கடந்தகால ஆயுதப்போராட்டத்தால் எமது மண் சிவந்திருக்கிறது. இன்றைய ஜனநாயக சூழலில் ஆயுதமில்லாமல் அறிவுசார்ந்து அந்தமண்ணை காப்பாற்றவேண்டும்.ஒன்றிணைவோம்.வாரீர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் பொறியிலாளர் கலாநிதி செல்வராஜா கணேஸ் அறைகூவல் விடுத்தார்.
காரைதீவில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய வேட்பாளர் கணேஸ் தனது கன்னி உரையின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த முதலாவது தேர்தல்பரப்புரைக்கூட்டம் நேற்று காரைதீவு 7ஆம் பிரிவில் த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. த.தே.கூட்டமைப்பின் மற்றுமொரு வேட்பாளர் திருமதி சின்னையா ஜெயராணியும் கலந்துகொண்டார்.
அங்கு கலாநிதி கணேஸ் மேலும் உரையாற்றுகையில்:
வடக்கு கிழக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய புனிதமண் காரைதீவு. இங்கிருந்துதான் அம்பாறை மாவட்டத்திற்கான அரசியல் புரட்சி உருவாகவேண்டும். மாவட்ட பிரதிநிதியைத்தீர்மானிக்கின்ற சக்தியாகவும் இந்தப்புரட்சிதான் தீர்மானிக்கப்போகின்றது.
கடந்த 13வருடங்களாக மாணவர்மீட்புப்பேரவை மூலமாக நலிவடைந்த மக்களுக்கான கல்வி மற்றும் சமுகசேவையிலீடுபட்டுவந்த நான் அரசியல் ஆளுகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து 2020.03.18ஆம் திகதி முதல் இ.த.அரசுக்கட்சியில் இணைந்து சேவையாற்ற முன்வந்துள்ளேன்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் தென்தமிழீழமான எமது அம்பாறை மாவட்டம் இருபெரும் சமுகத்தினரால் நசுக்குண்டு சின்னாபின்னமாக சிதறுவதைக்கண்ணுற்று இவ் அரசியல்பிரவேசத்தை மேற்கொண்டேன்.
எம் இனத்திற்காக வீரத்தியாகம் புரிந்த இளைஞர்களின் உதிரத்தால் சிவந்துபோன எம் மண்ணை மாற்றினத்திடமிருந்து காப்பாற்றி புதுயுகம் படைக்க உங்களது ஆதரவை வேண்டிநிற்கிறேன்.
அரசியல் கல்வி பொருளாதாரம் எனும் முப்படைகளை மையப்படுத்தி 'நான் எனும் நீங்கள்'; எனும் மகுடத்தில் எனது விஞ்ஞாபனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜ.நா. சிறப்புஅம்ச திட்டத்திற்கமைய ஒவ்வொருவருடமும் பரீட்சிக்கக்கூடியவாறு நடைமுறைப்படுத்தக்கூடிய 5 வருட திட்டத்தை புத்திஜீவிகளினுதவியுடன் வரைந்துள்ளேன்.
எமது இளம்சமுதாயத்தை நிருவாக மையப்படுத்தி எதிர்காலத்திற்கு முன்னெடுத்துச்செல்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிறேன்.
புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் துறைசார் நிபுணர்களையும் இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி எனக்கு பக்கலபலமாக அவர்களது ஆலோசனைகளை உள்வாங்குவேன்.
அரசை நம்புவதற்கு அப்பால் வெளிநாட்டு தூதரகங்களுடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்.
உங்கள் தோட்டா போன்ற வாக்குகளை வீட்டுக்கும் 10ஆம் இலக்கத்திற்கும் அளிப்பதன்மூலம் சிவந்தமண்ணைக் காப்பாற்றமுடியும் என நம்புகிறேன். வெற்றியில் சந்திப்போம் என்றார்.
கூட்டத்தில் 'புளொட்' அமைப்பின் மாவட்ட பிரதிநிதி சங்கரி சட்டமாணி அருள்.நிதான்சன் திவீரஆர்வலர் கே.மதனன் முன்னாள் தவிசாளர் வை.கோபிகாந் சுயேச்சைக்குழுத்தலைவர் எஸ்.நந்தகுமார் அதிபர்கள் புத்திஜீவிகள் ஓய்வுநிலை உத்தியோகர்கள் கட்சி ஆதரவாளர்கள் பெண்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.