கொரோனா தாக்கம் உலகின் மொத்த வல்லரசுகளையும் ஆட்டம்காணச் செய்திருப்பதுடன் பொருளாதாரத்தில் பாரிய சரிவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவின் இறப்பை விட பசியால் இறப்பு விகிதம் அதிகரிக்குமோ என்ற அச்சமும் தற்போது மேலெழுந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் இவ்விடயத்தை அதிக கரிசணை கொண்டு பார்க்கவில்லையாயினும் பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதை மறுக்க முடியாது. இருந்தபோதும் நாட்டு மக்களின் அசிரத்தையான விடயங்களை இந்த துறையில் பங்களிப்பு செய்துவரும் சுகாதாரத் துறையினரும் பாதுகாப்பு பிரிவினரும் மிகுந்த வேதனையுடன் வெளிப்படையாக கூறுவதையும் அவதானிக்கின்றோம்.
பொருளாதார ரீதியாக நளிவுற்றிருக்கும் மக்களின் துயர் துடைக்க சமூகத்தில் இருக்கும் பலதரப்பட்டவர்களும் தமது இயலுமைகளுக்கு உட்பட்ட வகையில் தமது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். கட்சி பேதங்களுக்கு அப்பால் அரசியல் பிரமுகர்களும் தத்தமது பிரதேசங்களில் இயலுமானவற்றை செய்து அந்த மக்களின் துயரங்களில் பங்கேற்கின்றனர்.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும உணவு சமைக்கும் ஒரு புகைப்படத்துடன் ரவூப் ஹக்கீம் எங்கே என்ற கேள்வியோடு வீராவசனங்கள் பேசப்படுகின்றன. 2000ஆம் ஆண்டு உடதலவின்னை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் நிதியத்திற்கு ரவூப் ஹக்கீமிடம் பத்தாயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கிய முபாரக் மௌலவியின் புகைப்படத்துடன் வசைபாடுபாடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலர் இவரைக் காணவில்லை என்றும் ஏதேனும் நன்கொடை கொடுத்துள்ளாரா என்றும் கேள்வியெழுப்புகின்றனர்.
அண்மையில் பிரதமர் கூட்டிய கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தில் கலந்துகொண்டு, பாராளுமன்றத்தை கூட்டி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் மக்களின் கஷ்டங்களை தீர்க்க ஏதாவது செய்வோம் என்ற ரவூப் ஹக்கீமின் அழைப்பை அரச தரப்பு உதாசீனம் செய்தது. ரவூப் ஹக்கீம் இனவாதத்தை தூண்டுவதாக அதிமேதாவிகள் இப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்த பேரிடர் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இதனால் மக்கள் படும் அசௌகரியங்கள் சொல்லில் அடங்காதவை. நான் உட்பட எல்லோருமே இயல்பு வாழ்க்கையில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை.
ஊடரங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோட்டாபய, மஹிந்த, ரணில், சஜீத் ஏன் ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா எவ்வளவு கொடுத்தார்கள் என்று யாரும் கேள்வியெழுப்பவில்லை. இப்படியான கேள்விகளை எழுப்புபவர்கள், ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியின் தலைவர் என்ற வகையில் ஆர்வத்துடன் எழுப்பப்படும் கேள்வியாக இதனை எடுத்துக்கொள்ளவும் முடியாதுள்ளது.
ரவூப் ஹக்கீம் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெயர் சொல்லக்கூடிய செல்வந்தர்களில் ஒருவர் என்பதை எதிரிகளும் மறுக்கமாட்டார்கள். அவரின் உறவினர்கள் அரசியல் மூலம் சம்பாதித்துள்ளார்கள் என்பதை என்னால் ஏற்க முடியாதுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அம்பாறை தொடக்கம் திகன, கட்டுகஸ்தோட்டை வரை ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில், மக்களோடு மக்களாக நின்று போராடி அவர்களின் நிலைமையை பாராளுமன்றத்திலும், சர்வதேசத்திலும் வெளிப்படுத்திய சேவைக்கு நிகராக வேறு யாரும் எதுவும் செய்யவில்லை.
மினுவாங்கொடை, புத்தளம், குருநாகல் என்று தொடங்கிய இனவாத வன்முறையில்கூட ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு காத்திரமானது. விஞ்ஞான ரீதியாக தகவல்களை திரட்டி பகுப்பாய்வு செய்து அதனை நிறுவுவதில் வேறெந்த அரசியல்வாதியும் செய்யாத பங்களிப்பை அவர் செய்து வந்திருக்கிறார்.
மஹிந்த அரசாங்கத்திலும், நீதி அமைச்சராக இருந்துகொண்டு இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கமடைகிறேன் என்று விமர்சிக்கும் தைரியம் அவருக்கு மாத்திரமே இருந்திருக்கிறது. எந்தவொரு அரசாங்கத்தில் அவர் அமைச்சராக இருந்தாலும் தன்னால் முடியுமானவற்றை சமூகத்திற்கு செய்திருக்கிறார். அந்த அரசாங்கத்துக்கும் விசுவாசமாக உழைத்திருக்கிறார்.
நான் அவரில் கண்ட குறை என்னவென்றால், தான் செய்த வேலைகளுக்கு ஏனையோர் போல் அவசரமாக தலையை நுழைத்து பெயர் போட்டுக் கொள்ளமாட்டார். இது அரசியலுக்கு பொருத்தமற்றதோ தெரியாது. இதனால்தான் இவர் அதிகம் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பையோ அதனால் ஏற்பட்ட ஏற்படப்போகும் இழப்பையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நானறிந்த வகையில் வைத்தியசாலைகளுக்கு அவசியம் தேவைப்படும் சில பொருட்களை தனது சொந்தப் பணத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஈடுபாடு கொண்டுள்ளார். இப்போது அதனை செய்வதுதான் பிரயோசனமானதும் கூட. எங்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் மற்ற சமூகத்திற்கு ஏற்படவும் அது வழிவகுக்கும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முழு நாட்டுக்கும் நிவாரணம் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பார் என்று எதிர்பார்ப்பது அறிவுடமையாகும். அதேபோல் இந்த இக்கட்டான காலத்தில் அரசியல் ரீதியாக அவரை பழிவாங்க நினைத்து கதைகளை கட்டிவிடுவதும் ஆரோக்கியமானதல்ல.
கொரோனா ஆபாயத்தினால் வல்லரசு நாடுகளே ஆட்டம்கண்டு, செய்வதறியாது திகைத்துநிற்கும் நிலையில் ஒரு சிறு கட்சியின் தலைவர் கப்பல்களில் உணவு மூட்டைகளை கொண்டு வந்து தருவார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கெல்லாம் வாழும் தனது சமூகத்தினர் மீதான அக்கறையுடனும், கவலையுடனுமே இந்த நிமிடம் வரை அவர் இருப்பார் என்பதை அவருடன் ஐந்து வருடங்கள் அருகில் இருந்தவன் என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும்.
பாராளுமன்றத்தில் தமிழில் மக்களை உசுப்பேற்றி பேசுபவர் மட்டும்தான் தலைவர் என்று சிலர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்கள் பிரதிநிதியாக தான் பாராளுமன்றத்தில் பேசுவது சம்பந்தப்பட்டவருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதற்காக மும்மொழிகளிலும் சரளமாக பேசுவது அவரின் தலைமைத்துவ பண்புகளில் ஒன்றாகும்.
அரசாங்கம் இலகுவாக நிராகரித்து விடக்கூடிய ஒரு ஆளுமையல்ல ரவூப் ஹக்கீம். அவரின் ஆலோசனையை ஏற்று, தற்போது பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகிறது. அப்படி கூட்டப்பட்டால் அவர் அங்கு பேசும் உரையாவது கட்டாயம் கேளுங்கள். இந்த ஆளுமை எங்களுக்கு வேண்டுமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
