எமது நாட்டுக்கும் நாட்டிலுள்ள மக்களுக்கும் நாம் சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவே எம்மை அரசாங்கம் நியமித்துள்ளது. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.பி.எம்.ரஜீஸ் தெரிவித்தார்.
"பாதுகாப்பான தேசம் சுபிட்சமான நாடு" எனும் கருப்பொருளில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மருத்துவ தாவரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட பதவி நிலைகளில் இருந்தாலும் நாம் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வந்த ஊழியர்கள் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். எம்மை எமது அரசு எதற்காக நியமித்துள்ளது, நாம் அரச சேவையில் இணைந்துகொண்டு எவ்வாறான சேவைகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என்று, நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட பொறுப்புக்களும், கடமைகளும் எமக்குண்டு. அதனை நினைவில் வைத்துக்கொண்டு இறைவனுக்கு அஞ்சியவர்களாக எமது சேவைகளை மக்களுக்கு வழங்கவேண்டும்.
எமது அரசாங்கம் நாம் செய்கின்ற வேலைகளுக்கு மாதாந்தம் ஊதியம் வழங்கி வருகின்றது. இவ்வாறு நாம் பெறுகின்ற பணம் மக்களின் பணமாகும். இந்த ஊதியம் எமக்கு ஹலாலான முறையில் இருக்கவேண்டும். அதற்கான சேவைகளை நாம் மக்களுக்கு வழங்கவேண்டும். எமது கடமையின்போது எமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை மிகச் சரியான முறையிலும், நேர்த்தியாகவும் நாம் செய்யவேண்டும். எமது கடமை நேரத்தின்போது செய்கின்ற தவறான விடயங்களுக்கு இந்த உலகில் யாருக்கு வேண்டுமானாலும் பதில் கூறிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் எம்மைப் படைத்த இறைவனுக்கு ஒருபோதும் சாட்டுப் போக்கு மற்றும் பொய்யான பதில்களை சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது என்றார்.
குறித்த வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்களான எஸ்.எம்.றிஷாத், பஸ்மினா அறூஸ், எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிரா ஆகியோர்கள் கலந்துகொண்டு இந்த மருத்துவத் தாவரங்களை வழங்கி வைத்தனர்.