நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
கடந்த காலத்தில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. குறை சொல்ல மாட்டேன் என குறைகூறியே ஜீவன் அரசியலை முன்னெடுப்பதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளருமான சுப்பையா கமலதாசன் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் இந்திய வீடமைப்பு தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக ஜீவன் குமாரவேல் ஆற்றிய உரைக்கு மறுப்பு தெரிவித்து கமலதாசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இதனை தெரிவித்தார்
தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இந்திய அரசாங்கம் இந்திய வம்சாவளி மக்களுக்காக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வழங்கிய 40 பேருந்துகளை தன் குடும்ப பெயரில் கம்பனி திறந்து சொந்த கம்பனி நடத்தியவர்கள் இன்று இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் கூவுகின்றனர்.
இ.தொ.கா வின் சுயநல அரசியலுக்காக இந்திய வீடமைப்பு திட்டத்தினை நுவரெலியா மாவட்டத்திற்கும் பதுளை மாவட்டத்திற்கும் மட்டும் மட்டுப்படுத்திய வர்களுக்கு இதை பற்றி பேச தகுதியில்லை.
அமைச்சர் பழனி திகாம்பரம் காணியுரிமையினை பெற்றுக் கொடுத்த பின்னரே இந்திய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இ .தொ. கா தங்களின் அரசியல் இருப்புக்காக நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மட்டும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை என விஸ்தரித்தார்.
10,000 இந்திய வீடமைப்பு திட்டத்தினை களுத்துறை, மாத்தறை, காலி, குருநாகல் உள்ளடங்களாக 12 மாவட்டங்களில் முன்னெடுக்க ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்தார்.
"குரங்கு கையில் பூமாலை போல பிச்சி பிச்சி" போட்டிருப்பதாக சொல்லியி ருக்கிறார். மலையக மக்கள் வாழும் 12 மாவட்டங்களில் தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி 12 ஆயிரத் துக்கும் அதிகமான குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படவிருக்கும் குடியிருப்புகளாக அனர்த்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பதுளையில் மாத்திரம் 6200க்கும் அதிகமான குடியிருப்புகள் இந்த இடரில் காணப்படுகின்றன. இந்த அனர்த்தத்தில் இருக்கின்றவர்கள் செத்து மடியட்டும் நாம் கனவு கண்டு கொண்டிருப்போம் என இவரது தந்தையைப் போல கனவு மட்டும் கண்டுகொண்டு இருக்க முடியாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கும் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவையிருந்தது. இதனையே முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுத்தார்.
இந்த வீடமைப்புத் திட்டங்களின்போது தோட்டத் தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்க வேண்டுமென பெருந்தோட்ட கம்பனிகள் கங்கனம் கட்டி செயற்பட்ட போதும் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் தோட்டத்தில் தொழில் புரியாத தோட்டத்தில் வசிப்பவர்களையும் உள்ளடக்கியிருந்தோம். டொரிங்டன் மோர்சன், பதுளை செயாவூட், மாத்தளை பிட்டகந்த ,நிக்கலோயா, என பல திட்டங்களை சென்று பார்க்கலாம்.
இவர்கள் கேள்வியே பட்டிராத மொனராகலை அலியாவத்தை, இரத்தினபுரி தும்பர போன்ற பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உட்படாத பிரதேசங்களிலும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்தோம்.
இதையெல்லாம் தெரியாமல் "1000" மட்டுமே பிரச்சினையென கொக்கரிக்கும் உங்களுக்கு இதை பற்றி தெரியாது. நீங்களும் உங்கள் அப்பாவும் கண்ட கனவுகள் எல்லாமே கனவாக மட்டுமே இருந்தமைதான் எங்களுக்கும் கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்