பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான முன்னாள் அமைப்பாளர் அல்ஹாஜ் ருஸ்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மேல் மாகாண சபை வேட்பாளர் அல்ஹாஜ் முஸ்தாக் உள்ளிட்ட பல கட்சி முக்கியஸ்தர்கள் பங்குபற்றியமை விசேட அம்சமாகும்.