சாய்ந்தமருது சபை போராட்டமானது ஒரு ஊரின் தேவையை முன்னிறுத்தி பள்ளிவாயல் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தூய்மையான போராட்டமாகும். இப்போது அந்த போராட்டம், அதன் தூய்மையான வடிவத்திலிருந்து மாறுபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் இவ்வணியினரின் செயற்பாடுகள் பாரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வந்தன. அதில் அதாவுல்லாஹ் அணியினரோடு இவ்வணியினர் தொடர்பை பேணுவதாகவும், மாகாண, பாராளுமன்ற தேர்தல்களில் இணைந்து செயற்படும் நோக்கிலேயே, அந்த தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்திருந்தமை அனைவரும் அறிந்ததே! இப்போது அதனை உண்மைப்படுத்தும் விதமாக தோடம்பழ அணியினர் தங்களது செயற்பாடுகளை அமைத்துள்ளனர்.
ஒரு பள்ளிவாயல் தலைமையிலான போராட்டம், எவர் எக்கேடு கெட்டுப் போனாலும் பறவாயில்லை, தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலிருப்பது மிகவும் கவலையானது. தோடம்பழ அணியினர் இத் தேர்தலில் கோத்தாவை ஆதரித்தது, எந்த வகையிலும் சமூகத்தை பாதிக்காதென்ற அடிப்படையில் நியாயங்களை முன் வைக்காது, கோத்தா அணியினர் தங்களுக்கு சபை தர வாக்குறுதியளித்துள்ளதாகவும், ஹரீஸை எதிர்க்க வேண்டுமென்பதால் ஆதரிக்கின்றோம் என்றது போன்ற நியாயங்களையே முன்வைத்து வருகின்றனர்.
சாய்ந்தமருது சபைக்கு வாக்குறுதி வழங்காத அரசியல்வாதிகள் யாரும் இருக்க முடியாதெனலாம். அந்தளவு வாக்குறுதிகள் நிரம்பி வழிகின்றன. அவ்வாறிருக்கையில், எவ்வாறு கோத்தாவின் வாக்குறுதியை சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியினர் நம்புகின்றனர். அது மாத்திரமன்றி, எல்லோரும் கூறியது போன்றே மஹிந்தவும் நான்காக பிரித்து தருவதாக கூறியுள்ளார். நான்கு பிரிப்பு சாத்தியமானதா என்பதை சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியினர் அறியாதவர்களாகவா உள்ளனர்.
பள்ளிவாயல் அணியினர் தற்போது எடுத்துள்ள முடிவானது எவ்வகையில் சிந்தித்தாலும் ஹரீஸுக்கு சாதகமானதே! பெருமளவான இலங்கை முஸ்லிம்களின் மனங்களில் கோத்தா மீதான அச்ச உணர்வுள்ளமை மறுதலிக்க இயலாத உண்மை. இவ்வுணர்வை சாய்ந்தமருது பள்ளி அணியினரால் அவ்வளவு இலகுவில் மாற்ற இயலாது. இதனை சாதகமாக பயன்படுத்திய மு.கா அணியினர், எங்கு அமைச்சர் ஹக்கீமுக்கு கல் வீசப்பட்டு கூச்சலிடப்பட்டதோ, அவ்விடத்திலேயே பெருந்திரளான மக்கள் பங்களிப்புடனும், பெரும் ஆரவாரங்களுடனும் கூட்டம் நடாத்தி சென்றுள்ளனர். அவ்விடத்தில் ஹரீஸும் தைரியமாக பேசிச் சென்றுள்ளார். யாரை எதிர்க்க வேண்டுமென சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியினர் இம் முடிவை எடுத்ததாக கூறுகிறார்களோ, யாரை தங்களது சபை மலர்வதற்கான பிரதான எதிரியாக கருதுகிறார்களோ, அவரே ( ஹரீஸ் ) சாய்ந்தமருதுக்குள் நுழைந்து, தைரியமாக பேசும் நிலையை, சாய்ந்தமருது பள்ளியின் கோத்தாவை ஆதரிக்கும் முடிவு உருவாக்கியுள்ளது. இதனை ஆழமாக சிந்தித்தால் கூட, பள்ளிவாயலின் கோத்தாவை ஆதரிக்கும் முடிவு எவ்வளவு தவறானதென்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.
மு.மா.ச உறுப்பினர் ஜெமீல் மு.காவில் இணைந்து கொள்வதற்கான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். சாய்ந்தமருது பள்ளியின் தவறான இம் முடிவை பயன்படுத்தி, அவர்களது வியூகங்களை வெற்றிகொள்ள முடியும் என்ற நோக்கிலேயே, இச் சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுத்து, மு.காவினூடாக தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார். சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியின் தவறான இம் முடிவு, சாய்ந்தமருதுக்கு கட்சி அரசியல் இலகுவாக நுழைய வழிகோலியுள்ளது.
கோத்தா வெற்றி பெற்றாலாவது பள்ளிவாயல் அணியின் முடிவு சரியாகிவிடுமா என்றால் இல்லை என்பதே யாதார்த்தமான பதில். கோத்தா வெற்றிபெறுவாராக இருந்தால், அவ்வணியில் ஹரீஸ் இணைந்துகொள்வாரென்ற கதையாடல்கள் இன்னும் சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியினரின் காதுகளை எட்டவில்லையா? இணைந்துகொள்வாரோ, இல்லையோ, அங்கு ஹரீஸுக்கு பெருமிடமுள்ளதென்பது வெளிப்படையான உண்மை. எனவோ, கோத்தாவை வெற்றிபெறச் செய்வதென்பது, சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியினர், தாங்கள் யாரை, தங்களது சபைக்கான பிரதான எதிரியாக கருதுகிறார்களோ ( ஹரீஸ் ), அவரை பலப்படுத்துவதாகவே அமையும்.
எனவே, எவ் வகையில் நோக்கினாலும் சாய்ந்தமருது பள்ளிவாயல் அணியினர் எடுத்த கோத்தாவை ஆதரிக்கும் முடிவானது தவறானதென்பதை அறிந்துகொள்ளலாம். இன்னும் காலம் கடந்து செல்லவில்லை. தற்போதும் அவர்கள் எடுத்த முடிவை மீள் பரிசீலனை செய்துகொள்ள முடியும். அல்லாது போனால் மிகப் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடுமென்பது ஐயமேதுமில்லை.