பூச்சி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாவனெல்லா தொழில்நுட்ப பயிற்சி மைய (MCTT) நிறுவனம் நேற்று (ஏப்ரல் 19ஆம் திகதி) மாவனல்லை ஆதார வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், மற்றும் MOH அலுவலகம் என்பவற்றுக்கு மொத்தம் 600 முகப் பாதுகாப்புக் கவசங்களை அன்பளிப்பாக வழங்கியது.
இந்தப் பாதுகாப்பு கவசங்கள் இன்சைட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இத்தகைய கவசங்களை உலகளாவிய ரீதியில் சுகாதாரத்துறை பணியாளர்களும் ஏனைய கள உத்தியோகத்தர்களும் COVID- 19 இலிருந்து தற்பாதுகாப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸைட் நிறுவனத்தின் ட்ரஸ்டீகளில் ஒருவரான எம்.எம்.எம். ஹசன் இன்ஸைட் நிறுவனத்தின் போசகர்களான விஷேட மருத்துவ நிபுணர் டாக்டர் ஸுல்பி மரிக்கார் மற்றும் MCTT இன் தலைவர் எம்.எச்.எம். அஸாத் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
COVID- 19க்கு எதிரான தமது போராட்டத்தில் சுகாதாரத் துறை ஊழியர்கள் தமக்கும் நோய் தொற்றி விடலாம் எனும் அச்சத்துக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகிறார்கள். மறுபக்கம் முப்படையினர், பொலிஸார், அரச நிர்வாகத்துறை ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைத் துறை ஊழியர்கள் தமது ஆரோக்கியத்திற்கான அச்சுறுத்தலையும் கவனத்தில் கொள்ளாது தன்னலம் பாராது இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்தத் தன்னலமற்ற சேவைகளை மதிக்கும் வகையிலேயே இந்த பாதுகாப்புக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.