இது தொடர்பாக விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டத்தை மதித்து ஒழுக்கமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் அதேபோன்று ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்குதல் முழு உலகையும் அச்சுறுத்தி உள்ளது. அதே போன்று எமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எமது பிரதேசத்தில் இது வராமல் இருப்பதற்கு நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டிய சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று எமது நாட்டின் சுகாதாரத்துறை ஊழியர்கள், வைத்தியர்கள் அதேபோன்று முப்படையினரும் எமது நாட்டை பாதுகாக்கின்ற விடயத்தில் முழுமையாக தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியுள்ளனர், இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எங்களுடைய தார்மீக கடமையாகும்.
நேற்றைய தினம் பொலிசாரின் ரோந்து நடவடிக்கையின்போது சாய்ந்தமருது கல்முனை பிரதேசங்களில் தகுந்த காரணங்கள் இன்றி அவசியம் இல்லாமல் வெளியே சுற்றி திரிந்த பல இளைஞர்கள் கைதாகி இருப்பதாக அறிய முடிகின்றது. எனவே இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் பொறுப்புகளை உணர்ந்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அதேபோன்று வெளி ஊர்களுக்கு அவசியம் கருதி செல்பவர்கள் தங்களை உரிய முறைப்படி பதிவு செய்து கொண்டு சுகாதார சட்ட கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
