" எமது தலைவர் இருக்கும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிநடைபோட்டது. அவர் இல்லாத நிலையிலேயே இம்முறை தேர்தலை எதிர்கொள்கின்றோம். எனவே, இ.தொ.காவுக்கு மீண்டுமொருமுறை அரசியல் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." - என்று இ.தொ.காவின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 (இன்று) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
" எங்களது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இல்லாத நிலையிலேயே இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலை சந்தித்துள்ளது. நாங்கள் எதிர்பாராத விதமாக தலைவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும், எங்களுக்கெல்லாம் தெம்புதருவது போல் தம்பி ஜீவன் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.
அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பலப்படுத்துவதற்காக இளைஞர்களும், மக்களும் இன்று அலைகடலென அணிதிரண்டுள்ளனர். இன்னும் 50 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்த தேர்தல் போடவிருக்கின்றது. எனவே, இது மிகமுக்கிய தேர்தலாகும்.
எங்களின் தலைவரின் ஆளுமை மிகப்பெரியது. அதனை எவராலும் நிரப்பமுடியாது. அவரின் பேரம்பேசும் சக்தி பலமுடையது. அதனைவைத்துக்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிநடைபோட்டது.
தொழில்வாய்ப்பு, இருப்பு என எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே உரிமைகளை வென்றுக்கொடுத்துள்ளது. ஆகவே, மீண்டுமொரு அரசியல் பலத்தை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
15 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு வழிகாட்டுகின்ற மாவட்டமாக நுவரெலியா மாவட்டம் இருப்பதால் இங்கிருந்து கூடுதல் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்லவேண்டும். தம்பி ஜீவன் தலைமையில் எமது உறுப்பினர்கள் ஐவரையும் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்." - என்றார்.