ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், நாட்டின் சில இடங்களிலுள்ள வீதிகளின் தமிழ் மொழி மூல பெயர்ப்பலகைகள் மீளவும் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், ஒரு வீதியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் அகற்றப்பட்டுள்ளன.
வத்தளை கெரவலப்பிட்டிய வீதி மற்றும் பாணந்துறை சுசந்த மாவத்தை ஆகிய இடங்களிலுள்ள பெயர்ப்பலகைகளிலேயே தமிழ் மொழி மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
"நாட்டில் வீதிப் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற வேண்டும்" என்ற நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைக்கும் வகையில் இந்தச் செயற்பாடு அமைவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
வத்தளை - கெரவலப்பிட்டிய வீதியின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழி நீக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகி 9 மணி நேரத்தின் பின் அது மீளவும் பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாணந்துறை சுசந்த மாவத்தை வீதியின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழி மீது வர்ணம் பூசப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தமிழ் மொழியில் வீதியின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை பாணந்துறை நகர சபை முன்னெடுத்தது.
இதேவேளை, வீதிகளின் பெயர்ப்பலகைகளில் காணப்படும் தமிழ் மொழியை நீக்கும் பணியை அரசியல் குழு ஒன்று முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
