எனது போராட்டத்தின் வெற்றியே சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டம்; இது எனது நீண்டகால இலக்கின் ஓர் அங்கமாகும்!


தொடர் 01 பகுதி 01
VISSION_MYOWN_MUSTHAFFA-
னது அரசியல் பிரவேசம் கல்முனை புதிய நகர அபிவிருத்தியை பிரதானமாக முன்னிறுத்தியதாகவே இருந்தது. 1994 ஆம் ஆண்டு முழுக் கல்முனை தொகுதியையும் உள்ளடக்கி அதன் மேற்குப் புறமாகவுள்ள வயல் பிரதேசத்தில் கல்முனை புதிய நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் இந்த திட்டத்திற்கான முன்மொழிவை கையளித்திருந்தேன்.
எனினும் அஷ்ரப் அவர்களுடைய காலத்தில் அது உரிய அணுகுமுறையுடன் கையாளப்படாமையால் சாத்தியப்படவில்லை. 2001 ஆம் ஆண்டு, தான் பாராளுமன்ற உறுப்பினராகி முதல் வேலையாக கல்முனையில் நகர அபிவிருத்தி அதிகார சபை காரியாலயத்தை திறந்து, பட வரைவுகள் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுத்திருந்தேன். (நகர அபிவிருத்தி அதிகார சபை காரியாலய உருவாக்கம் தொடர்பாக தனியொரு பதிவுடன் சந்திப்போம்)
இருந்த போதிலும் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் எமது கல்முனைப் பிராந்திய மக்கள் உறவுகளையும் உடைமைகளையும் வாழ்விடங்களையும் இழந்து நிர்க்கத்தியடைந்தபோது அவர்களுக்கான வீடுகளை எங்கு எவ்வாறு அமைப்பது என்பது தொடர்பில் யாருக்கும் தெளிவான நிலைப்பாடொன்று இல்லாமல் தடுமாறியபோது மிகவும் தூரநோக்கு சிந்தனையுடன் உறுதியான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு எனது கல்முனை புதிய நகர அபிவிருத்தி இலக்கு வழி கோலியது.
அதுதான் சாய்ந்தமருது மக்களுக்கு கரைவாகு வயல்பகுதியிலும் கல்முனை மக்களுக்கு இறைவெளிக்கண்டத்திலும் மருதமுனை மக்களுக்கு மேட்டு வட்டையிலும் வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை அரசுக்கு சமர்ப்பித்தேன்.
வயல் பகுதிகளை நிரப்பி, வீடு கட்டக்கோருவது நடக்கக்கூடிய விடயமா என்று எல்லோரும் எள்ளிநகையாடியபோது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து மாற்றுத் தெரிவுகள் எதனையும் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். ஊர் பகுதி கடந்து எங்கேயாவது வீடுகளை வழங்கினால் சரி என்ற நிலைப்பாட்டிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சிவில் சமூகத்தினரும் காரியம் பார்க்க முயன்றனர்.
அரசும் வெளியூர்களில் பொருத்தமற்ற இடங்களில் வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. எனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் வயல்பகுதியை நிரப்புவதற்கே பல கோடி ரூபா மேலதிக செலவு ஏற்படும் என்று அரசாங்கம் சொன்னது. ஆனால் விடாப்பிடியான எனது கோரிக்கையே அரசாங்கத்தை வழிக்கிக் கொண்டு வந்தது.
அன்று மூன்று சவால் நிறைந்த விடயங்களை சந்தித்தேன்.
*முதலாவது சுனாமியால் வீடு இழந்த மக்களுக்கு வீடமைப்பை ஏற்படுத்துதல்.
*இரண்டாவதாக வயல் பிரதேசத்தில் இந்த வீடமைப்பை ஏற்படுத்துதல்.
*மூன்றாவதாக இந்த மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை கருத்தில் கொண்டு மாடி வீடு திட்டத்தை இல்லாமல் செய்து தங்களது வீடுகளை தங்களாகவே திருத்தியமைத்து கொள்ளும் வகையில் தனி வீட்டுத் திட்டத்தை உருவாக்குதல்.
இந்த மூன்றும் நான் எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சவால் நிறைந்த ஒரு போராட்டமாகும்.
வீடுகளை இழந்து பாதிப்புற்ற எமது மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் கொட்டில்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதிகாரம் நிறைந்த கட்சிகளின் தலைவர்களும் முழு அமைச்சர்களும் எம் சமூகத்தில் இருந்தபோதிலும் அம்மக்களுக்கான எந்தவித திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை.
இவ்வாறு நீண்ட இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் 2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து உயர் கல்வி பிரதி அமைச்சர் அந்தஸ்து கிட்டியது. அப்போது பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளில் கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தில் முதன்மையானதாக கல்முனை மருதமுனை மற்றும் சாய்ந்தமருதுக்கான தனியான வீட்டுத் திட்டத்தை வயல் பிரதேசத்தில் அமைப்பது என்பது முதன்மை பெற்றிருந்தது.
அத்தோடு விவசாயிகளுக்கான நீர்ப்பாசனத் திட்டம், கைத்தொழில் பேட்டைகள், வைத்திய பீடம் தொழிநுட்ப கல்லூரி, மீனவர்களுக்காக இறங்குதுறை, இளைஞர்களுக்கான உள்ளக விளையாட்டரங்கு மற்றும் இளைஞர் பயிற்சி நிலையம் போன்ற பல விடயங்களை மக்களுக்கான கோரிக்கைகளாக முன்வைத்தேன்.
அந்தவகையில் இதன் முதல் கட்டமாக அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை அமைக்க முன்வந்தபோது, இதனை எங்கு உருவாக்குவது என்கிற மிகப்பெரும் வாதப்பிரதிவாதங்கள் பல தரப்பினர் மத்தியிலும் காணப்பட்டது. மஜீது புரத்தில் உருவாக்குவதா அல்லது மல்வத்தையில் உருவாக்குவதா அல்லது அட்டப்பளத்தில் வௌவ்வால் ஓடை எனும் பிரதேசத்தில் உருவாக்குவதா என்பது குறித்தே பலரும் சிந்திக்கத் தொடங்கினர். அவ்வாறு இருக்கையில் கல்முனை மக்களுக்கு ஏற்கனவே அந்த மக்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாத மாடி வீட்டு திட்டங்களை உருவாக்கியும் இருந்தனர்.
ஆனால் சாய்ந்தமருது மக்களுக்கான வீட்டுத்திட்டம் நீண்ட இழுபறிப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் கரைவாகு வயல் பிரதேசத்தினை மூடி, அங்கு வீட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தேன். அதுபோன்றே கல்முனையிலும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிய போதிலும் ஒரு சில அரசியல் வாதிகளின் முரட்டு பிடிவாதத்தினால் அது கைகூடாமல் போனமை துரதிஷ்டமாகும்.
இருக்கிற நிலத்தில் வீடு கட்டுவதைத் தான் அரசாங்கம் யோசிக்கிறது. வீடுகட்ட உரிய நிலத்தை இனம் கண்டுகொள்வதே பெரியதொரு சவாலாக இருக்கின்ற சூழ்நிலையில், தனியாருக்குச் சொந்தமான வயல் காணியை சுவீகரித்து அதனை நிரப்ப வேண்டும். இந்த செலவினத்தை ஏற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்கிறது. மறுபுறம் அன்றைய காலகட்டத்தில் வயல் பிரதேசத்தை மூடுவது என்பது ஒரு சாத்தியமற்ற ஒரு விடயம் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த காலகட்டமாகும்.
வயல் பிரதேசத்தை மூட வேண்டும், அங்குதான் தமது மக்களுக்கான வீட்டுத்திட்டம் அமைய வேண்டும் என்று பொது மக்களோ பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது பள்ளிவாசல் தரப்பினரோ யாருமே கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. மஜீது புரத்திலோ இஸ்மாயில் புரத்திலோ வௌவ்வால் ஓடையிலோ எங்காவது வீடுகளைத் தாருங்கள் என்ற அழுகுரலே ஒலித்தது.
இவ்வாறான பின்புலததில் தனது நீண்ட நாள் கனவான கல்முனை புதிய நகரத்திட்டத்திற்கும் சேர்த்து 500 ஏக்கர் காணியை சுவீகரித்து, நிரப்புவதற்கான அனுமதியைக் கோரி அதில் கரைவாகு பிரதேசத்தின் 100 ஏக்கர் காணியை சுவீகரித்து, மூடுவதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது. முதற்கட்டமாக அதில் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான ஏற்பாடு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.
50 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டு நிரப்பப்பட்டு, அங்கு வீட்டுத்திட்டம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. இங்குதான் அடுத்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது.
தனி வீட்டுத் திட்டத்திற்கான போராட்டம், பஸீலுடன் முறுகல், முஸ்லீம் அமைச்சர்களின் இரட்டை நிலை, அமைச்சரவை கூட்டம், மகிந்தவின் அதிரடி அடுத்த பதிவில் தொடரும்......!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -