ஜனாதிபதி முதல் கதிர்காம நிலமே சுகாதாரத்துறையினர் வரை இம்முறை பாதயாத்திரை இடம்பெறமாட்டாது என உறுதியாகக்கூறியுள்ளனர். அதனால் காட்டுப்பாதை எந்தக்காரணம்கொண்டும் திறக்கப்படமாட்டாது. எனவே அடியார்கள் எமது உகந்தமலை முருகனாலயத்திற்கு பாதயாத்திரை செல்லும் நோக்கோடு வந்து தங்க அனுமதிக்கப்படமாட்டாது.
இவ்வாறு உகந்தமலை முருகனாலயபரிபாலன சபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) இன்று தெரிவித்தார்.
ஆலய வருடாந்த ஆடீவேல் விழா உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி; தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறும்.
மேலும் தலைவர் சுதா தெரிவிக்கையில்:
இன்றைய கொரோனா காலகட்டத்தில் சிலர் பாதயாத்திரைசெல்லும் நோக்கோடு எமது ஆலயத்திற்கு வருகிறார்கள். எதிர்வரும் 13 ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படுமாம் என்றுகூறிக்கொண்டு வருகிறார்கள். அது பிழையான தகவல். பாதை திறக்கப்படமாட்டாது.
வனவிலங்கு இலாகா பாதுகாப்புப்படையினர் குமண காட்டுப்பிரதேச நுழைவாயிலில் 24மணிநேரமும் தயாராகவுள்ளனர். காட்டுப்பாதை திறக்கப்படமாட்டாது. எனவே யாரும் அதற்காக வரவேண்டாம்.
காட்டுப்பாதைதிறப்பு பற்றிய தீர்மானம் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் திணைக்களத்தலைமைகளுடன் நடாத்தப்படும் பிரதான கூட்டத்தில் தீர்மானிக்கப்படுவது வழக்கம். அங்குதான் காட்டுப்பாதை திறக்கப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உற்சவகாலப்பகுதியில் அன்னதானம் தடைசெய்யப்பட்டுள்ளது. இரவில் தங்குவதற்கு பூஜை செய்யும் உபயகாரர் 50பேரைத்தவிர வேறு யாருக்கும் தங்குவதற்கு அனுமதியில்லை என எமது ஏற்பாட்டுக்குழுக்கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் கானகத்திற்கு மத்தியில் சமுத்திரத்தினருகே மனோரம்மியமான மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது இவ்வாலயம். இது அம்பாறை அம்பாறை மாவட்டத்தின் பாணமைக்கு அப்பால் லாகுகலைப் பிரதேசசெயலாளர் பிரிவில் நடுக்காட்டிற்குள் அமைந்துள்ளது.
கதிர்காமத்திற்கு காட்டுப்பாதையால் செல்வோருக்கு இறுதி ஆலயதரிப்பிடமாகவும் காட்டுபாதயாத்திரையின் நுழைவாயிலாகவும் உகந்தமலை முருகனாலயம் திகழ்கிறது. இங்கும் கதிர்காமத்தையொத்த ஆடிவேல்விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழமையாகும்.