முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் விடுத்த ஊடக அறிக்கைக்கு பதில் கூறியுள்ள ஜமமு செயலாளர் நாயகம் குருசாமி மேலும் கூறியுள்ளதாவது,
எமது தலைவர் மனோ கணேசனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கூறுவது கடும் பிழை. 1998ம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டணியில், எங்கள் ஜதொகா அரசியல் பிரிவு, உங்கள் இதொகா அரசியல் பிரிவு, மறைந்த கந்தையா தலைமையிலான அன்றைய தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் இருந்தன.
இந்த கூட்டணி அன்றைய மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. எனினும் இந்த கூட்டணி, எமது ஏணி சின்னத்திலோ, இதொகாவின் சேவல் சின்னத்திலோ போட்டியிடாமல், பொது சின்னமாக, மறைந்த கந்தையா அவர்களது உடன்பாட்டில் அன்றைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்திலேயே போட்டியிட்டது. இது நாடறிந்த உண்மை. இந்த வரலாறு தெரியாவிட்டால், கணபதி கனகராஜ் பழையவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இதிலேயே தலைவர் மனோ, முதன்முதலில் மேல்மாகாண சபைக்கு போட்டியிட்டு, வெற்றிபெற்றார். எமது ஜதொகா அரசியல் பிரிவு என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிதான் காலத்தின் தேவைக்கு ஏற்ப, மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்று பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று நாட்டில் மதிக்கப்படும் ஒரு கட்சியாக எமது தலைவர் தலைமையில் செயற்படுகிறது.
இந்நிலையில், கூட்டணி என்பது வேறு. அரசியல் கட்சி என்பது வேறு என்ற அரசியல் அறிவை திரு. கணபதி கனகராஜ் தேடிப்பெற வேண்டும். இன்று இந்த கணபதி கனகராஜ், நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க கூட்டணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதற்காக இவர் வெற்றிலை கட்சி ஆகிவிட முடியுமா? இவரது இன்றைய கட்சி இதொகா தானே! அப்படித்தானே எல்லாமே.
இதொகாவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது புதுமையானதல்ல. மலையக மக்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது தம்மால்தான் நடைபெற்றது என உரிமை கோருவது இவர்களது வழக்கம். அரசியல்ரீதியாகவும், தலைவர் மனோவை, தாமே அரசியலுக்கு கொண்டு வந்ததாக இப்போது இவர்கள் உரிமை கோருகிறார்கள்.
மலையக அரசியலில் மட்டுமல்ல, இலங்கை அரசியலிலேயே, எமது தலைவர் மனோ கணேசன் முன்வரிசையில் இருக்கிறார். நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு, தூரப்பார்வை, மும்மொழி அறிவு, அரசியல் நாகரீகம் ஆகியவைகொண்ட ஒரு தேசிய மட்ட தலைவராக மனோ கணேசன் திகழ்கிறார். சிங்கள மக்களும் மதிக்கும் ஒரு தலைவராகவும் விளங்குகிறார். இந்நிலையில், உங்களை போன்றோர் எமது தலைவரை பார்த்து கூறும் பிதற்றல்களை தமிழ் பேசும் மக்கள் கணக்கில் எடுப்பதில்லை. எனவே உண்மைக்கு மாறான கருத்துகளை கூறாமல், நண்பர் கணபதி கனகராஜ் எம் தலைவரை பார்த்து பாடம் படித்து முன்னேற வழி தேட வேண்டும்.
ஆகவே இதிலெல்லாம் நேரத்தை வீணடிக்காமல், நுவரெலியா மாவட்டத்தில் செய்ய வேண்டிய தேர்தல் வேலைகளை செய்யுங்கள். எவராவது முந்திக்கொண்டு ஓடி விட போகின்றார்கள் என நண்பர் கணபதி கனகராஜுக்கு நட்புடன் அறிவுறுத்தி கூறிவைக்க விரும்புகிறேன்.